தோனி என்றால் நம்பிக்கை, மரியாதை- ரத்தினச் சுருக்கமாகக் கூறிய விராட் கோலி

தோனி - விராட் கோலி

தோனியின் பயிலரங்கில் பயின்று இந்திய அணியை பெரிய அளவில் வழிநடத்திச் சென்று டெஸ்ட் கேப்டன்சியில் போதாமைகள் நிரம்பிய  தோனியையும் கடந்து நிற்கும் விராட் கோலி இன்ஸ்டாகிராம் கேள்வி பதில் நிகழ்ச்சியில் தோனியைப் பற்றி ரத்தினச் சுருக்கமாக 2 வார்த்தைகளில் புகழ்ந்துள்ளார்.

  • Share this:
    அயல்நாட்டுத் தொடர்களில் தோனி தலைமை கேப்டன்சி சர்வதேச கிரிக்கெட் தரத்துக்கு இல்லாதது பலமுறை நிபுணர்களாலும், முன்னாள் கிரிக்கெட் பண்டிதர்களாலும் நிரூபிக்கப்பட்ட ஒன்று. 2014-ல் ஆஸ்திரேலியாவில் பாதித் தொடரிலேயே கேப்டன்சியைத் துறந்தார் தோனி. அப்போதே புரிந்தது டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு கேப்டன்சி வரவில்லை என்பது. ஆனால் கோலி 2018 ஆஸ்திரேலியா தொடரில் துணைக்கண்டத்துக்கே பெருமை சேர்க்கும் டெஸ்ட் தொடரை அந்த மண்ணில் முதல் முறையாக வென்று சாதித்தார்.

    எனவே தோனியை குரு என்று கோலி அழைத்தாலும் குருவை மிஞ்சிய சிஷ்யனாகவே கோலி தன் பேட்டிங்கிலும் சரி, பினிஷிங்கிலும் சரி, டெஸ்ட், ஒருநாள், டி20 கேப்டன்சியிலும் சரி தோனியை விஞ்சி நிற்கிறார் என்றே கூற வேண்டும்.

    இந்நிலையில் இன்ஸ்டாகிராம் கேள்வி பதில் நிகழ்ச்சியில் தனக்கு மிகவும் பிடித்த ஓய்வு பெற்ற பவுலர் வாசிம் அக்ரம் என்றார்.

    இதில் உடல் ஃபிட் ஆக இருக்க என்னென்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, “தினமும் அதிகமான காய்கறிகள், 2 முட்டை, 2 காபி, பருப்பு, கீரை வகைகள் சாப்பிடுவேன், தோசையும் பிடிக்கு ஆனால் எல்லாம் அளவுதான்” என்றார்.

    பாராட்டுகள், விமர்சனங்களைப் பொறுத்தவரை உண்மையான பாராட்டுகள் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வேன்.

    ஓய்வு நேரங்களில் ரிலாக்சாக இருப்பேன், அனுஷ்காவுடன் சேர்ந்து சில டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன்.

    இக்கட்டான நேரத்தில் வழக்கமான வேலைகளைச் செய்து அதை திசைத்திருப்புவேன். முடிவுகள் குறித்து கவலைப்படாமல் என் வேலையை செய்து முடிப்பேன்.

    கேப்டன் கூல் தோனி பற்றி 2 வார்த்தைகளில் கூற வேண்டுமெனில் ‘நம்பிக்கை, மரியாதை’ என்று கூறுவேன்.

    பெங்களூரு அணியில் வேடிக்கையான வீரர் சகால், திறமை என்றால் டிவில்லியர்ஸ், அமைதி என்றால் கைல் ஜேமிசன்.

    இவ்வாறு கூறினார் விராட் கோலி.

    இப்போது மும்பையில் இந்திய அணியுடன் குவாரண்டைனில் இருக்கிறார் விராட் கோலி, இங்கிலாந்தில் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தன்னை மனதளவில் தயார் படுத்தி வருகிறார். அடுத்ததாக கடினமான இங்கிலாந்து தொடரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published: