ஐபிஎல் 15ஆவது சீசனின் நேற்றைய ஆட்டத்தில்
சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜிதேஷ் ஷர்மா, வைபவ் அரோரா ஆகிய இரண்டு புதுமுக வீரர்கள் இடம்பெற்றனர்.
சிஎஸ்கேவுக்கு எதிராக அறிமுக வீரர் வைபவ் அரோரா சிறப்பாக பந்து வீசினார். வைபவ் அபாரமாக பந்துகளை ஸ்விங் செய்து, பிரமிக்க வைத்தார். பவர் பிளேவிலேயே ராபின் உத்தப்பா, மொயின் அலி ஆகியோரது விக்கெட்களை வைபவ் அரோரா வீழ்த்தினார்.
இவரை ஏலத்திலும் சிஎஸ்கே கோட்டை விட்டது, பவுலிங்கிலும் கோட்டை விட்டது, இவர் இன்னொரு தீபக் சாஹர் தான். இன்ஸ்விங்கர், அவுட் ஸ்விங்கர் என்று அசத்துகிறார். சிஎஸ்கே பேட்டர்கள் இவரை எதிர்கொள்ள திணறினார்கள், 4 ஓவர் 21 ரன்கள் 2 விக்கெட் என்று சிக்கனமும் காட்டினார் வைபவ் அரோரா.
இந்த நிலையில் இவரை அணிக்குள் கொண்டு வந்தது குறித்து, அந்த அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன் கூறும்போது, “பயிற்சிக்கு முன்புவரை வைபவ் பந்துவீச்சு குறித்து எங்களுக்கு தெரியாது. அவர் ஒரு சாதரான பந்துவீச்சாளராக இருப்பார் எனக் கருதினோன். ஆனால், பயிற்சியின்போது அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.
மேலும் பேசிய அவர், “உண்மையில், பயிற்சியின்போது எந்த பேட்ஸ்மேனாலும் வைபவுக்கு எதிராக தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியவில்லை. நானும்கூட திணறினேன். இப்படி அவர் சிறப்பாக செயல்பட்டு நம்பிக்கையை பெற்றதால்தான், விரைவிலேயே லெவன் அணியில் வாய்ப்பு கிடைத்தது. இனி வரும் போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
வருகிற 8ம் தேதி வெள்ளிக்கிழமை மும்பை பிரபோர்ன் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமை குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.