IPL 2021: ஜீரோ டூ ஹீரோ.. ஜடேஜா எனும் வில்லாதி வில்லன்.. சிக்கி சின்னாபின்னமான ஆர்.சி.பி

IPL 2021: ஜீரோ டூ ஹீரோ.. ஜடேஜா எனும் வில்லாதி வில்லன்.. சிக்கி சின்னாபின்னமான ஆர்.சி.பி

ஜடேஜா

வாஷிங்டன் சுந்தர் ஓவரில் ரன் கணக்கை தொடங்காத ஜடேஜாவின் விக்கெட்டை கிறிஸ்டியன் வீணடித்திருந்தார்.

  • Share this:
    மும்பை வான்கடேவில் மீண்டும் லோ ஸ்கோரிங் மேட்சா என ரசிகர்கள் கன்னத்தில் கை வைக்க ‘வாய்ப்பு இல்ல ராஜா’ என வெளுத்து வாங்கினார் ஜடேஜா. இந்த சீசனோட பர்பிள் கேப் ஹோல்டரான ஹர்ஷல் பட்டேலை புரட்டியெடுத்தார் ஜடேஜா. ஒரு பர்பிள் கேப் ஹோல்டர் ஓவரை இப்படியாடா அடிப்பீங்கன்னு ஆர்.சி.பி ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர். தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்றதால் ஈசலா கப் நம்தே... என வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ட்ரெயின் விட்ட ஆர்.சி.பியன்ஸ் முகங்களில் ஈ ஆடவில்லை.

    19-வது ஓவர் வரைக்கு இந்த மேட்சோட ஹீரோ யாருன்னு கேட்டிருந்தால் ஹர்ஷல் பட்டேல் என்ற பதில்தான் ரசிகர்களிடம் இருந்து வந்திருக்கும். லைன், லென்த், வெரியேஷன் என சென்னை பேட்ஸ்மேன்களை கடுமையான தொந்தரவு செய்துக்கொண்டிருந்தார் ஹர்ஷல் பட்டேல். சென்னை அணியின் முக்கியமான விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தார். கடைசி ஓவரில் ‘இஃப் யு ஆர் பேட் ஐயம் யுவர் டாட்’ என ரவுடி பேபி மோடுக்கு மாறினார் ஜடேஜா. ஒரே ஓவரில் ரசிகர்கள் மத்தியில் ஹர்ஷலை வில்லனாக மாற்றினார் ஜடேஜா. ஸ்லோ பால், கட்டர்கள் என டுப்ளிஸிஸ், ரெய்னா, அம்பத்தி ராயுடுவை சாய்த்திருந்த ஹர்ஷல் பட்டேல் ஜடேஜாவை என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பினார்.

    வாஷிங்டன் சுந்தர் ஓவரில் ரன் கணக்கை தொடங்காத ஜடேஜாவின் விக்கெட்டை கிறிஸ்டியன் வீணடித்திருந்தார். அந்தக்கேட்ச் மட்டும் புடிச்சிருந்தா மேட்சே மாறியிருக்கும். ஜடேஜாவுக்கான விலையை ஆர்.சி.பி கொடுக்க வேண்டியதாயிற்று. ஜீரோவில் அவுட்டாக வேண்டியவரை ஹீரோ ஆக்கினார் கிறிஸ்டியன். கோலியின் அனைத்து வியூகங்களும் கடைசி ஓவரில் தவிடுபொடியானது. 19-வது ஓவர் வரைக்கும் மேட்ச் ஆர்.சி.பி கையில்தான் இருந்தது. 4 விக்கெட் இழப்புக்கு சி.எஸ்.கே 154 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 15 - 19 ஓவர் வரை சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 37 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 18வது ஒவரில் ஹர்ஷல் பட்டேல் 5 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

    இதனையடுத்து கடைசி ஓவரை வீச ஹர்ஷல் பட்டேல் வந்தார். வாளை வீசுவது போல் இருந்தது ஜடேஜாவின் கடைசி ஓவர் பேட்டிங். முதல் மூன்று பந்துகளை சிக்ஸருக்கு விரட்டினார். மூன்றாவது பந்து நோபாலாக வீச அதனையும் சிக்ஸருக்கு விரட்டினார் ஜடேஜா. 25 பந்தில் அரைசதம் கடந்தார். 4-வது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார். 5-வது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர். கடைசி பந்தில் ஒரு பவுண்டரி என அந்த ஓவரில் 37 ரன்களை திரட்டினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்களை அடித்த யுனிவர்சல் பாஸ் கெயிலின் சாதனையை சமன் செய்தார். கடைசி 5 ஓவர்கள் சென்னை அணி 74 ரன்களை எடுத்தது. ஜடேஜா 28 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

    மீண்டும் பந்தை கையில் தூக்கிக்கொண்டு வந்தார். வாஷிங்டன் சுந்தரை காலி செய்து இப்போது விக்கெட் வேட்டையை தொடங்கினார். ஜடேஜாவுக்கு பந்து நன்கு திரும்பியது. அவரது வேகமும் பந்து டர்ன் ஆவதும் ஜடேஜாவுக்கு சாதகமாக அமைந்தது. அவுட்டானா ஜடேஜா பந்தில்தான் அவுட்டாவேன் என ஆர்.சி.பி ப்ளேயர்ஸ் முடிவு எடுத்தது போல் இருந்தது. மேக்ஸ்வெல் , டிவில்லியர்ஸ் இருவரையும் க்ளீன் போல்டாக்கினார். கிறிஸ்டியனை தனது அற்புதமான த்ரோவால் ரன் அவுட் செய்திருந்தார். மேட்சு ஆர்.சி.பி கைகளில் இருந்து நழுவியது. ஜடேஜா ஓன் மேன் ஷோ காட்டினார். சென்னை டேபிள் டாப்பராக அமர்ந்தது.
    Published by:Ramprasath H
    First published: