HOME»NEWS»SPORTS»ipl ipl auctions 2021 5 takeaways all rounders attract big money and some stars go unsold mut

ஐபிஎல் ஏல ஆச்சரியங்கள்- ஆல்ரவுண்டர்களுக்கு ஜாக்பாட், விலைபோகாத ஸ்டார்கள்; சிஎஸ்கேவின் கர்நாடக ஆச்சரியம்

கவுதமின் ஸ்ட்ரைக் ரேட் 160. இதுவரை இந்திய அணிக்கு ஆடாத ஒரு வீரர் இவ்வளவு தொகைக்கு ஏலம் போனதில் கவுதம் வரலாறு படைத்தார்.

ஐபிஎல் ஏல ஆச்சரியங்கள்- ஆல்ரவுண்டர்களுக்கு ஜாக்பாட், விலைபோகாத ஸ்டார்கள்; சிஎஸ்கேவின் கர்நாடக ஆச்சரியம்
ஐபிஎல் ஏலம் 2021, சென்னை.
  • Share this:

நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் 2021-க்கான மினி ஏலத்தில் பெரிய ஆச்சரியங்கள் நிகழ்ந்தன, இதில் முக்கியமானது கடந்த தொடரில் ஒன்றுமே ஆடாத கிளென் மேக்ஸ்வெல் ரூ.14.25 கோடிக்கு ஆர்சிபி எடுத்ததும், அதை விடவும் ஆச்சரியம் பெரிய அளவில் ஒன்றும் ஆடாத தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ராஜஸ்தான் அணியினால் ரூ 16.25 கோடி என்ற வரலாற்று தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டதே.

அதே வேளையில் ஜேசன் ராய், கோரி அண்டர்சன், ஏரோன் பிஞ்ச் உள்ளிட்ட ஸ்டார்கள் விலைபோகாமல் போயினர்.

இந்த ஐபிஎல் ஏலத்தின் 5 ஆச்சரியங்கள்:



1. ஆல்ரவுண்டர்களுக்கு அடித்த லக்கி பிரைஸ்:

ஐபிஎல் 2021 ஏலத்தில் அதிக விலை போன டாப் 10 வீரர்களில் 8 வீரர்கள் ஆல்ரவுண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்களுக்கான தேவை அதிகம். ஏனெனில் 25-30 ரன்களை 12-14 பந்துகளில் 4 ஓவர்களை டைட்டாக வீச வேண்டும், இந்த வகை ஆல்ரவுண்டர்களுக்கு மவுசு அதிகமானது.

கிறிஸ் மோரிஸ் இதனால்தான் கடந்த ஐபிஎல்-ல் இவர் சொதப்பினாலும் இப்போது ரூ.16.25 கோடிக்கு இவரை ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்துள்ளது. ஆச்சரியம் என்னவெனில் இவர் தென் ஆப்பிரிக்க அணியிலேயே இல்லை.

கிறிஸ் மோரிஸ்


அதே போல் கிளென் மேக்ஸ்வெல் கடந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 115 ரன்களையே எடுத்தார், ஆனால் அவரை ஆர்சிபி அணி ரூ.14.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. அதே போல் நியூஸிலாந்தின் வளரும் நட்சத்திர ஆல்ரவுண்டர் 7 அடி உயர கைலி ஜேமிசனை ஆர்சிபி ரூ.15 கோடிக்கு வாங்கியது.

2.  பெரிய ஆச்சரியங்கள்:

கீழ் வரிசையில் இறங்கி அதிரடி ஆட்டம் காட்டும், பந்து வீச்சில் டைட்டாக வீசும் கிருஷ்ணப்பா கவுதம். இவர் நேற்றைய ஏலத்தில் 5வது அதிகவிலை போன வீரர் ஆவார். தமிழகத்தில் அவ்வளவு வீரர்கள் இருக்க கவுதமை ரூ.9.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் எடுத்தது. இதே தோனி பாபா அபராஜித்துக்கு எந்த ஒரு வாய்ப்பையும் அளிக்காமல் 8 ஆண்டுகள் தன் பக்கத்தில் வைத்திருந்தார். கர்நாடகா வீரருக்கு ரூ.9.25 கோடி!!

பின்னால் இறங்கி ஆடுவதில் தோனிக்கும் வயது முற்றியதாலும், அவரது மட்டை சுழற்றல் வேகம் குறைந்ததாலும் ஒரு வீரர் தேவைப்படுகிறது. இப்போது கவுதமை அடிக்கச் சொல்லி தோனி ஒருமுனையில் 42 பந்துகளில் 30 ரன்களை எடுத்து ‘பினிஷர்’ அடையாளத்தைத் தக்க வைக்க முடியும். கவுதமின் ஸ்ட்ரைக் ரேட் 160. இதுவரை இந்திய அணிக்கு ஆடாத ஒரு வீரர் இவ்வளவு தொகைக்கு ஏலம் போனதில் கவுதம் வரலாறு படைத்தார்.

