முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2022 GT vs PBKS-ஷுப்மன் கில்லின் ‘மிடாஸ் டச்’ திவேத்தியாவின் 2 சிக்ஸ்- பஞ்சர் ஆன பஞ்சாப்-குஜராத் த்ரில் வெற்றி

IPL 2022 GT vs PBKS-ஷுப்மன் கில்லின் ‘மிடாஸ் டச்’ திவேத்தியாவின் 2 சிக்ஸ்- பஞ்சர் ஆன பஞ்சாப்-குஜராத் த்ரில் வெற்றி

ஹீரோ ராகுல் திவேத்தியாவுக்கு பாராட்டு, அருகில் அபார ஷுப்மன் கில்

ஹீரோ ராகுல் திவேத்தியாவுக்கு பாராட்டு, அருகில் அபார ஷுப்மன் கில்

ஐபிஎல் ஆட்டத்தில் நேற்று ஷுப்மன் கில் 96 ரன்கள் விளாசிய பிறகு கடைசி 2 பந்துகளில் 2 சிக்சர்கள் அடித்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு த்ரில் வெற்றி பெற்றுத் தந்தார் ராகுல் திவேத்தியா

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :

ஐபிஎல் 2022, 16வது போட்டியில் நேற்று இரவு பிரபர்ன் ஸ்டேடியத்தில் அபாரமான த்ரில் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்று தன் தொடர் வெற்றியை உறுதி செய்தது. பஞ்சாப் கிங்ஸ் 189/9 என்று தன் 20 ஒவரை முடிக்க தொடர்ந்து ஆடிய குஜராத் டைட்டன்சில் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 59 பந்துகளில் 96 ரன்கள் விளாச ராகுல் திவேத்தியா கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நெருக்கடியில் பஞ்சாப் பவுலர் ஒடியன் ஸ்மித்தை 2 மிகப்பெரிய சிக்சர்களை விளாசி ஹீரோவானானர். குஜராத் 190/4 என்று வெற்றி பெற்றது.

ராகுல் திவேத்தியா சிக்ஸ்

190 ரன்கள் இலக்கை எதித்து ஆடும்போது ஷுப்மன் கில் மிகப்பிரமாதமாக ஆடினார், அதாவது அனைவருக்கும் ஓர் உதாரணமாக ஆடினார், காட்டுத்தனமான மட்டை சுழற்றல் புத்தியற்ற காட்டடி முயற்சி செய்து அவுட் ஆவதை விட நார்மல் கிரிக்கெட் ஷாட்களே போதுமானது, இதுவே கிரிக்கெட் என்பதை உணர்த்தினார், இந்த விஷயத்தில் கில் இன்னொரு சேவாக் போல், டெஸ்ட், ஒருநாள், டி20 என்பது கிரிக்கெட் தான் என்பதை பலருக்கும் நினைவூட்டினார்.

நன்றாகச் சென்று கொண்டிருந்த சேசிங்கில் திடீர் நல்ல பவுலிங், மயங்க் அகர்வாலின் அபாரமான கேப்டன்சி, களவியூகத்தினால் திடீர் தொய்வு ஏற்பட கடைசி 6 ஓவர்களில் 62 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் 9 விக்கெட்டுகள் கையில் உள்ளன. தேவை ஒரே ஒரு 15-16 ரன் ஓவர் அது கைகூடவில்லை.

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்று ஆனது, கில் 96-ல் அவுட். ஹர்திக் பாண்டியா அப்போதுதான் கொஞ்சம் அதிரடி டச்சுக்கு வந்திருந்தார். டேவிட் மில்லர் இறங்கியவர் கடைசி பந்தை இறங்கி வந்து வெளுத்து சிக்ஸோ, பவுண்டரியோ அடித்திருந்தால் அல்லது மாட்டாயிருக்காவிட்டாலும் பரவாயில்லை ஹர்திக் பாண்டியா 20வது ஓவரின் முதல் பந்தில் ஸ்ட்ரைக்கில் இருந்திருப்பார், மாறாக 19வது ஓவரின் கடைசி பந்தில் மில்லர் சிங்கிள் எடுக்க, அவர் ஸ்ட்ரைக்கில் இருந்தார்.

ஓடியன் ஸ்மித் வைடுடன் தொடங்கினார், அடுத்த பந்து விக்கெட் கீப்பரிடம் பந்து செல்வதற்குள் ஒரு பை ரன் ஓடிவிடலாம் என்று பாண்டியா வர பேர்ஸ்டோ அற்புதமாக ஸ்டம்பில் ஆடிக்க பாண்டியா 18 பந்தில் 27 என்று கடுகடுப்புடன் வெளியேறி, வீரர்கள் இருப்பிடம் சென்று ஆத்திரத்தில் கிளவ், ஹெல்மெட்டை தரையில் போட்டார். ராகுல் திவேத்தியாவை மில்லருக்கு பதில் பாண்டியா இறக்கி இருக்க வேண்டும், எப்படியோ பாண்டியாவுக்குப் பிறகாவது திவேத்தியாவை இறக்கினாரே,

ஆனால் அவரும் வந்தவுடன் சிங்கிள் எடுத்து மில்லரிடம் ஸ்ட்ரைக் கொடுத்தார். ஆனால் மில்லர் இம்முறை ஒரு புல் ஷாட்டில் பவுண்டரி விளாசினார். கடைசி 2 பந்தில் 12 ரன்கள் தேவை திவேத்தியா கிரீசில், ஓடியன் ஸ்மித் வந்து போட்டார் மிட்விக்கெட்டில் பெரிய சிக்ஸ். அடுத்த பந்தும் ஒரு வாய்ப்பு இருந்தது, ஆனால் அதையும் திவேத்தியா சிக்ஸுக்கு அடிக்க குஜராத் அபார வெற்றி பெற்றது.

ஷுப்மன் கில் மிடாஸ் டச்:

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக பிரமாதமாக ஆடிய ஷுப்மன் கில் 46 பந்துகளில் 84 ரன்கள் விளாசி வெற்றிக்கு இட்டுச் சென்றார். நேற்று நான் அவுட் ஆகவில்லையெ என்பது போல் தொடர்ச்சியாக ஆடுவது போல் இறங்கியவுடன் வைபவ் அரோராவை 2 பவுண்டரிகள் விளாசினார். அர்ஷ்தீப் சிங், என்ற இடது கை வேகப்பந்து வீச்சாளரை அடிப்பது மிக மிகக்கடினம்.

ஆனால் வந்தவுடன் நேர் ட்ரைவில் பவுண்டரி, ஷார்ட் பிட்ச் போட்டார் போடாதே என்று மிட்விக்கெட்டில் புல் பவுண்டரி, பிறகு கட் ஷாட் பவுண்டரி என்று அர்ஷ்தீப்பையும் வெளுத்து கட்டினார் ஷுப்மன். மேத்யூ வேட் (6) ரபாடாவிடம் எட்ஜ் ஆகி வெளியேற.

தமிழ்நாடு பிரீமியர் லீக் ஆடிய சாய் சுதர்ஷன் என்ற இடது கை பேட்டர் கிரீசுக்கு வந்தார், என்ன இவரைப்போய் இறக்கி விட்டுள்ளார்களே என்று பார்த்தால் அந்தப் பையன் பின்னி எடுத்து விட்டார்.

ராகுல் சஹார் வந்தவுடன் அவரை மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடித்தார் சாய் சுந்தர். இருவரும் சேர்ந்து 101 ரன்களை 11 ஓவர்களில் விளாசினர். சாய் சுதர்ஷன் 30 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்தார், அடுத்ததாக மயங்க் அகர்வாலின் அதியற்புத பீல்டிங் செட்-அப், பவுலர்களை ரொடேட் செய்த விதத்தினால் சாய் சுதர்ஷன் கட்டிப்போடப்பட்டார், ஷுப்மன் கில்லுக்கும் அந்த ஒரு பெரிய ஓவர் மாட்டவே இல்லை.

ஷுப்மன் கில் 29 பந்துகளில் 50 பிறகு 45 பந்துகளில் 80. ராகுல் சஹரிடம் சாய் சுதர்ஷன் கொடியேற்றி அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் இருவரும் 22 பந்துகளில் 16 ரன்களையே அடிக்க முடிந்தது, அர்ஷ்தீப் சிங் அபாரமாக வீசி 2 ஓவர்களில் 11 ரன்களையே கொடுக்க விஷயம் விபரீதமானது. கில்லையும் டைட் செய்தனர, இதனால் அவர் ஆடிய கடைசி 16 பந்துகளில் 18 தான் வந்தது. கடைசியில் புல்டாசில் அவுட் ஆனார் ஷுப்மன் கில் அபாரமான இன்னிங்ஸ், மிடாஸ் டச்.

ஆனால் சத வாய்ப்பை தவற விட்டார். பிறகுதான் கடைசி ஓவர் டிராமா, அதில் திவேத்தியா மீண்டும் தான் ஒரு தாதா என்று நிரூபித்தார்.

பஞ்சாப் கிங்ஸ் இன்னிங்ஸ்: லியாம் லிவிங்ஸ்டன் காட்டடி தர்பார்:

முதலில் பேட் செய்ய அனுப்பப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணியில் மயன்க் அகர்வால் ஹர்திக் பாண்டியாவின் ஷார்ட் பிட்ச் பவுன்சருக்கு கொடியேற்றி அவுட் ஆனார். பனுகா ராஜபக்சவை தேவையில்லாமல் ட்ராப் செய்து பேர்ஸ்டோவை எடுத்தனர், அவர் ஒரு பவுண்டரி அடித்தார் ஆனால் நீண்ட நேரம் தாங்கவில்லை அவுட் ஆனார். இவரும் லாக்கி பெர்கூசன் பவுன்சருக்கு இரையானார்.

பவர் ப்ளேயில் 6 ஓவர் 43/2, லியாம் லிவிங்ஸ்டன் ஒரு விதத்தில் தான் ஆடுவார், அது காட்டடி தர்பார். நேற்று அதுதான் நடந்தது. 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் அவ்ர் 21 பந்துகளில் 50 விளாசினார். 27 பந்துகளில் 7 பவுண்டை 4 சிக்சர்கள் விளாசி 64 ரன்கள் எடுத்து பஞ்சாபுக்கு உயிர் கொடுத்த லிவிங்ஸ்டனை ரஷீத் கான் வீழ்த்தினார்.

ரஷீத் கான் முன்னதாக அருமையாக ஆடிய மிஸ்டர் கன்சிஸ்டண்ட் ஷிகர் தவானை 35 ரன்களில் வீழ்த்தியிருந்தார். ஜிதேஷ் சர்மா இந்த ஐபிஎல் தொடரின் இன்னொரு கண்டுப்பிடிப்பு இறங்கி 11 பந்தில் 1 பவுண்டரி 2 சிக்சர்கள் விளாசி 23 ரன்களில் நல்கண்டேவிடம் வீழ்ந்தார்.

ஷாரூக்கான் இறங்கி 2 சிக்சர்கள் விளாசி 15 ரன்களில் ரஷீத் கானிடம் ஆட்டமிழக்க, ரஷீத் கான் மீண்டும் 4 ஒவர் 23 ரன் 3 விக்கெட் என்று அசத்தினார். கடைசியில் ராகுல் சஹார் 22, அர்ஷ்தீப் சிங் 10 என்று பஞ்சாப் ஸ்கோரை 189/9 என்று கொண்டு சென்றனர்,

இது வின்னிங் டோட்டல்தான், ஆனால் ஷுப்மன் கில் ஆடிய ஆட்டம் விக்கெட் விழுமா என்ற சோர்வை பஞ்சாபுக்கு ஏற்படுத்தியது. கடைசியில் பஞ்சாப் நன்றாக ஆடி தோல்வி கண்டது. கடைசி 2 பந்துகளில் ராகுல் திவேத்தியா விதியை மாற்றி விட்டார்.

ஆட்ட நாயகன் ஷுப்மன் கில்.

First published:

Tags: Gujarat Titans, IPL 2022, Punjab Kings, Shubman Gill