டேனியல் வெட்டோரி டூ டேவிட் வார்னர்: ஐபிஎல்-ல் பாதியில் கழற்றிவிடப்பட்ட கேப்டன்கள் ...

டேனியல் வெட்டோரி டூ டேவிட் வார்னர்: ஐபிஎல்-ல் பாதியில் கழற்றிவிடப்பட்ட கேப்டன்கள் ...

டேவிட் வார்னர்

ஐபிஎல் வரலாற்றில் இது முதல் முறையாக நடக்கும் நிகழ்வு கிடையாது. இதற்கு முன்னரே சிலர் தொடரின் பாதியில் கேப்டன் பொறுப்பில் இருந்து கழற்றி விடப்பட்டிருக்கின்றனர்.

  • Share this:
நடப்பு ஐபிஎல் சீசனில் வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ், கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னரை இன்று அதிரடியாக நீக்கியுள்ளது. அவருக்கு பதிலாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை புதிய கேப்டனாக நியமித்துள்ளது.

இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதில் ஐந்தில் தோல்வியடைந்து, ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் அந்த அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றை பற்றி அந்த அணி நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலையில் தான் கேப்டனை மாற்றியுள்ளது ஹைதராபாத் அணி. டேவிட் வார்னரும் பேட்டிங்கில் தடுமாறி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதுவரை 6 போட்டிகளில் 193 ரன்கள் எடுத்துள்ளார் வார்னர். அவரின் சராசரி 110.28% ஆக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டியில் தான் மந்தமாக பேட் செய்ததாக அவரே போட்டிக்கு பின்னர் தெரிவித்தார்.

இதனிடையே தொடரின் பாதியில் டேவிட் வார்னர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள விவகாரம் ரசிகர்களின் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. இருப்பினும் ஐபிஎல் வரலாற்றில் இது முதல் முறையாக நடக்கும் நிகழ்வு கிடையாது. இதற்கு முன்னரே சிலர் தொடரின் பாதியில் கேப்டன் பொறுப்பில் இருந்து கழற்றி விடப்பட்டிருக்கின்றனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் ஆனார் கேன் வில்லியம்சன்: டேவிட் வார்னரிடமிருந்து பதவி பறிப்பு!


கெவின் பீட்டர்சன் (ஆர்.சி.பி) - 2009

அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் 2009 சீசனில் கடுமையாக தடுமாறினார். 6 போட்டிகளில் அவரால் 93 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் பின்னர் அவர் தேசிய அணியில் ஆடுவதற்காக புறப்பட்டு இங்கிலாந்துக்கு சென்றார். இதனையடுத்து இந்தியாவின் நட்சத்திர ஸ்பின்னர் அனில் கும்பிளேவை புதிய கேப்டனாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் நியமனம் செய்தது.

குமார் சங்கக்கரா (டெக்கான் சார்ஜர்ஸ்) - 2012

இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கரா டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாக 2012ல் செயல்பட்ட போது அவர் பேட்டிங்கில் தடுமாற்றம் கண்டார். 12 போட்டிகளில் அவர் மொத்தமே 200 ரன்கள் தான் எடுத்திருந்தார். யாரும் எதிர்பாராத விதமாக அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து மட்டும் அல்லாமல் ஆடும் லெவனில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டார். அவருக்கு பதிலாக கேமரூன் வொயிட் அணியை வழிநடத்தினார்.

டேனியல் வெட்டோரி (ஆர்.சி.பி) - 2012

2011 தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு கூட்டிச் சென்ற டேனியல் வெட்டோரி 2012 தொடரில் முதல் 9 போட்டிகளில் 5 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தினார். இதன் காரணமாக அவர் தன்னை ஆடும் லெவனில் இருந்து விடுவித்துக் கொண்டு முத்தையா முரளிதரனுக்கு இடம் கொடுத்தார். இதன் காரணமாக விராட் கோலிக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டது. தற்போது வரை அவர் அப்பணியில் தொடருகிறார்.

ரிக்கி பாண்டிங் (மும்பை இந்தியன்ஸ்) - 2013

ஆஸ்திரேலிய அணிக்கு உலகக் கோப்பை பெற்றுத்தந்த ரிக்கி பாண்டிங்கை மும்பை அணி அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுத்தது அவர் கேப்டன் ஆக்கப்பட்டார். ஆனால் 2013ல் முதல் 6 போட்டிகளில் அவர் வெறும் 52 ரன்கள் மட்டுமே எடுத்ததால் அவர் தன்னை தானே கேப்டன் பதவியில் இருந்து விடுவித்துக் கொண்டார். இதனையடுத்து ரோகித் சர்மா கேப்டன் ஆக்கப்பட்டார். தற்போது வரை அவர் அப்பணியில் தொடருகிறார்.

டேவிட் மில்லர் (பஞ்சாப்) - 2016

2016 ஐபிஎல் தொடரில் முதல் ஆறு போட்டிகளில் ஐந்தில் தோல்வி கண்டதாலும், மிகவும் மோசமான ஃபார்ம் காரணமாகவும் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த டேவிட் மில்லர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதனையடுத்து முரளி விஜய் பஞ்சாப் அணியின் புதிய கேப்டன் ஆக நியமிக்கப்பட்டார்.

கவுதம் காம்பீர் (டெல்லி) - 2018

2018ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் 6 போட்டிகளில் 5-ல் தோல்வி கண்டதாலும், மிகவும் மோசமான ஃபார்ம் காரணமாகவும் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த கவுதம் காம்பீர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதனையடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணியின் புதிய கேப்டன் ஆக நியமிக்கப்பட்டார்.

அஜிங்கியா ரகானே (ராஜஸ்தான்) - 2019

2019 தொடரில் ராஜஸ்தான் அணியின் மோசமான தோல்விகளால் கேப்டனாக இருந்த அஜிங்கியா ரகானே பாதியில் கழற்றிவிடப்பட்டார். அவருக்கு பதிலாக ஸ்டீவன் ஸ்மித் புதிய கேப்டன் ஆனார்.

தினேஷ் கார்த்திக் (கொல்கத்தா) - 2020

அமீகரத்தில் நடைபெற்ற கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் 7 போட்டிகளில் வெறும் 108 ரன்களே எடுத்தார். மோசமான ஃபார்ம் காரணமாக அவருக்கு பதிலாக இங்கிலாந்தின் இயான் மார்கன் புதிய கேப்டன் ஆக்கப்பட்டார்.

 
Published by:Arun
First published: