Home /News /sports /

IPL 2022 CSK vs LSG- யார் தோற்பது என்பதில் போட்டா போட்டி- சிஎஸ்கே, லக்னோ அணிகளின் கிரிக்கெட் சறுக்கல்கள்

IPL 2022 CSK vs LSG- யார் தோற்பது என்பதில் போட்டா போட்டி- சிஎஸ்கே, லக்னோ அணிகளின் கிரிக்கெட் சறுக்கல்கள்

ராகுல் - ஜடேஜா

ராகுல் - ஜடேஜா

பிரபோர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2022-ன் 7வது போட்டியில் கிரிக்கெட் ஆட்டத்தின் தரம் பின்னடைவு கண்டது. பவுண்டரிகள் சிக்சர்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தானது என்றாலும் மிஸ் ஃபீல்டுகள், விடப்பட்ட கேட்ச்கள், இரு கேப்டன்களின் களவியூகங்கள், பந்து வீச்சு மாற்றங்கள் எல்லாமும் ஒரு லீக் மட்ட கிரிக்கெட் அளவுக்குத்தான் இருந்தது.

மேலும் படிக்கவும் ...
பிரபோர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2022-ன் 7வது போட்டியில் கிரிக்கெட் ஆட்டத்தின் தரம் பின்னடைவு கண்டது. பவுண்டரிகள் சிக்சர்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தானது என்றாலும் மிஸ் ஃபீல்டுகள், விடப்பட்ட கேட்ச்கள், இரு கேப்டன்களின் களவியூகங்கள், பந்து வீச்சு மாற்றங்கள் எல்லாமும் ஒரு லீக் மட்ட கிரிக்கெட் அளவுக்குத்தான் இருந்தது.

சிஎஸ்கே செய்த பெரிய தவறு 17வது ஓவரில் டிவைன் பிரிடோரியசை முடித்தது அதோடு டிவைன் பிராவோவை 18வது ஓவரில் முடித்தது. ஒருவேளை இந்த 2 ஓவர்களை மேனேஜ் செய்து இருவரும் 19,20 வது ஓவர்களை வீசியிருந்தால் ஒருவேளை சிஎஸ்கே 210 ரன்களை இழந்திருக்க நேர்ந்திருக்காது.

ஷிவம் துபேயின் ஓவர் பேரழிவாக முடிந்து விட்டது, ஷிவம் துபேதான் 30 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து சிஎஸ்கேவின் ரன் விறுவிறுப்பை கைவசம் வைத்திருந்தார், ஆனால் பவுலிங்கில் திடீரென கொண்டு வந்து 19வது ஓவரை அவரிடம் கொடுத்தது என்ன கேப்டன்சி என்று புரியவில்லை, தோனி என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. ஜடேஜாவே வீசியிருக்கலாம். பனிப்பொழிவு ஒரு பெரிய இடைஞ்சலாக இரு அணிகளுக்குமே சவாலாக இருந்தது. பனிப்பொழிவில் வீசி அனுபவம் பெற்ற வீச்சாளரை வீச சொல்லியிருக்க வேண்டும்.

ஷிவம் துபே வந்தார் அங்கே லக்னோ வென்று விட்டது. கடைசி 2 ஓவர் 34 ரன்களை தோற்க முடிகிறது என்றால் அது என்னவென்பது நமக்குப் புரிவதில்லை. ஆயுஷ் பதோனி ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து கொண்டு ஸ்வீப்பில் சிக்ஸ் அடித்தார். அடுத்த 2 பந்துகள் வைடு, அடுத்த 3 பந்துகள் அல்வா ரக பந்துகள், அதையெல்லாம் அடிக்க எவின் லூயிஸ் தேவையில்லை, நம்ம ஊர் தெரு கிரிக்கெட் ஆடும் சின்னப் பையன்கள் போது, லூயிஸ் விடுவாரா 4, 4, 6 என்று பின்னி எடுத்து விட்டார், ஒரே ஓவரில் 25 ரன்கள் கொடுத்தார், 30 பந்தில் 49 அடித்து விட்டு துபே ஒரே ஓவரில் 25 கொடுத்து சிஎஸ்கே வெற்றி வாய்ப்பைப் பறித்தார்.கடைசி ஓவரில் 9 ரன்கள் எனும்போது கூட வெற்றி வாய்ப்பு சிஎஸ்க்வுக்குத்தான், ஆனால் யார் இந்த முகேஷ் சவுத்ரி என்று தெரியவில்லை. 2 வைடுகளை வீசினார். அடுத்த பந்து ஊர்பட்ட ஷார்ட் பிட்ச் இளம் சிங்கம் பதோனி விடுவாரா திரும்பிக் கொண்டு சிக்சருக்குத் தூக்கினார். இந்த ஓவரின் 3வது பந்தில் வெற்றி வாகை சூடியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.

லக்னோ அணி முதலில் பவுலிங் செய்த போது கே.எல்.ராகுல் களவியூகம் சொதப்பலாக அமைந்தது, பீல்டர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை, பந்துகள் பவுண்டரிகளுக்குப் பறந்து கொண்டிருந்தன, ஏகப்பட்ட மிஸ் பீல்டுகள், கேட்ச் ட்ராப்களும் அவ்வப்போது இருந்தது, ரவி பிஷ்னோய் தவிர வேறு யாரும் இந்தப் போட்டியில் பவுலிங்கில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை, அதே போல் பீல்டிங்கிலும் ரவி பிஷ்னோய் ஒரு அற்புதமான நேர் த்ரோ ரன் அவுட் செய்தார்.

சிஎஸ்கே பேட் செய்த போது லக்னோ இந்தா எவ்வளவு வேணா அடிச்சிக்கோ என்பது போல் பந்து வீசி பீல்டிங் செய்தது, மீண்டும் லக்னோ பேட் செய்த போது பவர் ப்ளேயில் துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் ஆகியோரை தொடர்ந்து கொடுத்து அடி மேல் அடி வாங்கியது எல்லாம் கிரிக்கெட் தரத்தை பின்னடைவு செய்ய வைத்துள்ளது. இருவரும் மாறி மாறி 9, 12, 15, என்று வாரி வழங்கிய பிறகு 6வது ஓவரை பிராவோவிடம் கொடுக்கின்றனர், அவர் 4 ரன்களையே கொடுத்தர், தோனி போல் அனுபவத்தை நம்புபவராக ஜடேஜாவைப் பார்த்தால் தெரியவில்லை.

டி காக்கிற்கு மொயின் அலி கேட்சை விட்டார், அப்போது டி காக் 28 ரன்களில் இருந்தார்.. தேஷ் பாண்டே ஒரு அரிய முயற்சியில் மிக மிகக் கடினமான ஒரு வாய்ப்பை ராகுலுக்குத் தவற விட்டார். கேப்டன்சி, களவியூகம் போன்றவற்றில் ஜடேஜா பலமைல்கள் தூரம் செல்ல வேண்டியுள்ளது, ராகுலுக்கும் இன்னும் ஒன்றும் புரியவில்லை. களவியூகம் மிக மோசம். மொத்தத்தில் இந்த ஆட்டத்தைப் பார்த்த போது இரு அணிகளும் வெற்றி பெற பாடுபட்டதை விட யார் தோற்பது என்பதில் போட்டாப் போட்டி போட்டது போல்தான் இருந்தது.

ஸ்கோர் போர்டை வைத்து இது த்ரில் போட்டி என்றெல்லாம் கூறுவது, ஏதோ ஷிவம் துபே ஓவரில் மட்டும் போனதாக அவரை மீம் போட்டு கலாய்ப்பதும் போதாது, இந்த ஒட்டுமொத்த போட்டியையே மீம் போட்டு கலாய்ப்பதுதான் சரி.
Published by:Muthukumar
First published:

Tags: CSK, IPL 2022, Lucknow Super Giants

அடுத்த செய்தி