மும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் - கங்குலி திட்டவட்டம்

கங்குலி

மும்பை வான்கடே மைதான ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    ஐபிஎல் 2021 கிரிக்கெட் திருவிழா இன்னும் 4 நாட்களில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்க வந்துள்ள வெளிநாட்டு வீரர்கள் 7 நாட்கள் குவாரண்டைனில் வைக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் வீரர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா காரணமாக மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது பிசிசிஐ-க்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. மும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மும்பை, சென்னை , பெங்களூரு போன்ற பெருநகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

    மகாராஷ்டிராவில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் 10 போட்டிகள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ தலைவர் கங்குலி ’திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும். மும்பையில் போட்டிகளை நடத்துவதற்கு தேவையான அனுமதியும் உத்தரவாதங்களும் எங்களுக்கு கிடைத்துள்ளன. ஏப்ரல் 10 முதல் 25 வரை மும்பையில் பத்து போட்டிகளை மட்டுமே நடத்துகிறது, நாங்கள் நன்கு பாதுகாக்கப்பட்ட அமைப்பில் இருக்கிறோம், வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் பாதுகாப்பாக இருப்பார்கள்’என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

    பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், ‘கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பார்த்தால், பாதிப்பிலிருந்து வீரர்களைக் காக்க ஒரே வழி அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதுதான் என்று நினைக்கிறேன். தற்போது தடுப்பூசி தேவை என்ற சூழல் உருவாகியுள்ளது. கொரோனா அச்சத்தை வைத்து வீரர்கள் சுதந்திரமாக விளையாட முடியாது’ எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
    Published by:Ramprasath H
    First published: