Home /News /sports /

’ரிஷப் பண்ட்டெல்லாம் சும்மா, ஹைப், பொறுப்பற்ற கேப்டன்’

’ரிஷப் பண்ட்டெல்லாம் சும்மா, ஹைப், பொறுப்பற்ற கேப்டன்’

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

நேற்றைய ஐபிஎல் 2022 போட்டித் தொடரின் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை நசுக்கித் தூக்கிப் போட்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு பொறுப்பற்ற, முதிர்ச்சியற்ற கேப்டன் என்று ரசிகர்கள் சாடியுள்ளனர். டெல்லி அணி 159/7 என்று மடிய, அதைவிடவும் மோசமாக நாங்க என்ன சும்மாவா என்று ஆடிய பஞ்சாப் 82/7 என்று சரிந்து பிறகு ஜிதேஷின் தனிநபர் போராட்டத்தினால் 142 வரை வந்து தோல்வி அடைந்தது.

ஷர்துல் தாக்கூர் ஒரு அபாயகரமான பவுலர் அதாவது அவர் ஆடும் அணிக்கு அபாயகரமானவர், ஏனெனில் அவர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் எப்போது வேண்டுமானாலும் எதிரணிக்குத் தேவைப்படும் ரன்களைப் போட்டுக்கொடுப்பேன் என்ற ரகத்தில் வீசுகிறார். நேற்று டெல்லியில் டாப் கிளாஸ் பவுலிங் என்றால் அக்சர் படேல் 4 ஓவர் 14 ரன் 2 விக்கெட் குல்தீப் யாதவ் 3 ஓவர் 14 ரன் 2 விக்கெட்.

ரிஷப் பண்ட் பேட்டிங்கில் 3 பந்துகளைச் சந்தித்து லிவிங்ஸ்டனை ஒரு சிக்ஸ் அடித்து அடுத்த பந்து மேலேறி வந்து இன்னொரு சிக்சருக்கு முயல பந்து அவரைக்கடந்து விக்கெட் கீப்பரிடம் செல்ல ஸ்டம்ப்டு ஆனார். இதுவரை இந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் 301 ரன்கள் எடுத்துள்ளார் ரிஷப் பண்ட், ஆனால் எந்த ஒரு இன்னிங்ஸும் திருப்தி தரும் இன்னிங்ஸாக இல்லை.

5-வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த பண்ட், அவர் எதிர்கொண்ட இரண்டாவது பந்தில் ஒரு கையால் சிக்ஸர் அடித்தார். லியாம் லிவிங்ஸ்டன் அந்த 83 மீட்டர் சிக்சரைப் பார்த்து அஞ்சவில்லை, அவர் புன்னகையுடன் பதிலளித்தார், உடனடியாக பழிவாங்கினார். ரிஷப் பண்ட் ஸ்டம்ப்டு.

இதனையடுத்து ரிஷப் பண்ட்டை ரசிகர்கள் ட்விட்டரில் காய்ச்சி எடுத்தனர்:

முன்னதாக டெல்லி அணி சர்பராஸ் கானை தொடக்கத்தில் இறக்கியது, வார்னர் முதல் பந்தே அவுட் ஆகி கோல்டன் டக் ஆனார், லிவிங்ஸ்டன் தான் காரணம்.ஆனால் அதன் பிறகு மிட்செல் மார்ஷ், சர்பராஸ் கான் சடுதியில் 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் விளாசி உத்வேகமளிக்க ஸ்கோர் 5வது ஓவர் முடிவதற்குள் 50 ரன்களைக் கடந்தது.

மிட்செல் மார்ஷ் ரபாடாவை இரண்டு அற்புதமான சிக்சர்களை அவரது முதல் ஓவரிலேயே அடித்தார். சர்பராஸ் கான், பிரார் என்ற இடது கை ஸ்பின்னரை ஒரு சிக்ஸ் 2 பவுண்டரி அடித்தார், பிறகு ஒரு தில்ஷன் ரக ஸ்கூப் பவுண்டரியை அடித்து 16 பந்தில் 32 எடுத்து அர்ஷ்தீப் சிங்கின் 3 விக்கெட்டுகளில் ஒன்றானார். மிட்செல் மார்ஷ் 63, லலித் யாதவ் 24, அக்சர் படேல் 17 மற்ற எல்லோரும் வந்த வேகத்தில் நடையைக் கட்ட டெல்லி 159/6 என்று முடிந்தது.

பிட்ச் ஸ்பின்னுக்குச் சாதகமாக இருந்தது என்பதால் இந்த இலக்கு கொஞ்சம் ட்ரிக்கி இலக்குதான். பேர்ஸ்டோ (28), தவான் (19) 3.5 ஓவர்களில் 38 என்ற அதிரடி தொடக்கம் கொடுத்தனர். பேர்ஸ்டோவை நார்ட்யே வீழ்த்த ஷிகர் தவான், பனுகா ராஜபக்சேவை ஷர்துல் தாக்கூர் ஒரே ஓவரில் காலி செய்தார். அடுத்த ஓவர் 3வது பந்தில் மயங்க் அகர்வால் அக்சர் படேலிடம் பவுல்டு ஆகி டக் அவுட் ஆனார்.

ஜிதேஷ் சர்மா (44), ராகுல் சாஹர் (25) கொஞ்சம் அச்சுறுத்தினர் ஆனால் ஷர்துல் தாக்கூர் ஜிதேஷை வீழ்த்த பஞ்சாப் இன்னிங்ஸ் 142 ரன்களுக்கு முடங்கியது. ஆட்ட நாயகன் ஷர்துல் தாக்கூர். டெல்லி கேப்பிடல்ஸ் ஆர்சிபியை பின்னுக்குத் தள்ளி நல்ல நெட் ரன் விகிதத்தில் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 4ம் இடத்துக்கு முன்னேறி பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.
Published by:Muthukumar
First published:

Tags: IPL 2022, Rishabh pant

அடுத்த செய்தி