சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கடினமான பிட்சில் விருத்திமான் சஹா 67 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் குஜராத் டைட்டன்ஸுக்கு வெற்றி தேடித் தந்தார்.
தன் ஆட்டத்தின் வேறொரு பரிமாணத்தையும் நேற்று காட்டினார், பவர் ப்ளேயில் அடித்து ஆடிய சஹா, குறைந்த இலக்காக இருப்பதால், கடைசி வரை நின்று வெற்றியையும் தேடித்தந்தார், இந்த வகையில் இவருக்கு பெரிய பெயரும் இல்லை, லாபியும் இல்லை, ஆனால் அணிக்காக சிறப்பாகவே ஆடுகிறார்.
முன்பு சன் ரைசர்ஸ் அணிக்கு ஆடும்போது சிலபல அதிரடித் தொடக்கங்களைக் கொடுத்திருக்கிறார்.இப்போது குஜராத் அணிக்கு உண்மையில் ஷுப்மன் கில்லை விடவும் பயனுள்ள வகையில் பங்களிப்பு செய்து வருகிறார். நேற்றைய ஆட்ட நாயகனும் அவரே.
இந்திய அணியிலிருந்து இவரை ஒருவிதத்தில் அவமானப்படுத்தி அனுப்பியதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவர் குஜராத் அணிக்காக தான் ஆடுவது பற்றி கூறியபோது,
“நான் நீண்ட காலமாக ஆடிவருகிறேன். ஆனால் இந்த குஜராத் அணி நிர்வாக அமைப்பு வீரர்களை அக்கறையுடன் நடத்துகிறது. நான் தொடக்க ஆட்டங்களில் ஆடவில்லை, ஆனால் வாய்ப்புக்கிடைத்ததும் என் திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். பெரிய இலக்கை விரட்டவில்லை, எனவே நான் பவர் ப்ளேயில் ரிஸ்க் எடுத்தேன், பிறகு இலக்கை நோக்கி நிதானமாகக் கொண்டு சென்றேன்.
நாங்கள் பந்து வீசிய போது பார்த்தேன் பந்து நின்று வந்தது. எனவே பவர் ப்ளேயில் ரிஸ்க் எடுத்தால் நல்லது. ஆகவே முதல் 6 ஓவர்களில் என் அதிரடி ஆட்டத்தை ஆடினேன். அதன் பிறகு பொறுமையைக் கடைப்பிடித்தேன்.
என்னுடைய ஸ்வீப் ஷாட்டாக இருந்தாலும் சரி, டவுன் த ட்ராக் இறங்கி அடித்தாலும் என் பலமான பகுதி பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார் சஹா.
இன்னும் சில காலம் இவர் இந்திய அணிக்காக ஆட முடியும் என்றே இவரது ஆட்டத்தைப்பற்றி கூற முடிகிறது, விக்கெட் கீப்பிங்கைப் பொறுத்தவரை இன்றும் இந்தியாவில் உள்ள விக்கெட் கீப்பர்களில் சகாதான் சிறந்தவர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.