மகேந்திர சிங் தோனி


மற்றொரு ஆச்சரியம் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரைலி மெரிடித் இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.8 கோடிக்கு ஏலம் எடுத்தது. சர்வதேச கிரிக்கெட் ஆடாத ஒரு வெளிநாட்டு வீரர் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போனதும் பலருக்கும் ஆச்சரியமே.. இவர் ஆஸ்திரேலிய பிக்பாஷ் டி20 லீகில் தனது வேகத்தினால் பல பேட்ஸ்மென்களை திக்குமுக்காடச் செய்துள்ளார். 16 விக்கெட்டுகளை அந்தத் தொடரில் கைப்பற்றியதோடு சிக்கன விகிதமும் 7.82 என்று வைத்துள்ளார். ஆச்சரியம் என்னவெனில் இவர் இதுவரை 18 முதல் தர போட்டிகளிலும் 34 டி20 போட்டிகளிலும் ஆடியதே.

அதே போல் சிஎஸ்கே அணியின் பார்வைக்கு வராத, தமிழக வீரர் ஷாருக்கான் இவரும் அன் கேப்டு ஆல்ரவுண்டர். இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. இவர் அதிரடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் என்ற பெயர் பெற்றவர், ஆனால் பவுலிங்கில் பெரிய ரெக்கார்ட் இல்லை. ஸ்ட்ரைக் ரேட்டும் 135க்குக் கீழ்தான் இவரை ஏன் இவ்வளவு விலை கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் எடுத்தது என்பது புரியாத புதிரே.

3. விலைபோகாத ஸ்டார்கள்:

ஏரோன் பிஞ்ச்: குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் ஏரோன் பிஞ்ச்சின் ஸ்ட்ரைக் ரேட் 154. உலகம் முழுதும் சுமார் 300 டி20 போட்டிகளில் ஆடியிருப்பார், சராசரி 35 பக்கம் வைத்துள்ளார் ஸ்ட்ரைக் ரேட் 140, ஆனாலும் விற்கப்படவில்லை.

அதே போல் 2வது அதிவேக ஒருநாள் சதம் எடுத்து சாதனை புரிந்த நியூஸிலாந்தின் இடது கை ஆல்ரவுண்டர் கோரி ஆண்டர்சன் விற்கப்படாமலே போனார். அதே போல் புதிர் ஸ்பின்னரான நேபாளத்தைச் சேர்ந்த லமிச்சேன் 96 டி20 போட்டிகளில் 125 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சிக்கன விகிதம் 6.79. ஆனால் இவரை எடுக்க ஆளில்லை.

அதே போல் ஜேசன் ராய் இவர் ஒரு சேவாக் ரக வீரர், இவரையும் ஏலம் எடுகக் ஆளில்லை. அதே போல் ஆல்ரவுண்டர் டேவிட் வில்லே ஒருமுறை சிஎஸ்கே ஒப்பந்தத்தை மதிக்காமல் சென்றதால் அவரை உரிமையாளர்கள் மதிக்காமல் கைவிட்டனர்.

4. ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மென்களுக்கு மவுசு குறைகிறது?

10 டாப் விலை போன வீரர்களில் ஒருவர் கூட ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மென் கிடையாது. 8 ஆல்ரவுண்டர்கள் 2 பவுலர்கள் டாப் லிஸ்ட்டில் உள்ளனர். அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ராய், ஷான் மார்ஷ், லபுஷேன், எவின் லூயிஸ், கொலின் மன்ரோ, டேரன் பிராவோ விற்கப்படவில்லை. ஆஸ்திரேலிய ஸ்டார் ஸ்டீவ் ஸ்மித் ரூ.2.2 கோடிக்குத்தான் ஏலம் எடுக்கப்பட்டார், டேவிட் மலான் பஞ்சாப் கிங்ஸ் அணி 1.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.

5. வயது

ஐபிஎல் 2021 ஏலத்தில் வீரர்களின் வயதும் பெரிய அளவில் செல்வாக்கு செலுத்தியது. பெரிய பெயர்கள் அதிக விலைக்குப்போகவில்லை அல்லது விலையே போகவில்லை. லியாம் பிளங்கெட், ஆதில் ரஷீத், ஷான் மார்ஷ், பிஞ்ச், சவுதி, மெக்லினாகன், விலை போகவில்லை, ஹர்பஜன் சிங் மற்றும் கேதார் ஜாதவ் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

மாறாக இளம் வயது வீரர்களான ஷாரூக்கான், ரைலி மெரிடித், ஜை ரிச்சர்ட்ஸன் போன்ற வீரர்களுக்கு ஈர்ப்பு அதிகமிருந்தது.
Published by:Muthukumar
First published: