ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் விராட் கோலியுடன் இணைந்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல.
ஐபிஎல் நடப்பாண்டிற்கான போட்டிகளை நடத்த ஐபிஎல் நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் இதனை நடத்துவது என்பது ஐபிஎல் நிர்வாகத்திற்கு மிகப்பெரும் சவாலாகவே இருக்கும்.
இந்நிலையில் நடப்பு சீசனில் குஜராத்தின் அகமதாபாத் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரங்களை மையமாகக் கொண்டு புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்கள் தற்போது தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகிறார்கள். முதற்கட்டமாக சில வீரர்கள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளனர்.
மற்றவர்கள், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஏலத்தில் எடுக்கப்படவுள்ளனர். அந்த வகையில் அகமதாபாத் அணி ஹர்திக் பாண்ட்யா, ரஷித் கான், சுப்மன் கில் ஆகியோரை எடுத்துள்ளது. லக்னோ அணி கே.எல். ராகுல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ரவி பிஷ்னோய் ஆகியோரை எடுத்துள்ளது.
இதில் கே.எல். ராகுல் ரூ. 17 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பு கடந்த 2018-ம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, அந்த நேரத்தில் விராட் கோலியை ரூ. 17 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. அதன்பின்னர், மிக அதிக தொகைக்கு கே.எல்.ராகுல் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
லக்னோ அணியை பொருத்தவரையில் மொத்தம் ரூ. 59.89 கோடிக்கு வீரர்களை ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம். ராகுலை தவிர்த்து ஸ்டாய்னஸிற்கு ரூ. 9.2 கோடியும், ரவி பிஷ்னோய்க்கு ரூ. 4 கோடியும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல் ரவுண்டரான மார்கஸ் ஸ்டாய்னஸ் கடந்த சீசனில் சிறப்பாக விளையாடி டெல்லி அணிக்கு முக்கிய வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார்.
அகமதாபாத் அணியை பொருத்தளவில் ஹர்திக் பாண்ட்யா அந்த அணிக்கு கேப்டனாக செயல்படுவார். அவரை ரூ. 15 கோடிக்கு அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆல்ரவுண்டரான ரஷித் கானுக்கும் இதே அளவு தொகை கொடுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பேட்ஸ்மேன் சுப்மன் கில் ரூ. 8 கோடிக்கு அகமதாபாத் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Published by:Musthak
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.