Home /News /sports /

மோசமான பேட்டிங்: சுமாரான பந்துவீச்சு- நான்காவது போட்டியிலும் சென்னை அணி தோல்வி

மோசமான பேட்டிங்: சுமாரான பந்துவீச்சு- நான்காவது போட்டியிலும் சென்னை அணி தோல்வி

தோனி

தோனி

சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல் 2022 தொடரின் 17-வது போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா, ரூத்ராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கிய போதிலும், 11 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உத்தப்பா வாஷிங்கடன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    அவரைத் தொடர்ந்து ரூதுராஜூம் 13 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 36 ரன்களில் சென்னை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனையடுத்து, மொயின் அலி, அம்பதி ராயுடு இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. அம்பதி ராயுடு 27 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வாஷிங்கடன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மொயின் அலியும் 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜடேஜா மட்டும் 23 ரன்கள் எடுத்தார்.

    20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் அணியின் சார்பில் வாஷிங்கடன் சுந்தர், நடராஜன் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதனையடுத்து, களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினர். இருவரும் அணிக்கு நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். டார்கெட் 160-க்குள் இருந்ததால் தொடக்க வீரர்கள் இருவரும் விக்கெட் இழப்பின்றி நிதானமான பேட்டிங்கை மேற்கொண்டனர்.

    சென்னை அணி வீரர்களால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியைக் கொடுக்க முடியவில்லை. 12 ஓவர் வரையில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி சென்றது. 40 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேன் வில்லியம்சன் முகேஷ் சௌத்ரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ராகுல் திரிபாதி களமிறங்கினர். அபிஷேக், ராகுல் திரிபாதி இணை அதிரடியாக ஆடியது. அபிஷேக் சர்மா 50 பந்துகளில் 75 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ப்ராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    பேட்டிங்கில் தடுமாறிய சி.எஸ்.கே வீரர்கள்: ஹைதராபாத்துக்கு 155 ரன்கள் இலக்கு

    மறுபுறம் அதிரடியாக ஆடிய திரிபாதி 15 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். 17.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: CSK, IPL 2022

    அடுத்த செய்தி