• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • IPL 2021 | இன்று 2 போட்டிகள்; 4 அணிகள்- வெற்றி வாய்ப்புக்கு யாருக்கு சாதமாக உள்ளது?

IPL 2021 | இன்று 2 போட்டிகள்; 4 அணிகள்- வெற்றி வாய்ப்புக்கு யாருக்கு சாதமாக உள்ளது?

சிஎஸ்கே

சிஎஸ்கே

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்றும் 2 போட்டிகள் நடைபெற உள்ளன. புள்ளிப் பட்டியலில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய இந்த 2 போட்டிகளில் விளையாட உள்ள அணிகள் குறித்த விவரங்களை தற்போது காணலாம்.

 • Share this:
  இன்றைய நாளின் முதல் போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும் முனைப்பில் உள்ள சென்னை அணியும் மூன்றாவது இடத்திற்கு முன்னேற தீவிரம் காட்டும் கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அபுதாபியில் பிற்பகல் 3:30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெற உள்ளது. சென்னை அணியை பொறுத்தவரை இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வருகிறது. தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டின் ஆட்டம் அணியின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

  டூபிளசி, ரெய்னா, அம்பதி ராயுடு, மொயின் அலி என எதிரணி பந்துவீச்சாளர்களை அச்சுறுத்த சென்னை அணியில் பேட்ஸ்மேன்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். பிராவோ பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் மிரட்டி வருவது எதிரணிக்கு நிச்சயம் பாதகம்தான். சாம் கரணுக்கு கூட ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காத அளவிற்கு பந்துவீச்சில் சென்னை அணி பலமாக உள்ளது.

  இந்த சீசனின் இரண்டாவது பாதியில் மிகப்பெரிய எழுச்சியை பெற்ற அணி என்றால் அது கொல்கத்தா தான். வெங்கடேஷ் ஐயரின் வருகை இந்த அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் இவரது விக்கெட்டை வீழ்த்துவதான் சென்னை அணியின் முதல் இலக்காக இருக்கும். சுப்மன் கில் மற்றும் த்ரிபாதி வரைதான் கொல்கத்தா அணியின் பேட்டிங் திறமையை பார்க்க முடிந்திருக்கிறது. இதனால் மிடில் ஆர்டர் எவ்வளவு பலமாக உள்ளது என்பதை கணிக்க முடியாத சூழல் உள்ளது. கொல்கத்தா அணியின் மிகப்பெரிய பலமாக பந்துவீச்சு உள்ளது. இதனால் டாஸ் ஜெயித்தால் அந்த அணி பந்துவீச்சை தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது.

  இரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சென்னை அணி 16 போட்டிகளிலும் கொல்கத்தா 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய நாளின் இரண்டாவது போட்டியில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணியும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் மோத உள்ளன. துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.

  நடப்புச் சாம்பியனான மும்பை அணி, இந்த ஐபிஎல் தொடரில் சிறந்த பார்ம் இல்லாமல் தவித்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் அந்த அணி தோல்வியை தழுவியுள்ளது. ஹர்த்திக் பாண்டியா இன்றைய போட்டியில் விளையாடுவார் என்பது மும்பை அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். சூர்ய குமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன், பொல்லார்டு என சிறந்த வீரர்கள் இருந்தும் மிடில் ஆர்டர் தொடர்ந்து சொதப்பி வருகிறது. பந்துவீச்சில் பும்ரா, போல்ட், மில்னே என மும்மூர்த்திகள் நம்பிக்கை தருகின்றனர்.

  தொடரின் முதல் பாதியில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பெங்களூரு அணி, இரண்டாவது பாதியில் பரிதாப நிலையில் உள்ளது. கேப்டன் கோலி, தேவ்தத் படிக்கல் பார்மில் இருந்தாலும் அணியின் மிடில் ஆர்டர் சீட்டு கட்டு போல் சரிவது மிகப்பெரிய பாதகமாக உள்ளது. டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல்லின் அதிரடியை பெங்களூரு மிஸ் செய்கிறது. ஹர்ஷல் படேல், சஹல், ஜேமிசன் ஆகியோர் பந்துவீச்சில் நம்பிக்கை அளிக்கின்றனர். இரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியதில், 17 வெற்றிகளுடன் மும்பையின் கை ஓங்கியுள்ளது. ப்ளே ஆப் ரேஸில் தொடர இரு அணிகளுக்கும் வெற்றி தேவைப்படுவதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Karthick S
  First published: