முகப்பு /செய்தி /விளையாட்டு / வெற்றியின் பிடியிலிருந்து தோல்விக்கு நழுவிய குஜராத் டைட்டன்ஸ்- சஹா, கில் அபாரத் தொடக்கம் வீண்- மும்பை வெற்றி

வெற்றியின் பிடியிலிருந்து தோல்விக்கு நழுவிய குஜராத் டைட்டன்ஸ்- சஹா, கில் அபாரத் தொடக்கம் வீண்- மும்பை வெற்றி

மும்பை வெற்றி, குஜராத் தோல்வி

மும்பை வெற்றி, குஜராத் தோல்வி

மும்பை பிரபர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற டாடா ஐபிஎல் 2022 தொடரின் 51வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி எளிதில் வெற்றி பெறக்கூடிய நிலையிலிருந்து  மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.

  • 3-MIN READ
  • Last Updated :

மும்பை பிரபர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற டாடா ஐபிஎல் 2022 தொடரின் 51வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி எளிதில் வெற்றி பெறக்கூடிய நிலையிலிருந்து  மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த மும்பையும் 200 ரன்கள் செல்ல வேண்டிய ஸ்கோரை சொதப்பி 177/6  என்று முடிக்க, தொடர்ந்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் சஹா (55), கில் (52) தொடக்க ஜோடி 106 ரன்களை 12 ஓவர்களில் எடுத்து கொடுத்தும் கடைசி ஓவரில் 8 ரன்களை எடுக்க விடாமல் டேனியல் சாம்ஸ் அருமையான ஒரு ஓவரைப் போட குஜராத் டைட்டன்ஸ் 172/5 என்று முடிந்தது.

இதன் மூலம் 3 தோல்விகளைச் சந்தித்தாலும் குஜராத் டைட்டன்ஸ் 16 புள்ளிகளுடன் இன்னமும் முதலிடத்தில் தான் உள்ளது. முந்தைய போட்டிகளில் தோல்வியின் பிடியிலிருந்து அபாரமான சிக்சர் ஹிட்டிங் மூலம் த்ரில் வெற்றிகளைக் குவித்த குஜராத் டைட்டன்ஸ், இந்தப் போட்டியில் வெற்றியின் பிடியிலிருந்து தோல்விக்கு நழுவியது. மும்பை வெற்றி பெற்று ஒரு புண்ணாக்குக்கும் பயனில்லை. எனும்போது அந்த அணியை சாத்தி எடுத்திருக்க வேண்டாமா? அன்றே நாம் எழுதியிருந்தோம் குஜராத் அனைத்து போட்டிகளிலும் இனி தோல்வி தழுவும் என்று அது ஒருவேளை உண்மையாகி வருகிறதோ?

கடைசி ஓவரில் 8 ரன் எடுக்க முடியாமல் தோல்வி:

ஷுப்மன் கில், சஹா அவுட் ஆன பிறகு 111/2லிருந்து மும்பை கிடுக்கிப் பிடி போட்டாலும் ஹர்திக் பாண்டியா (24), சாய் சுதர்ஷன் ஓவருக்கு 9 ரன்கள் வீதம் 27 ரன்களைச் சேர்த்து 16 ஓவர்கள் முடிவில் 138/3 என்று வெற்றிப்பாதையில்தான் குஜராத் சென்று கொண்டிருந்தது, ஆனால் அப்போது சாய் சுதர்ஷன் 14 ரன்களில் பொலார்டு வீசிய தலை உயர பவுன்சரை புல் ஆட முயன்று பேலன்ஸ் தவறி ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார், இதுதான் உண்மையில் திருப்பு முனை என்றால் ஹர்திக் பாண்டியா  ரன் அவுட் பெரிய அடியாகிப் போனது.

டேவிட் மில்லர் அடித்த பந்து மட்டையின் கீழ் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் செல்வதற்குள் ஒரு ரன் எடுக்கலாம் என்று ஹர்திக் பாண்டியா தனக்கு ஸ்ட்ரைக் வேண்டும் என்று மூளையில்லாமல் ஓடியதில் இஷான் கிஷன் த்ரோ ஸ்டம்பைத்தாக்க கிரீஸ் மேல் பாண்டியா பேட் இருந்தது, அவர் ரன் அவுட். கிரீசிற்குள் இருக்க வேண்டும் அதுதான் ரீச் என்று பெயர்.

ஆனாலும் 15 பந்துகளில் 22 ரன்கள்தான் தேவை என்ற நிலையில்தான் பாண்டியா ரன் அவுட் ஆனார்.

19வது ஓவரில் பும்ரா 4 பந்துகளில் 4 ரன்கள்தான் கொடுத்தார், ரசிகர்கள் நாற்காலி முனைக்கு நகர்ந்தனர். அப்போது பும்ரா 127 கிமீ வேக ஸ்லோ பந்தை ஷார்ட் பிட்ச் ஆக வீச மில்லர் அதை மிட்விக்கெட் மேல் பெரிய சிக்சருக்குத்தூக்க 7 பந்தில் 10 ரன்கள் அவ்வளவுதான் திவேத்தியா, மில்லர் முடித்து கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கடைசி ஓவரை அற்புதமாக வீசிய டேனியல் சாம்ஸ்

கடைசி ஓவரை இடது கை வேகப்பந்து வீச்சாளர் டேனியல் சாம்ஸ் வீசினார். ராகுல் திவேத்தியா கிரேட் பினிஷர் 4 பந்தில் 3 ரன்கள் எடுத்து இருந்த போது 5 பந்துகளில் 8 ரன்கள் வெற்றிக்குத் தேவை. அப்போதுதான் 2வது ரன் எடுக்கும் முயற்சியில் திவேத்தியாவும் திலக் வர்மாவின் அவ்வளவு நல்ல த்ரோ என்று சொல்ல முடியாத த்ரோவில் ரன் அவுட் ஆனார் திவேத்தியா.

ரஷீத் கான் இறங்கி ஒரு சிங்கிள் எடுக்க கடைசி 2 பந்தில் 6 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டேவிட் மில்லரிடம் ஸ்ட்ரைக் வருகிறது. ஆனால் கடைசி 2 பந்துகளையும் சாம்ஸ் ஃபுல்லாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தள்ளி ஸ்லோவாக வீச மில்லர் சுழற்றினார் இரு பந்துகளும் சிக்கவில்லை, கடைசி ஓவர் த்ரில்லரில் சாம்ஸ் மும்பை இந்தியன்ஸுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார்.

ரோஹித் சர்மா, இஷான் கிஷன், டிம் டேவிட் எனும் மலை மனிதன் அபாரம்:

முன்னதாக டாஸ் வென்று மும்பை இந்தியன்சை பேட் செய்ய அழைத்தார் ஹர்திக் பாண்டியா. ரோஹித் சர்மா பார்மில் இல்லாதது போலவே இல்லை, அல்ஜாரி ஜோசப்பை விளாசினார் பவர் ப்ளேவுக்குள் 42 ரன்களை எடுத்தார். இஷான் கிஷன் சரளம் இல்லை என்றாலும் அவரும் ரன்களை விரைவில் எடுக்க பவர் ப்ளே 6 ஓவரில் மும்பை 63 ரன்களை எடுத்தது.

ரஷீத் கான் பவர் ப்ளேவுக்குள் வீசிய ஒரு ஓவரில் 13 ரன்களைக் கொடுத்தார். 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 28 பந்தில் 43 எடுத்திருந்த ரோஹித் சர்மா எந்த பவுலரையும் அடிக்கும் மூடில் இருந்தார், ஆனால் ரஷீத் கான் இவருக்கு 2 பந்துகளை வீச ரன் வரவில்லை, உடனே ரிவர்ஸ் ஸ்வீப் போனார் எல்.பி.ஆகி வெளியேறினார்.

அதன் பிறகு குஜராத் புகுந்தது, சூரியகுமார் யாதவ் (13), சங்வானிடம் ஆட்டமிழக்க, இஷான் கிஷன் ரன் அடிக்க முடியாமல் பவர் ப்ளேவுக்குப் பிறகு திணறி கடைசியில் ஜோசப் பந்தில் 45 ரன்களுக்கு வெளியேற, கிரன் பொலார்டுக்கு பேட்டிங் மறந்து போய் 14 பந்துகளில் 4 ரன்களையே எடுத்து ரஷீத் கான் என்ன வீசுகிறார் என்று புரியாமல் திணறி கடைசியில் அவரது அருமையான லெக் ஸ்பின்னுக்கு ஆஃப் ஸ்டம்பை இழந்து வெளியேற மும்பை இந்தியன்ஸ் 119/4 என்று 15வது ஓவரில் சரிந்தது.

திலக் வர்மாவும், டிம் டேவிட் என்ற மலை மனிதனும் சேர்ந்து ஸ்கோரை 19வது ஓவரில் 157க்குக் கொண்டு செல்ல திலக் வர்மா ரன் அவுட் ஆகி வெளியேறினார், ஆனால் டிம் டேவிட்டுக்கு பந்து வீசுவது கடினம். ஏனெனில் ஹிட்டிங் ஆர்க்கில் இருந்தால் பவுண்டரி கூட அல்ல, எல்லாம் சிக்ஸ்தான்.

மலை போல் இருக்கும் டிம் டேவிட்

ஆனால் இவர் முதலில் 2 அருமையான தரையொடு தரையான ஸ்ட்ரெய்ட் ட்ரைவில்தான் ஆரம்பித்தார். பிறகு ஷமி ஆர்க்கில் குத்திய பந்தெல்லாம் சிக்ஸ், கடைசி ஓவரில் 2 சிக்ஸ், என்று 21 பந்துகளில் 44 ரன்கள் எடுக்க மும்பை இந்தியன்ஸ் 177 ரன்களை எட்டியது, பொலார்ட் டவுனில் உண்மையில் டிம் டேவிட்டை இறக்கியிருக்க வேண்டும் டிம் டேவிட்டிற்கு முதல் 5-6 போட்டிகளில் வாய்ப்பு கொடுத்திருந்தால் நிச்சயம் மும்பை பிளே ஆஃப் போட்டியில் இருந்திருக்கும். எல்லா அணிகளுமே காலம் தாழ்ந்த முடிவு எடுக்கின்றனர்.

ஷுப்மன் கில், சஹா அற்புத தொடக்கம்:

ஷுப்மன் கில் சாதாரணமாக சப்போர்ட் ரோல் எடுக்க அதிசயமாக அதிரடி முடிவை சஹா எடுத்தார், பும்ராவின் வேகத்தை அருமையாகப் பயன்படுத்தி விளாசித்தள்ளினார், பவர் ப்ளேயில் இவர்தான் 25 ரன்களை 9பந்தில் எடுத்தார். பும்ராவுக்கு எதிராக பவர் ப்ளேயில் அதிக ரன் எடுத்தவர் யார் என்றால் அது சஹாதான்.

சஹா எப்போதும் பவர் ப்ளே முடிந்தவுடன் ரன் எடுக்கச் சிரமப்படுவார், அப்போது ஷுப்மன் கில் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தார்.

சதக்கூட்டணி அமைத்த சஹா-ஷுப்மன் கில்

முருகன் அஸ்வினை ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி, டேனியல் சாம்ஸை அருமையாக 2 கட் ஷாட் பவுண்டரிகள் மற்றும் ஒரு புல்ஷாட் பவுண்டரி என்று 3 பவுண்டரிகளை தொடர்ச்சியாக அடித்தார் கில். இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் குமார் கார்த்திகேயாவை 1 சிக்ஸ் 1 பவுண்டரி விளாசினார் கில்.

இந்த இடத்தில்தான் குஜராத் டைட்டன்ஸ் திட்டம் சரியில்லாமல் போனது. சஹாதான் அடித்து ஆடி  ரிஸ்க் எடுக்க வேண்டும், கில் கடைசி வரை ஆட்டத்தில் நின்றிருந்தால் 18 ஓவர்களில் வென்றிருக்கலாம், ஆனால் கில் அரைசதம் எடுத்தவுடன் முருகன் அஸ்வின் பந்தை தூக்கிக் கையில் கொடுத்து விட்டுப்போனார், அவர் போனவுடன் சஹாவும் தாங்க வில்லை. அதன் பிறகுதான் வரிசையாக குஜராத் டைட்டன்ஸ் ஆட்டமிழந்து வெற்றிப்பாதையிலிருந்து நழுவி தோல்வி அடைந்து விட்டது. ஆட்ட நாயகனாக டிம் டேவிட் தேர்வு செய்யப்பட்டார்.

First published:

Tags: Gujarat Titans, IPL 2022, Mumbai Indians