Home /News /sports /

IPL 2022 CSK vs RCB - எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது- ரன்களையும் விக்கெட்டுகளையும் வாரி வழங்கிய ஆர்சிபி

IPL 2022 CSK vs RCB - எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது- ரன்களையும் விக்கெட்டுகளையும் வாரி வழங்கிய ஆர்சிபி

விக்கெட்டை தூக்கி எறிந்த கோலி, ஆட்டத்தை தூக்கி எறிந்த ஆர்சிபி

விக்கெட்டை தூக்கி எறிந்த கோலி, ஆட்டத்தை தூக்கி எறிந்த ஆர்சிபி

டாஸின் போதே இது சகோதரர்களுக்கு இடையிலான போட்டி என்று எந்த வித வெற்றி பெறுவதற்கான ஆக்ரோஷ தொனியும் இல்லாமல்தான் டுபிளெசிஸ் ஆரம்பித்தார்,

  டாஸின் போதே இது சகோதரர்களுக்கு இடையிலான போட்டி என்று எந்த வித வெற்றி பெறுவதற்கான ஆக்ரோஷ தொனியும் இல்லாமல்தான் டுபிளெசிஸ் ஆரம்பித்தார், டுபிளெசிஸ் முன்னாள் சிஎஸ்கே வீரர், ஹேசில்வுட் முன்னால் சிஎஸ்கே வீரர். முதல் 10 ஓவர்களில் சிஎஸ்கே சுமாராகத்தான் இருந்தது, ஆனால் கடைசி 10 ஒவர்களில் 156 ரன்களை ஷிவம் துபே, ராபின் உத்தப்பா வெளுத்து வாங்கினர், ஆனால் கேள்வி கேட்பாரில்லை டுபிளெசிஸ் பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார், சகோதர அணியாயிற்றே! ஆனால் பார்ப்பவர்கள் ஒரு நல்ல சவாலான கிரிக்கெட்டை எதிர்பார்த்துப் பார்த்தால் கடைசியில் சகோதரர்களுக்கு இடையிலான ஆட்டம் என்று விட்டார் டுபிளெசிஸ், சகோதரர்களுக்கு இடையிலான போட்டி கூட கிடையாது ஆட்டம், பரஸ்பர ஆட்டம்.  ஒருவேளை ஆட்டம் முடிந்து கொஞ்சம் நோண்டினால் சகோதரன் சிஎஸ்கே வெற்றி எங்கள் வெற்றி என்று சொன்னாலும் சொல்லி விடுவார் டுபிளெசிஸ், நேற்றே நாம் கூறியிருந்தோம் டுபிளெசிஸ் விட்டுக்கொடுத்தால்தான் சிஎஸ்கே வெற்றி பெறும் என்று. அதுதான் நடந்தது. என்ன உத்தப்பா ஒரு நல்ல வீரர், ஒதுக்கப்பட்ட வீரர் அவர் விளாசியதும், யுவராஜ் சிங்கை நினைவூட்டும் ஷிவம் துபேயின் காட்டடியும் நம்மை ரசிக்கவே வைத்தது.

  ஆனால் நம் பிரச்சனை ‘சகோதரர்’ டுபிளெசிஸ்தான். ஏனெனில் விடப்பட்ட கேட்ச்கள், கடைசியில் வீசச் செய்த பவுலர்கள் என்று ஆர்சிபி மேல் நமக்கு சந்தேகம் வரவே செய்யும். ஹர்ஷல் படேல் இல்லாமல் கடைசியில் ஆர்சிபி திண்டாடியதை புரிந்துக் கொள்ள முடிந்தது, நம் கேள்வியெல்லாம் 40-45 ரன்களுக்கான பேட்டர் உத்தபபவை 4 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 50 பந்துகளில் 88 அடிக்க விட்டது ஏன்? ஷிவம் துபே ஒரு மிஞ்சிப் போனால் ஒரு 50 ரன் வீரர் அவ்வளவே அவர் சதம் அடிக்கும் அளவுக்கு கொண்டு சென்று 5 பவுண்டரி 8 சிக்சர்களுடன் 46 பந்தில் 95 ரன்கள் அடித்ததும் ஆர்சிபி கேப்டன்சி மீதும் தீவிரத்தன்மை மீதும் நமக்கு கொஞ்சம் கேள்வியை எழுப்பவே செய்யும். சரி பேட்டிங்கில் குறைந்தத் 200 ரன்களுக்காவது அவர்களை மட்டுப்படுத்தியிருக்கலாம் ஆனால் ஒன்றும் செய்யவில்லை, சிராஜ் வந்து பெரிய நோ-பால் போடுகிறார்.  ஆகாஷ் தீப் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 58 ரன்களை கொடுக்கிறார். ஹேசில்வுட் 12 மற்றும் 15 ரன்களை கொடுத்தார், சிராஜ் கடைசி ஓவரில் 18 ரன்களைக் கொடுத்தார். ஹசரங்கா 13, 13, 14 என்று விளாசப்பட்டார்.

  சரி இதை விடுவோம் சேசிங்கில் என்ன நடந்தது என்று பார்த்தால் சொத்தை சிஎஸ்கே பவுலிங்குக்கு எதிராக ஆர்சிபி இந்த ஐபிஎல் தொடரில் பவர் ப்ளேயில் 2வது மந்தமான பேட்டிங் அணியாகத் திகழ்கிறது. 3 ஓவர்களில் 11/0 என்று இருந்தது, 217 ரன்களை விரட்டும் லட்சணமா இது? தீக்சனா வந்தார் டுபிளெசிஸ் சான்ஸ் எடுத்தார். அடிக்க முடியாத பந்தை லாங் ஆனில் கையில் கொடுத்து விட்டுப் போனார். விராட் கோலிதான் பிரமாதம், டுபிளெசிஸ் சொன்ன சகோதரர்கள் தத்துவத்தை சரியாகக் கடைபிடித்தது இவர்தான். தூக்கி கையில் கொடுத்து விட்டு எந்த ஒரு வருத்தமும் இல்லாமல் அப்பாடா அவுட் ஆகிவிட்டோம் என்பது போல் 1 ரன்னில் வெளியேறினார்!  கிளென் மேக்ஸ்வெல் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 11 பந்தில் 26 என்று ஆக்ரோஷம் காட்டினார், ஆனால் வந்தவேகத்தில் ஜடேஜாவின் நேர் பந்தில் பவுல்டு ஆனார், அது புல் ஷாட் ஆடுவதற்கு தோதான பந்து அல்ல. பிரமாதமான பீல்டர் பிரபுதேசாய் பிற்பாடு பேட்டிங்கிலும் அபாரமாக ஆடினார், இவரும் ஷாபாஸ் அகமடும் இணைந்து 5.3 ஓவர்களில் 60 ரன்களைச் சேர்த்தனர், ஆனால் தீக்‌ஷணா மீண்டும் வந்து இவர்கள் இருவரையும் வீழ்த்தினார்.

  தினேஷ் கார்த்திக்


  அப்போதுதான் தினேஷ் கார்த்திக் ஒருவர்தான் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் ஆடியது போல் தெரிந்தது ஒரே ஓவரில் 23 ரன்களை விளாசினார், இது ஜடேஜாவா தோனியா என்று தெரியவில்லை மோசமான கேப்டன்சி, ஜோர்டான், பிராவுவுக்கு ஓவர் இருக்கும் போது முகேஷிடம் கொடுத்தனர், தினேஷ் கார்த்திக் தான் யார் என்று காட்டி விட்டார். 14 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் தினேஷ் கார்த்திக் சிஎஸ்கேவுக்கு பதற்றமான தருணங்களை கொடுத்தார், இல்லையெனில் ஆர்சிபியின் ஆட்டத்துக்கு 50-60 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றிருக்க வேண்டும். தினேஷ் கார்த்திக்கினால் நெட் ரன் ரேட்டில் பெரிய தாவலை சிஎஸ்கே பெற முடியாமல் போனது, மற்றபடி ஆர்சிபி ஆட்டம் சிஎஸ்கே வெற்றி பெறுவதோடு பெரிய நெட் ரன் ரேட்டும் கிடைக்க வேண்டும் என்று ஆடியது போலத்தான் இருந்தது. சுருக்கமாக இது ஒரு ‘உஷ் கண்டுக்காதீங்க’  ரக மேட்ச்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: CSK, IPL 2022, RCB

  அடுத்த செய்தி