முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2022: அறிமுக சீசனில் கோப்பையை வென்று அசத்திய குஜராத்.. பிரம்மாண்ட ஜெர்ஸி.. ஏ.ஆர்.ரகுமான் இசைக்கச்சேரி - களைக்கட்டிய ஐபிஎல் திருவிழா..!

IPL 2022: அறிமுக சீசனில் கோப்பையை வென்று அசத்திய குஜராத்.. பிரம்மாண்ட ஜெர்ஸி.. ஏ.ஆர்.ரகுமான் இசைக்கச்சேரி - களைக்கட்டிய ஐபிஎல் திருவிழா..!

ஐபிஎல் 2022

ஐபிஎல் 2022

நடப்பாண்டு ஐ.பி.எல். கோப்பையை புதிய அணியான குஜராத் டைடன்ஸ் அணி கைப்பற்றி சாதனை நிகழ்த்தியுள்ளது. பங்கேற்ற முதல் ஐ.பி.எல். தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

  • Last Updated :

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நடப்பாண்டு 15 வது முறையாக கொண்டாடப்பட்டது. குஜராத் மற்றும் லக்னோ அணிகளை புதிதாக இணைத்துக்கொண்டு 10 அணிகளோடு மொகா ஐ.பி.எல். தொடராக மார்ச் 26 முதல் மே 29 வரை களைகட்டியது. 70 லீக் போட்டிகளின் முடிவில் குஜராத்,ராஜஸ்தான்,லக்னோ,பெங்களூரு ஆகிய நான்கு அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியும் - சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தினர். சுமார் 1,32,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்ககூடிய மைதானம் என்பதால் அகமதாபாத் நகரமே கிரிக்கெட் ரசிகர்களால் ஸ்தம்பித்தது.

கொரோனோவிலிருந்து மீண்டெழுந்த விளையாட்டு உலகில் நடப்பாண்டு ஐ.பி.எல். நிறைவு விழா கண்கவர் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்டியது. பிரம்மாண்டமான ஐ.பி.எல். ஜெர்ஸி மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்டது உலகத்திலேயே மிகப்பெரிய ஜெர்ஸி என்ற கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தது. அத்துடன் 1983 திரைப்படப்பாடல் இசைக்க ரன் வீர் கபூர் ஐ.பி.எல். கொடியை ஏந்தி மைதானத்தில் வலம்வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்தியா உலகக் கோப்பையை வென்ற தருணங்கள், சேவாக் முச்சதம், சச்சின் இரட்டைசதம் போன்ற மறக்கமுடியாத நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டன. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கச்சேரி மைதானத்தில் இருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் உறையவைத்தது. ஜெய் ஹோ பாடலுக்கு ரன் வீர் சிங்கோடு சேர்ந்து மைதானமே ஆட்டம் போட்டது. தமிழ் மீது அதிகம் பற்றுகொண்ட ரஹ்மான் இந்நிகழ்ச்சியில் தமிழில் பாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதுடன் பேசுபொருளாகவும் மாறியிருக்கிறது.

Credits : @IPL

வண்ணமயமான வாணவேடிக்கை நிகழ்ச்சியோடு நடப்பாண்டு சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கு இறுதி யுத்தம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அடித்து ஆட நினைத்த ராஜஸ்தான் வீரர்கள் ரன் சேர்ப்பதில் குறியாக இருந்து விக்கெட்டுகளை பறிகொடுத்துவிட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி நாயகன் பட்லர் 39 ரன்களில் வெளியேற மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். கேப்டன் சஞ்சு 14 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

ஹர்த்திக் பாண்டியா அற்புதமாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். மேலும் தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோர் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்து ராஜஸ்தானை 130 ரன்களுக்குள் சுருட்டினர்.131 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியும் ஆரம்பத்தில் தடுமாறியது. சஹா மற்றும் வாடே சொற்ப ரன்களில் வெளியேற சுப்மன் கில்லும் - ஹர்த்திக் பாண்டியாவும் சுதாரித்து நிதானமாக விளையாடினர். 34 ரன்கள் சேர்த்து ஹர்த்திக் பாண்டியா வெளியேற கில்லர் மில்லர் வந்து தனது அதிரடியால் ஆட்டத்தை முடித்துவிட்டார்.

ஓபனராக களமிறங்கி நிதானமாக ரன் சேர்த்த சுப்மன் கில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் சேர்த்து அசத்தினார். இறுதியில் 11 பந்துகள் மீதமிருக்கும் போதே குஜராத் அணி வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. பங்கேற்ற முதல் தொடரிலேயே சாம்பியன் கோப்பையை வென்று ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி சாதனை நிகழ்த்தியுள்ளது.

பேட்டிங்,ஃபீல்டிங்,பௌலிங் என அனைத்திலும் ஜொலித்த ஹர்த்திக் பாண்டியா கேப்டனாகவும் சாதித்து தலைசிறந்த ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டார். இறுதிப்போட்டியின் கதாநாயகனாக ஹர்த்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன், அதிக பவுண்டர், அதிக சிக்ஸ், ஆரஞ்ச் கேப் என ட்ராபிகளை வாங்கி குவித்தார் ஜேஸ் பட்லர்.

17 போட்டிகளில் விளையாடிய பட்லர் 4 சதம்., 4 அரைசதம் விளாசி சாதனை நிகழ்த்தியதுடன் 863 ரன்கள் குவித்து ஆரஞ்ச் கேப்பை வசப்படுத்தியுள்ளார். இதில் 83 பவுண்டரி, 45 சிக்ஸர்கள் அடக்கம். நடப்பு தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர்களுக்கு வழங்கப்படும் பர்பிள் கேப்பை இம்முறை ராஜஸ்தான் வீரர் யுஸ்வேந்தர் சஹல் கைப்பற்றியுள்ளார். 17 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

இரண்டாமிடம் பிடித்த ராஜஸ்தான் அணிக்கு 12.5 கோடி ரூபாய் பரிச்சுத்தொகை வழங்கப்பட்டது. சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய குஜராத் டைடன்ஸ் அணிக்கு கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது. சென்னை அணி பட்டம் வெல்லவில்லை என்றாலும் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் தமிழக வீரர் சாய் கிஷோர் அசத்தியது, ரன்னர் அஃப் டீமில் அஸ்வின் விளையாடியது தமிழக ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

First published:

Tags: Actor Ranveer singh, Gujarat Titans, Hardik Pandya, IPL 2022, Rajasthan Royals, Rashid Khan, Sanju Samson