ஆர்சிபிக்கு முன்னாள் ஆடியவர் யஜுவேந்திர செஹல், அப்போது அவரது சக வீரர் ஹர்ஷல் படேல், ஆனால் அன்று ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிரான போட்டியில் ஆட்டம் முடிந்தவுடன் ஹர்ஷல் படேலுக்கு செஹல் கைக்கொடுக்காமல் மறுத்தது பேசுபொருளாகி,
வைரல் வீடியாவாகியுள்ளது.
யஜுவேந்திர செஹல் பெயர் கொஞ்ச நாட்களாக வேண்டாத விஷயங்களுக்கெல்லாம் அடிபட்டு வருகிறது, மும்பை வீரர் ஒருவர் இவரை பால்கனியில் நிறை போதையில் தொங்க விட்ட சம்பவம், பிறகு சைமண்ட்ஸ் மற்றும் ஜேம்ஸ் பிராங்கிளின் இவரை அறையில் கட்டிப்போட்டு விட்டு பார்ட்டிக்குச் சென்ற சம்பவம் என்று ஐபிஎல் அலங்கோலங்களை வீரர்களின் துர்நடத்தைகளை அம்பலப்படுத்தியிருந்தார் செஹல்.
இந்நிலையில் இந்திய வீரரான ஹர்ஷல் படேலுடன் மேட்ச் முடிந்த பிறகு சாஹல் வேண்டுமென்றே தவிர்த்த வீடியோ வைரலாகியுள்ளது. பெங்களுரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. இப்போட்டியில் பெங்களுரு அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 169 ரன்கள் எடுக்க, பெங்களுரு அணி 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது.
தினேஷ் கார்த்திக் வெளுத்துக் கட்டிய போட்டியாகும் இது. போட்டி முடிந்த பிறகு களத்தில் இருந்த ஹர்ஷல் படேல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் ராஜஸ்தான் அணி வீரர்களுடன் கைக்குலுக்கி கொண்டனர். அப்போது, செஹல் வரிசையாக வீரர்களுக்கு கைக்கொடுக்கிறார். அருகே இருக்கும் ஹர்ஷல் படேல் அப்படியே நின்று கொண்டிருக்க, அவரை மட்டும் தவிர்த்துவிட்டு பார்க்காமல் செல்வதுபோல் சாஹல் சென்றுவிடுகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
செஹலின் இந்தச் செயலை நெட்டிசன்கள் பலர் கண்டித்துள்ளனர். இருவரும் பெங்களூரு அணிக்காக விளையாடினர். செஹலை அணியில் இருந்து விடுவித்த பெங்களூரு அணி, அவரை ஏலம் எடுக்கவும் ஆர்வம் காட்டவில்லை. இதனையடுத்து 6.5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி செஹலை ஏலம் எடுத்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.