சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-க்கான மினி ஏலத்தில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அவரது அடிப்படை விலையான ரூ20 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் ஏலம் எடுத்தது.
இதனையடுத்து கேள்வி எழுந்தது, வாரிசு அரசியலை பெரிதாக விமர்சிக்கும் காலக்கட்டத்தில் சச்சின் மகன் என்பதற்காக ஐபிஎல் வாய்ப்பா என்ற பேச்சுக்கள் எழுந்தன. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் ஆபரேஷன்ஸ் தலைவர், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் மற்றும் பயிற்சியாளர் மகேலா ஜெயவர்தனே அர்ஜுன் டெண்டுல்கரை வரவேற்கும் விதமாக பேசினர்.
ஏற்கெனவே மும்பை மூத்தோர் அணியில் சமீபத்தில் அறிமுகமானார் அர்ஜுன். நேற்று கடைசி பெயராக அர்ஜுன் டெண்டுல்கர் பெயர் வந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே இவரை ஏலம் எடுக்க கோரியது, இதனையடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இந்நிலையில் பயிற்சியாலர் மகேலா ஜெயவர்தனே கூறும்போது, “உண்மையில் அர்ஜுன் அணியில் இணைவது நல்லதுதான். வலையில் கடுமையாக கடந்த 2 ஆண்டுகளாக அவர் உழைத்தார். குறிப்பாக கடந்த ஐபிஎல் தொடரி ல் யுஏஇ-யில் கடினமாக உழைத்தார். நெட்டில் வீரர்களுக்கு அயராமல் வீசினார்.
திறமைகளை மட்டுமே அறுதியிட்டுத்தான் தேர்வு நடந்துள்ளது.
அவரது தோள்களில் பெரிய சுமை உள்ளது, ஏனெனில் சச்சின் மகன் அல்லவா? ஆனால் இவர் அதிர்ஷ்டகரமாக பவுலர், பேட்ஸ்மென் அல்ல. எனவே சச்சினுக்கு பெருமையாகவே இருக்கும்.
இது அர்ஜுனுக்கு கற்றுக்கொள்ளும் நிலையாகும். மும்பை அணிக்கு ஆடினார், தற்போது மும்பை இந்தியன்ஸுக்கு தேர்வு ஆகியுள்ளார். அவர் மிகவும் தீவிரமான இளைஞர்.
அவர் மீது அழுத்தத்தை திணிக்காமல் இருந்தால் போதும். இதற்கு உதவத்தான் நாங்கள் இருக்கிறோம்.
ஜாகீர் கான் கூறும்போது, “அர்ஜுனின் பந்து வீச்சைப் பார்த்திருக்கிறேன், அபாரத் திறமையுடையவர். அவருக்கு சில நுணுக்கங்களை ஏற்கெனவே கற்றுக் கொடுத்துள்ளேன்.
அவர் கடின உழைப்பாளி, கற்றுக் கொள்வதில் ஆர்வம் மிக்கவர் என்பதால் தேர்வு செய்தோம்.
ஆம் சச்சின் டெண்டுல்கர் மகன் என்ற ஒரு பெரிய அழுத்தம் அவர் மீது அழுத்தவே செய்யும். இதை அவர் வாழ்ந்துதான் ஆகவேண்டும். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிச்சூழல் நிச்சயம் அர்ஜுனுக்கு உதவிகரமாகவே இருக்கும்” என்றார்.