• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • நேற்றைய போட்டியில் வெற்றியைப் பதிவு செய்த டெல்லி, பஞ்சாப் அணிகள்

நேற்றைய போட்டியில் வெற்றியைப் பதிவு செய்த டெல்லி, பஞ்சாப் அணிகள்

பஞ்சாப் வீரர்

பஞ்சாப் வீரர்

சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் டெல்லி அணி மற்றும் பஞ்சாப் அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

  • Share this:
    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. ராஜஸ்தான் அணியை ரன் எடுக்க விடாமல் வெற்றியை ருசித்து முதல் இடத்திற்கு முன்னேறிய டெல்லி அணி மற்றும் இறுதி ஓவர் வரை போராடி ஹைதராபாத் அணிக்கு பதிலடி கொடுத்தது பஞ்சாப்.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் 36 வது லீக் ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு அபுதாபியில் களைகட்டியது. இதில் பலம்வாய்ந்த டெல்லி அணி - பிளே ஆஃப் ரேசில் நுழைய தவிக்கும் ராஜஸ்தான் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் வந்த ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தியது. ஷ்ரேயஸ் ஐயர் 43 ரன்களும், ரிஷப் பந்த் 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். அடித்து ஆடிய ஹெட்மயர் 5 பவுண்டரி விளாசி 28 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 154 ரன்கள் சேர்த்தது.

    155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஓபனர்கள் லிவிங்ஸ்டன், ஜெய்ஸ்வா இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார்.

    மற்ற வீரர்கள் டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வந்த வேகத்தில் வெளியேறினர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணியால் 121 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசிவரை வெற்றிக்காக போராடிய கேப்டன் சஞ்சு சாம்சன் 70 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

    33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த டெல்லி அணி மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியது. 32 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரி 2 சிக்சர்கள் விளாசி 43 ரன்கள் குவித்த டெல்லி வீரர் ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்கிய 37 வது லீக் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் இருந்த பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    பஞ்சாப் அணியின் மிகச்சிறந்த ஓபனர்களான ராகுலும், மயங்க் அகர்வாலும் சொல்லிக்கொள்ளும் படி ரன் சேர்க்காமல் ஹோல்டர் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்கிய அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 14 ரன்களுடன் நடையை கட்டினார். மற்ற வீரர்களும் சொல்லிக்கொள்ளும்படி ஆடாததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக மார்க்கம் 27 ரன்கள் சேர்த்தார். ஹைதராபாத் அணி தரப்பில் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    126 அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஹைதராபாத் அணியில் வார்னரும் - சஹாவும் களமிறங்கினர். வழக்கம் போல் வந்த வேகத்தில் சமி பந்துவீச்சில் 2 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் டேவிட் வார்னர். பெரிதும் நம்பியிருந்த கேப்டன் வில்லியம்சன் ஒரு ரன்னில் சமி பந்துவீச்சில் போல்ட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

    மற்ற வீரர்களும் வந்த வேகத்தில் வெளியேற சஹாவும் - ஜேசன் ஹோல்டரும் நிதானமாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். 31 ரன்கள் எடுத்திருந்த போது தவறான அழைப்பால் ரன் அவுட் ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார் சஹா. கடைசி ஓவருக்கு 17 ரன்கள் என்ற நிலையில் ஹோல்டர் நம்பிக்கையுடன் களத்தில் இருந்தார். ஒரு சிக்ஸ் அடித்திருந்தாலும் அவரால் 11 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது.

    ஐ.பி.எல். வரலாற்றில் குறைவான வெற்றி இலக்கான 126 ரன்களை கூட அடிக்க முடியாத அணி என்ற ஒரு மோசமான சாதனையையும் ஹைதராபாத் அணி படைத்துள்ளது. கடைசி பந்தில் வெற்றியை ருசித்த பஞ்சாப் அணி பட்டியலில் 7வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பந்துவீச்சில் 3 விக்கெட்டுகள் பேட்டிங்கில் ஆட்டத்தின் இறுதி பந்து வரை போராடி 47 ரன்கள் குவித்த களத்தில் இருந்து அசத்திய ஹோல்டருக்கு அவருடைய அணி தோற்றாலும் ஆட்டநாயகன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: