Kieron Pollard|CSKvsMI| தொட்டாலே சிக்ஸ்; பொலார்டின் அசுரத்தனமான அடி இடி போல் இறங்கியது: தோனி, சிஎஸ்கே அதிர்ச்சி

அதிரடி ஆட்ட நாயகன் பொலார்ட்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் 27வது போட்டி ரன் விருந்தாக, சிக்சர்கள் விருந்தாக அமைந்தது, சிஎஸ்கேவில் மொயின் அலி, டுபிளெசிஸ், ராயுடு என்றால் மும்பை அணியில் 34 பந்துகளில் 6 பவுண்டரிகள் 8 மகா சிக்சர்களுடன் பொலார்ட் எடுத்த 87 ரன்கள் சிஎஸ்கேவின் தொடர் வெற்றிக்கு ஆப்பு வைத்தது.

  • Share this:
டெல்லி மைதானத்தில் எச்சில் துப்பினாலே பந்து சிக்ஸுக்குப் போகும் அளவுக்கு மிகச்சிறிய மைதானம், அதிலும் எல்லை கோட்டை முன்னால் கொண்டு வந்தால், தொட்டதெல்லாம் சிக்ஸ்தான்!

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் திடீர் எழுச்சி கண்ட ராயுடு, சில மோசமான பவுலிங்கைப் பயன்படுத்தி 27 பந்துகளில் 4 பவுண்டரி 7 சிக்சர்களூடன் 72 ரன்கள் விளாசி நாட் அவுட்டாகத் திகழ சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு கட்டத்தில் பொலார்ட் பந்து வீச்சிலும் அசத்த டுபிளெசிஸ், ரெய்னா மீண்டும் தொடர்ச்சியாக ஆட்டமிழக்க 12 ஓவர்களில் 116/4 என்று 160 ரன்களுக்குத் தேறுமா என்று இருந்த நிலையை அப்படியே புரட்டி போட்டார் ராயுடு. 190 ரன்கள் வந்தால் பெரிய விஷயம் என்று நினைத்த தருணத்தில் 218 ரன்களை எட்டியது சிஎஸ்கே.

தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கட்டத்தில் 9.4 ஓவர்களில் 81/3 என்று திண்றியது, ஆனால் பொலார்ட் (87 நாட் அவுட்), குருணால் பாண்டியா (23 பந்தில் 32) மும்பையைக் கரைசேர்க்க 219/6 என்று சிஎஸ்கேவின் தொடர் வெற்றிகளுக்கு ஆப்பு வைத்தது. மொயின் அலி ஒரு ஓவர் 1 ரன் ஒரு விக்கெட். ஆனால் அவருக்கு பவுலிங் கொடுக்காத தோனியின் விநோதம், லுங்கி இங்கிடியைப் போட்டு சாத்தி எடுத்தனர் 4 ஓவரில் 62, ஷர்துல் 4 ஓவரில் 56, ஜடேஜா 3 ஓவர் 29, சாஹர் முதலிலேயே 4 ஓவர்களை முடித்ததால் பொலார்ட் மட்டை எனும் உலக்கையிலிருந்து தப்பினார். சாஹர் நன்றாகவே வீசினார். சாம் கரன் 4 -34- 3 என்று அசத்தினார்.

219 ரன்கள் இலக்கை எதிர்த்து ரோகித் சர்மா, குவிண்டன் டி காக் சேர்ந்து 7.4 ஓவர்களில் 71 ரன்கள் என்ற நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அதன் பிறகு பொலார்டின் காட்டடிதான், கொஞ்சம் குருணால், ஹர்திக் பாண்டியா சகோதரர்களின் பேட்டிங்கும் உதவியது, இதனையடுத்து கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. லுங்கி இங்கிடி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் சிங்கிள் வேண்டாம் என்று பொலார்ட் மறுக்கவே பின்னால் தோனியின் வயிற்றில் மோட்டார் ஓடத்தொடங்கியது. அடுத்த பந்து துல்லிய யார்க்கர், ஆனால் பொலார்டின் தீவிரத்தினால் மட்டையில் பட்டு கால்களுக்கு இடையில் புகுந்து பவுண்டரிக்குப் பறந்தது அதன் பிறகு இங்கிடி மிக மோசமாக 3 புல்டாஸ்களை வீசினார். நடப்பு ஐபிஎல் தொடரில் கடைசி ஓவரில் புல்டாஸ்களை அனைவரும் வீசுவது உஷ் கண்டுக்காதீங்கவா இல்லை உண்மையில் பந்து வழுக்குகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. இதில் பொலார்ட் ஒரு பவுண்டரி அடித்தார், 2வது புல்டாஸ் ரன் வேண்டாம் என்று விட்டு விட்டார். கடைசி 2 பந்துகளில் 8 ரன்கள் தேவை, 3வது புல்டாஸ் சிக்சருக்குப் பறந்தது. கடைசி பந்தை இங்கிடி சரியாக கிரீசுக்கு இறக்கினார், பொலார்ட் அதையும் லாங் ஆனுக்கு விரட்டினார் இரண்டு ரன்கள் ஓடி ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிக ஸ்கோர் சேசிங்கை சாதித்தார்.

ஆகவே 116/4 என்ற நிலைக்கு சிஎஸ்கேவைக் கொண்டு வந்ததும் பொலார்ட்தான், 81/3 என்று சரிந்த மும்பையை வெற்றிக்கு இட்டுச் சென்றதும் பொலார்ட்தான், இதில் 17 பந்துகளில் பொலார்ட் அரைசதம் கண்டார், முன்னதாக ராயுடு, பும்ராவையும் பதம் பார்த்தார், அவர் 20 பந்துகளில் அரைசதம் கண்டார்.

கடைசி 10 ஓவர்களில் 138 ரன்கள் தேவை என்ற வாய்ப்பேயில்லாத சூழ்நிலையில் இருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 13வது ஓவரில் ஜடேஜாவை 3 சிக்சர்கள் விளாசினார் பொலார்ட். பிறகு லுங்கி இங்கிடியை அடுத்த ஓவரில் மேலும் 2 சிக்சர்கள். 14 ஓவர் முடிவில் மும்பை 130/3 என்று இருந்தது. இதே கட்டத்தில் சூப்பர் கிங்ஸ் 126/4 என்று இருந்தது. குருணால் முதலில் 17 பந்துகளில் 17 என்று உறுதுணையாக ஆட லுங்கி இங்கிடியை இவரும் 16வ்து ஓவரில் 2 பவுண்டரிகள் 1 சிக்சர்விளாசினார். சாம் கரண் குருணால் பாண்டியாவை வெளியேற்றிய ஓவரில் 2 ரன்களையே கொடுத்தார். அப்போது கடைசி 3 ஒவர்களில் 48 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது மும்பை.

18வது ஓவரில் டுபிளெசி, பொலார்டுக்கு கேட்சை விட்டார். அந்த ஓவரில் 17 ரன்கள் வந்தது. ஹர்திக் பாண்டியா கரனை 2 சிக்சர்கள் விளாசினார். இதே ஓவரில்தான் சாம் கரன், ஹர்திக், ஜேம்ஸ் நீஷம் இருவரையும் வீழ்த்தினார். அதன் பிறகு பொலார்ட், லுங்கி இங்கிடி போட்டியில் பொலார்ட் வென்றார். தோனி, சிஎஸ்கே அதிர்ச்சியடைந்தது. ஆட்ட நாயகன் கெய்ரன் பொலார்ட்.
Published by:Muthukumar
First published: