ஐபிஎல் அணிகளால் ஓரங்கட்டப்பட்ட, குறிப்பாக தன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினாலேயே ஓரங்கட்டப்பட்ட சுரேஷ் ரெய்னா தற்போது வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார், இவர் சிஎஸ்கே இரண்டு தோல்விகளைச் சந்தித்தது பற்றி சூசகமாகவும் அதே வேளையில் சிஎஸ்கேவின் புதிய கேப்டன் ஜடேஜாவுக்கு உத்வேகம் அளிக்குமாறும் பதிவு ஒன்றை ட்விட்டரில் மேற்கொண்டுள்ளார்.
சிஎஸ்கே முதல் போட்டியில் கொல்கத்தாவிடம் வெறும் 133 ரன்கள் எடுத்து மண்ணைக் கவ்வியது, ஆனால் நேற்று ராகுல் தலைமை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக 210 ரன்கள் குவித்தும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது சென்னை. இன்னும் சரியான லெவனைக் கண்டுப்பிடிக்கவில்லை. பவுலிங்கில் சிஎஸ்கே மிக மிக வீக்காக உள்ளது. கடந்த முறை ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் போன்றோர் இருந்தனர், ஜடேஜா பவுலிங்கே எடுபடவில்லை. ரவிசாஸ்திரி கூறுவது போல் பேட்டிங்கில் தாண்டவமாடும் ஜடேஜா பந்து வீச்சிலும் இன்னும் தைரியமாக வீச வேண்டும் என்றார். இது உண்மைதான்.
இந்நிலையில் சுரேஷ் ரெய்னா இரண்டு ட்வீட்கள் பதிவு செய்தார்:
அதில் ஒன்றில், “எந்த சூழ்நிலையிலும் நல்லதையே காண மனத்தைப் பயிற்றுவிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு ட்வீட்டில், “இரு அணிகளுக்குமே மிகப் பிரமாதமான போட்டி. போட்டி என்ன தீவிரமாகவும் நெருக்கடியாகவும் இருந்தாலும் புன்னகையுடன் கடின உழைப்பை மேற்கொண்டே இருக்க வேண்டும் என்பதை கிரிக்கெட் நமக்கு கற்று தந்த இன்னொரு நாள், ரவி பிஷ்னோய் களத்தில் தீயாய் பறந்தார். எவின் லூயிஸ் ஒரு போர் வீரன் போல் கடைசி வரை போராடினார். பிரமாத வெற்றி பெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார் ரெய்னா.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.