4-வது டெஸ்ட்டிலிருந்து மட்டுமல்ல ஒருநாள் தொடரிலிருந்தும் விலகல்: பும்ரா திரும்ப நீண்ட நாட்களாகும்

பும்ரா (கோப்பு படம்)

இதற்கிடையே தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி யோ-யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

 • Share this:
  கடந்த சனியன்று இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகினார், தற்போது ஒருநாள் தொடரிலிருந்தும் சொந்தக் காரணங்களுக்காக விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  இந்திய அணிக்கு பும்ரா திரும்ப நீண்ட நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது, காரணம் என்னவென்று தெரியவில்லை. ஏற்கெனவே இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்து பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் கிரிக்பஸ் இணையதளச் செய்திகளின்படி ஒருநாள் தொடருக்கும் பும்ரா இருக்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது, இந்திய அணிக்குத் திரும்ப நீண்ட நாட்களாகும் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

  ஒருநாள் போட்டிகள் புனேயில் நடைபெறுகிறது, இதற்கு பார்வையாளர்களுக்குஅனுமதி இல்லை, மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அளவுக்கு அதிகமாக இருப்பதால் இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இதை விட்டால் நேரடியாக ஐபிஎல் 2021-க்குத்தான் பும்ரா திரும்புவார் என்று தெரிகிறது.

  பும்ராவின் இடத்தில் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது, சிராஜ் ஒருநாள் போட்டிகளில் தன் திறமையை நிரூபிக்கலாம், நவ்தீப் சைனி, ஏன் இஷாந்த் சர்மா கூட குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் தன் திறமைகளை மீண்டும் நிரூபிக்கலாம்.

  முதன் முதலில் உள்நாட்டில் டெஸ்ட்களில் ஆடிய பும்ராவுக்கு இங்கு ஒன்றுமேயில்லை. 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை தன் உள்நாட்டு முதல் டெஸ்ட்டில் எடுத்தார் பும்ரா. 2வது டெஸ்ட் போட்டி குழிப்பிட்ச் என்பதால் முதலிலேயே உட்கார வைக்கப்பட்டார், பந்து வீசும் போது ஆண்டர்சன் போல் குழியில் கால் சிக்கி காயமடைந்து விடக்கூடாது அல்லவா?

  பகலிரவு டெஸ்ட் என்று பெயருக்கு ஒன்றை நடத்தி பிங்க் பந்தின் எந்த ஒரு சாதகத்தையும் வேகப்பந்துக்கு வழங்காமல் சுரங்க நடைபாதை பிட்சைப் போட்டு 2 நாட்களுக்குள் போட்டி முடிந்ததால் பும்ராவுக்கும் இதில் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

  இதற்கிடையே தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி யோ-யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஐபிஎல் 2020 தொடரில் 5 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்சில் கைப்பற்றிய சாதனையாளர் வருண் பிட்னெஸ் டெஸ்ட்டில் 17.1 என்ற அடிப்படை தகுதி நிலையை எட்டவில்லை. ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் இவர் காயம் காரணமாக துரதிர்ஷ்டவசமாக ஆடாமல் போனது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: