ஐபிஎல் 2022 கிரிக்கெட் போட்டிகளைக் காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா? வெளியானது முக்கிய தகவல்
ஐபிஎல் 2022 கிரிக்கெட் போட்டிகளைக் காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா? வெளியானது முக்கிய தகவல்
ஐ.பி.எல்
மும்பையின் வான்கிடே மைதானம், சிசிஐ, டி.ஒ.பாட்டீல் மைதானம் ஆகியவற்றில் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. தேவைப்பட்டால் புனே மைதானமும் போட்டிக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும்.
கொரோனா பரவலை கவனத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்ததால், பல மாநிலங்களில் வார நாட்கள் இறுதியில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் வெளியாக வேண்டிய பெரிய பட்ஜெட் படங்கள் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பார்வையாளர்களுடன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்துவது என்பது, பாதுகாப்பு பிரச்னைக்கு வழி வகுக்கும் என பிசிசிஐ உணர்ந்துள்ளது.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசன் பார்வையாளர்கள் யாரும் இல்லாமல் நடைபெறும் என பிசிசிஐ உயர் அதிகாரிகள் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் நாட்டின் பல்வேறு நகரங்களில் போட்டிகளை நடத்தினால், அதுவும் கொரோனா பரவல் பிரச்னைக்கு வழி வகுக்கும் என பிசிசிஐ கருதுகிறது. இதையடுத்து மும்பையின் வான்கிடே மைதானம், சிசிஐ, டி.ஒ.பாட்டீல் மைதானம் ஆகியவற்றில் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. தேவைப்பட்டால் புனே மைதானமும் போட்டிக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும்.
ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1,214 வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் 896 பேர் உள்ளூர் வீரர்கள். 318 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.
பெங்களூருவில் அடுத்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகளை சேர்த்து மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 வீரர்களை வரை ஏலத்தில் எடுக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வரையில் மொத்தம் 33 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர் அல்லது தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
Published by:Musthak
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.