பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து கொண்டே வேறொரு அணி நிர்வாகத்துடன் ஒப்பந்தத்துக்காக பேச்சு நடத்தியதற்காக கே.எல்.ராகுல் மற்றும் ரஷீத் கான் ஓராண்டுக்குத் தடை செய்யப்படலாம் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளன.
பஞ்சாப் அணி இரண்டு உள்நாட்டு வீரர்களை மட்டுமே தக்க வைத்துள்ளது. ரூ.12 கோடி செலவில் மாயங் அகர்வால், ரூ.4 கோடி செலவில் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை தக்கவைத்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.14 கோடி செலவில் கேன் வில்லியம்சன், ரூ.4 கோடி செலவில் அப்துல் சமத், ரூ.4 கோடி செலவில் உம்ரன் மாலிக் ஆகியோரை தக்க வைத்துள்ளது.
இன்சைடு ஸ்போர்ட் செய்திகளின் படி பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பிசிசிஐ-யிடம் புகார் அளித்துள்ளது, அதாவது விதிமுறைகளை மீறி புதிய ஐபிஎல் அணியான லக்னோ அணி ஏலத்துக்கு முன்பாகவே கே.எல்.ராகுல் மற்றும் ரஷீத் கானை பிடித்துப் போட ஆசைக்காட்டி இழுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்சைடு ஸ்போர்ட் ஊடகத்துக்கு பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “கடிதம் எதுவும் வரவில்லை, ஆனால் இரண்டு அணி நிர்வாகமும் வாய்மொழியாக புகார் அளித்துள்ளனர், லக்னோ அணி இப்படியாக இரண்டு வீரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இழுக்கப் பார்க்கிறது என்பது புகார், நாங்கள் இதை பரிசீலித்து வருகிறோம். புகார் உண்மையெனில் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.
ஏற்கெனவே இருக்கும் அணிகள் தங்கள் பர்ஸ் மற்றும் அணியின் பேலன்ஸ் ஆகியவற்றை நிர்ணயிக்கும் சமயத்தில் இந்த மாதிரி சிக்கல்கள் தேவையற்றது.” என்றார்.
ஆர்பிஎஸ்ஜி குழுமத்தின் லக்னோ அணி கே.எல்.ராகுலுக்கு ரூ.20 கோடி தர முன் வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷீத் கானுக்கு ரூ.16 கோடி அளிக்க முன்வந்துள்ளனர். ராகுல் இப்போது ரூ.11 கோடியும், ரஷீத் கான் 9 கோடியும் பெறுகின்றனர், ரஷித் கானை சன் ரைசர்ஸ் தக்க வைக்க வேண்டுமெனில் ரூ.12 கோடி செலவிட வேண்டும், ஆனால் அந்த அணி அவரைத் தக்கவைக்கவில்லை.
இதற்கு முன்னர் ரவீந்திர ஜடேஜா 2010-ல் இப்படி ரகசியமாக இன்னொரு அணி நிர்வாகத்திடம் பேசியதற்காக ஒராண்டு தடை செய்யப்பட்டார், அதே போல் இப்போது ராகுல், ரஷீத் கான் ஓராண்டு தடை செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
நவம்பர் 30ம் தேதி வரை வீரர்கள் தங்கள் அணியின் ஒப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டவர்களே. இப்படியிருக்கையில் அதற்கு முன்னதாகவே வேறொரு அணியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதை எப்படி ஏற்க முடியும் என்று இரு அணி நிர்வாகமும் கொதித்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL Auction, Kl rahul, Rashid Khan