ஐபிஎல் ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்படுகிறோம் என்பதற்காக பந்துகள் கூடுதலாக ஸ்விங் ஆகுமா என்ன?- பாட் கமின்ஸ் குத்தல்

பாட் கமின்ஸ்.

கடந்த ஐபிஎல் தொடரில் பாட் கமின்ஸ் 14 போட்டிகளில் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சிக்கன விகிதம் 7.86 என்று ஓரளவுக்கு டீசண்டானதுதான். ஆனால் கொல்கத்தா பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை, இந்த முறை அதிகம் பாட் கமின்ஸிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்.

 • Share this:
  ஐபிஎல் ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்படுவதால் அது ஒரு வித்தியாசமான அழுத்தத்தைக் கொடுக்கிறது. வீரர்கள் இதனால் உண்டாகும் எதிர்பார்ப்புகளை இன்னும் நன்றாகக் கையாளக் கற்றுக் கொள்வது அவசியம் என்று ஆஸ்திரேலிய வேகப்புயல் பாட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பாட் கமின்ஸை ரூ.15.5 கோடிக்கு வாங்கியது. இந்த பிரைஸ் டேகில் அணிக்காக ஆடுவதன் அழுத்தம் பற்றி பாட் கமின்ஸ் கூறும்போது, “தொழில்பூர்வமான கிரிக்கெட்டை எங்கு ஆடினாலும் பெரிய அளவில் அழுத்தம் இருக்கவே செய்யும்.

  நன்றாக ஆடினால், மீண்டும் மீண்டும் அப்படியே ஆட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். மோசமாக ஆடினார்ல் நமக்கு பேசப்பட்ட விலை தலைதூக்கும். ஏலம் இன்னொரு நெருக்கடியைக் கொடுக்கிறது. இதனை நாம் நன்றாகக் கையாள வேண்டும்.

  ஏனெனில் நாம் அதிக விலை கொடுத்து அணி உரிமையாளரால் வாங்கப்பட்டுள்ளோம் என்பதற்காக பந்துகள் திடீரென அதிகம் ஸ்விங் ஆகப்போவதில்லை. அல்லது பிட்ச் கிரீன் டாப் ஆக மாறிவிடப் போவதில்லை. அல்லது பவுண்டரிகள் பெரிதாகப் போவதில்லை. அதே விளையாட்டு களம்தான், ஆகவே நான் எதை நன்றாகச் செய்வேனோ அதில்தான் கவனம் செலுத்த முடியும்.

  இதில் கவனம் செலுத்தினால் கேகேஆர் அணிக்குத் தேவையான ஆட்டத்தை என்னால் ஆட முடியும்.

  கோச் பிரண்டென் மெக்கல்லம் என்னை ஆதரிக்கிறார், அது என் அதிர்ஷ்டம். அவருக்கு எதிராகவும் ஆடியுள்ளேன். எனவே அப்படியிருந்தும் அவர் என் மேல் பரிவு வைத்திருப்பது பெரிய பாக்கியம்தான். இங்கு வந்து அவருடன் சேர்ந்து பணியாற்ற முடிவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார் பாட் கமின்ஸ்.

  கடந்த ஐபிஎல் தொடரில் பாட் கமின்ஸ் 14 போட்டிகளில் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சிக்கன விகிதம் 7.86 என்று ஓரளவுக்கு டீசண்டானதுதான். ஆனால் கொல்கத்தா பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை, இந்த முறை அதிகம் பாட் கமின்ஸிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்.

  தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற வாய்சவடால் கதாபாத்திரத்தில் நடித்த நாகேஷ், நாதஸ்வரக் கலைஞர் சிவாஜியை இழிவு படுத்துவாரே ‘காசு வாங்கலையா? வாங்கினியோனோ?’ வா வா சட்டையைக் கழட்டிட்டு வாசி’ன்னு இழிவுபடுத்துவார். ஐபிஎல் கிரிக்கெட்டும் அணி நிர்வாகமும் அணி உரிமையாளர்களும் ஒருவேளை தில்லானா மோகனாம்பாள் வைத்தியோ என்று நம்மை யோசிக்க வைக்கிறது பாட் கமின்ஸின் இந்தப் பேட்டி.
  Published by:Muthukumar
  First published: