Home /News /sports /

நடராஜனின் சமயோசித டிம் டேவிட் ரன் அவுட், தீப்பறக்க வீசிய உம்ரன் மாலிக்- புவனேஷ்வர் குமாரின் அசாத்திய விக்கெட் மெய்டன்;- சன் ரைசர்ஸ் வெற்றி

நடராஜனின் சமயோசித டிம் டேவிட் ரன் அவுட், தீப்பறக்க வீசிய உம்ரன் மாலிக்- புவனேஷ்வர் குமாரின் அசாத்திய விக்கெட் மெய்டன்;- சன் ரைசர்ஸ் வெற்றி

தீப்பொறி உம்ரன் மாலிக்

தீப்பொறி உம்ரன் மாலிக்

SRH vs MI | வான்கடேயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2022 65வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மேலும் ஒரு அடி வாங்கியது, ஆனால் இந்த முறை 194 ரன்கள் என்ற சன் ரைசர்ஸின் இலக்கை விரட்டி 190/7 என்று முடிந்து 3 ரன்களில் தோல்வி கண்டது. முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் 193/6 என்று முடிய மும்பை அருமையாக சேஸ் செய்தது, ஆனால் கடைசியில் தேவையற்ற சிங்கிளுக்காக டிம் டேவிட் ஓட, டி.நடராஜன் அருமையாக சமயோசிதத்துடன் ரன் அவுட் செய்ய மும்பை வெற்றி கனவு தகர்ந்தது.

மேலும் படிக்கவும் ...
வான்கடேயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2022 65வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மேலும் ஒரு உதையை வாங்கியது, ஆனால் இந்த முறை 194 ரன்கள் என்ற சன் ரைசர்ஸின் இலக்கை விரட்டி 190/7 என்று முடிந்து 3 ரன்களில் தோல்வி கண்டது. முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் 193/6 என்று முடிய மும்பை அருமையாக சேஸ் செய்தது, ஆனால் கடைசியில் தேவையற்ற சிங்கிளுக்காக டிம் டேவிட் ஓட, டி.நடராஜன் அருமையாக சமயோசிதத்துடன் ரன் அவுட் செய்ய மும்பை வெற்றி கனவு தகர்ந்தது.

இந்த த்ரில் வெற்றி மூலம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் -0.230 என்ற மைனஸ் நெட் ரன்ரேட்டில் 6 அணிகளுடன் 12 புள்ளிகள் வரிசையில் இணைந்தது.

டி.நடராஜனின் படுமோசமான ஓவர்.. ஆனால் டிம் டேவிட் ரன் அவுட் திருப்பு முனை:

டி.நடராஜனின் பந்து வீச்சு நேற்று சாத்து வாங்கியது ஒருபுறம் 4 ஓவர்களில் அவர் 60 ரன்கள் என்று விளாசப்பட்டார். ஆனால் 157/6 என்ற நிலையில் நடராஜன் 18வது ஓவரை வீச வந்தார். ஆனால் யார்க்கர் புல் டாஸ் ஆக முதல் பந்தையே மலை மனிதன் டிம் டேவிட் சிக்சருக்குத் தூக்கினார். அடுத்த பந்து வைடு, அடுத்த பந்து யார்க்கர் நேராக அடித்தார் டிம் டேவிட் ஒரு சிங்கிளுக்கான வாய்ப்பு இருந்தும் வேண்டாம் என்று மறுத்தார் ஆனால் அதன் பலனை அடுத்தடுத்த பந்துகளில் நடராஜன் அனுபவித்தார். மீண்டும் புல்டாஸ் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ். மீண்டும் அதே கதை மீண்டும் அதே இடத்தில் சிக்ஸ். அடுத்த பந்து மீண்டும் புல்டாஸ் சிக்ஸ்.26 ரன்கள் ஏற்கெனவே வந்து விட்டன.

இந்த நிலையில்தான் கடைசி பந்தை டிம் டேவிட் நேராக அடிக்க பந்தை நடராஜன் தடுத்தார் ஆனால் பந்து உருண்டு நான்-ஸ்ட்ரைக்கர் ஸ்டம்பை நோக்கி உருண்டு சென்றது, ரன்னர் ரமந்தீப் சிங் சிங்கிள் வேண்டாம் என்று இருந்தார், ஆனால் டிம் டேவிட் வலுக்கட்டாயமாக ஓட நடராஜன் பந்தை நோக்கி ஸ்டம்ப் அருகே வந்தார் பந்தை எடுத்து ஸ்டம்பில் அடிக்க டிம் டேவிட் கொஞ்ச தூரம் தள்ளி முடிந்து ரன் அவுட் ஆனார்.

டிம் டேவிட் ரன் அவுட். ரன் அவுட் ஆக்கியவர் டி.நடராஜன்


அவர் 18 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்கள் என்று 46 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனதில் மும்பை இந்தியன்ஸின் வெற்றி கனவு தகர்ந்தது. மோசமான ஓவருக்கு கடைசி ரன் அவுட் மூலம் நடராஜன் நியாயம் செய்தார்.

ரமந்தீப் சிங்குடன் சஞ்சய் யாதவ் இணைந்தார். 2 ஓவர்கள் 19 ரன்கள் மும்பை வெற்றிக்குத் தேவை. புவனேஷ்வர் குமார் அப்போதுதான் மிகப்பிரமாதமாக ஒரு ஓவரை வீசி விட்டார், முதலில் சஞ்சய் யாதவ்வை ஸ்லோ பவுன்சரில் காலி செய்தார். பும்ரா இறங்க புவனேஷ்வர் 3 யார்க்கர்களை வீச மெய்டன் ஓவர் என்பதோடு விக்கெட் மெய்டன் ஆனது.

இந்த மெய்டன் ஓவர் இல்லாவிட்டால் கடைசி ஓவரில் ஃபசல்லா ஃபரூக்கியை ரமந்தீப் சிங் சிக்சர், பவுண்டரி என்று 15 ரன்கள் அடித்த நிலையில் மும்பை வெற்றி பெற்றிருக்கும் ஆனால் டிம் டேவிட் ரன் அவுட் மற்றும் புவனேஷ்வரின் மெய்டன் விக்கெட்டினால் 190/7 என்று முடிந்தது மும்பை இந்தியன்ஸ்.

ரோஹித் சர்மா, இஷான் கிஷன் தாண்டவம்- உம்ரன் மாலிக் பிரமாதம்:

ரோஹித் சர்மாவும் இஷான் கிஷனும் ருத்ர தாண்டவம் ஆடினார்கள், ஷர்மா 36 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 48 ரன்கள் விளாச, இஷான் கிஷன் 34 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 43 விளாசினார், இருவரும் 10 ஓவர்களில் 95 ரன்கள் என்ற அபார தொடக்கம் கொடுத்தனர்.அப்போதுதான் ரோஹித் சர்மா வாஷிங்டன் சுந்தர் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

5 ஓவர்களில் 45 என்று இருந்த மும்பை இந்தியன்ஸ் சட்டென 8 ஓவர்களில் 61 என்று முடங்கியது ரோஹித் இருக்கும்போதே இப்படி ஆனது. உம்ரன் மாலிக் முதல் ஓவர் கொஞ்சம் ரோஹித், இஷான் ஆடித்தான் போயினர், காரணம், ரோஹித் ஹெல்மெட்டை அவர் பவுன்சர் பதம் பார்த்தது, இஷான் கிஷனுக்கு அதிவேக பவுன்சர் ஒன்று அவர் அறியாமலேயே மட்டையில் பட்டு சிக்ஸ் ஆனது, அது உம்ரன் மாலிக்கின் சிக்ஸ் தானே தவிர இஷான் கிஷன் அடித்த சிக்ஸ் அல்ல.

ரோஹித் அவுட் ஆனவுடன், இஷான் கிஷன், சாம்ஸ், திலக் வர்மா ஆகியோரை உம்ரன் மாலிக் மிரட்டினார், கிடுக்கிப் பிடி போட்டார்.  இவரது வேகத்துக்கு டைமிங்கும் கிடைக்காமல் ஆடவும் முடியாமல் இஷான் கிஷன், திலக் வர்மா, டேனியல் சாம்ஸ் மூவரும் உம்ரன் மாலிக்கிடம் ஆட்டமிழந்தனர். உம்ரன் மாலிக் 3 ஓவர் 23 ரன் 3 விக்கெட். கடைசி ஓவரை இவரிடம் கொடுத்திருக்கலாம் ஆனால் ஏனோ பசல்ஹக் பரூக்கியிடம் கொடுத்தனர். நல்ல வேளையாக 15 ரன்களை மட்டுமே அவர் கொடுத்தார், இல்லையெனில் மும்பை வென்றிருக்கும் 190 ரன்களில் வீழ்ந்தது மும்பை.

ராகுல் திரிபாதி, பிரியம் கார்க், பூரன் அதிரடி:

சன் ரைசர்ஸ் அணி புதிய தொடக்க வீரர் பிரியம் கார்க்கை முதலில் அபிஷேக் சர்மாவுடன் அனுப்பியது, ஆனால் அபிஷேக் சர்மா 9 ரன்களில் வீழ்ந்தார். ஆனால் அதன் பிறகு 43 பந்துகள் மும்பைக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை, பிரியம் கார்கும், திரிபாதியும் வெளுத்து வாங்கி விட்டனர். 10வது ஓவரில் ஸ்கோர் 96 ரன்கள்.

பும்ரா பாச்சாவும் பலிக்கவில்லை, திரிபாதி அவரை 6, 4, 4 என்று விளாசினார். டேனியல் சாம்ஸை மைதானத்தின் கூரைக்கு அனுப்பினார் பிரியம் கார்க். பவர் ப்ளேயிலும் இவர்களை அடக்க் முடியவில்லை, பவுண்டரிகள் பறந்தன, ப்ரியம் கார் 26 பந்துகளில் 42 என்று அவுட் ஆனார். ஆனால் திரிபாதி போய்க்கொண்டே இருந்தார், பூரன் இறங்கி பும்ராவை பவுண்டரி அடித்து ரைலி மெரிடித்தை சிக்ஸ் விளாசினார். பிறகு இன்னொரு பவுண்டரியும் விளாசினார். திரிபாதி தன் பங்குக்கு சாம்ஸ் ஓவரில் 3 பவுண்டரிகள் பின்னி எடுத்தார்.

16வது ஓவர் முடிவில் 164/2 என்று சன்ரைசர்ஸ் 200 ரன்களைக் கடந்து சென்றிருக்க வேண்டும், ஆனால் ராகுல் திரிபாதி 9 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 78 ரன்களையும் பூரன் 38 ரன்களை எடுத்தும் ஆட்டமிழக்க சுந்தர் 9 ரன்களில் பும்ராவிடம் பவுல்டு ஆக, மார்க்ரம் 2 ரன்களில் காலியாக வில்லியம்சன் 8 ரன்கள் எடுத்தார் சன் ரைசர்ஸ் `193/6 என்று முடிந்தது.

இது ஏறக்குறைய மும்பை எடுக்கக் கூடிய இலக்குதான், ஆனால் உம்ரன் மாலிக்கின் தீப்பறக்கும் பவுலிங், புவனேஷ்வர் குமாரின் அசாத்திய விக்கெட் மெய்டன், நடராஜனின் அந்த முக்கிய டிம் டேவிட் ரன் அவுட் சன் ரைசர்ஸுக்கு வெற்றி பெற்றுத் தந்தது. ஆட்ட நாயகன் விருது உண்மையில் உம்ரன் மாலிக்கிற்கு கொடுத்திருக்க வேண்டும் ஆனால் ராகுல் திரிபாதியும் தகுதியானவர்தான்.
Published by:Muthukumar
First published:

Tags: Cricket, IPL 2022, Mumbai Indians, SRH

அடுத்த செய்தி