• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021 | CSK vs SRH | டேவிட் வார்னரின் ஆமைத்தனமான பேட்டிங், ஹைதராபாத் போட்டுக்கொடுப்பு பவுலிங்- ருதுராஜ், டுபிளெசி விளாசலில் சிஎஸ்கே அபார வெற்றி

IPL 2021 | CSK vs SRH | டேவிட் வார்னரின் ஆமைத்தனமான பேட்டிங், ஹைதராபாத் போட்டுக்கொடுப்பு பவுலிங்- ருதுராஜ், டுபிளெசி விளாசலில் சிஎஸ்கே அபார வெற்றி

ஆட்ட நாயகன் ருதுராஜ் கெய்க்வாட்.

ஆட்ட நாயகன் ருதுராஜ் கெய்க்வாட்.

டெல்லியில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் 23வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமை சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிகள் அட்டவணையில் மீண்டும் முதலிடம் சென்றது.

  • Share this:
நல்ல பேட்டிங் பிட்சில் டாஸ் வென்ற வார்னர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார் ஆனால் 190-200 அடிக்க வேண்டிய பிட்சில் கடைசியில் கேன் வில்லியம்சன் (26) வெளுத்து வாங்கியதாலும் மணீஷ் பாண்டேயின் (61) இன்னிங்ஸினாலும் 171/3 என்ற ஸ்கோரை எட்டியது. தொடர்ந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் ஒரு விளாசல் தொடக்கத்தை ருதுராஜ் (75), டுபிளெசிஸ் (56) கொடுக்க இருவரும் 13 ஓவர்களில் ஓவருக்கு 10 ரன்கள் வீதத்தில் விளாசி ஸ்கோரை 129 ரன்களுக்கு கொண்டு செல்ல போட்டி ஒன்றுமேயில்லாமல் போய் தோனி தலைமை சிஎஸ்கே 18.3 ஓவர்களில் 173/3 என்று அபார வெற்றி பெற்றது.

சிஎஸ்கே பந்து வீச்சிலும் ஒன்றுமில்லை, பிட்சிலும் எந்த பயங்கரமும் இல்லை மிகப்பிரமாதமான பேட்டிங் பிட்ச் இது எனும் போது ஏன் ஹைதராபாத்தினால் அதிக ரன்களை அடிக்க முடியவில்லை என்பது புரியாத புதிரா? உஷ் கண்டுக்காதீங்கவா என்பதைக் கண்டுப்பிடிப்பது பெரிய சவால்.

டேவிட் வார்னரின் மந்தமான பேட்டிங்:

டி20 கிரிக்கெட்டை டெஸ்ட் கிரிக்கெட் போல் ஆடினார் வார்னர். அரைசதம் எடுத்தார், ஆனால் 55 பந்துகளில் 57 ரன்களையே எடுத்து அவரது டி20 கிரிக்கெட் கரியரில் ஆக மந்தமான அரைசதமாக அமைந்தது. ரஷீத் கானை இறக்கியிருந்தால் கூட வேகமாக ஒரு 25-30 ரன்களை எடுத்திருப்பார். 10,000 டி20 ரன்களை வார்னர் நேற்று கடந்தார். 10,000 ரன்கள் மைல்கல்லை எட்டும் 4வது வீரர் வார்னர்.

வார்னரின் டைமிங் படுமோசமாக இருந்தது, பீல்டர் கைகளில் ஒரு முறை இருமுறை என்றால் பரவாயில்லை 16 முறை பீல்டர் கைக்கு நேராக அவரது ஷாட்கள் சென்றது உஷ் கண்டுக்காதீங்கவா அல்லது உண்மையில் அவர் பேட்டிங் பறிபோய் விட்டதா என்ற முரணில் சிக்கிய கேள்வியாகும். என்னவெல்லாமோ செய்து பார்த்தார், தன் மேலேயே கோபப்பட்டார், ஆனால் பந்துகள் தொடர்ந்து பீல்டர் கையில் சென்றது மட்டும் எப்படி என்று புரியவில்லை.

சரி வார்னர் திணறுகிறார் என்றால் வேறு யாரையாவது இறக்கி ஒரு 20-25 ரன்களை 10 பந்துகளில் எடுப்பவரை அனுப்பியிருக்க வேண்டும், மணீஷ் பாண்டே முதலில் சிங்கிள்களை எடுத்து எப்போதாவது பவுண்டரி அடித்தார். வார்னர் டைமிங்குக்குப் போராடும் போது மணீஷ் பாண்டே சுயநலமியாக ஆடினாரா அல்லது கடைசியில் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆடினாரா என்பதும் தெரியவில்லை. ஆனால் வார்னர் திணறும்போது பாண்டேவுக்கு டைமிங் கிடைத்தது, அதைப் பயன்படுத்தி அதிரடி இன்னிங்ஸை ஆடியிருக்க வேண்டும் அவர், ஆனால் செய்யவில்லை.



இருவரும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 106 ரன்களை சேர்த்தனர், ஆனால் எடுத்து கொண்ட ஓவர்களோ 14 ஓவர்கள், பதினான்கு ஓவர்களை சாப்பிட்டு விட்டனர். வார்னர் இங்கிடியிடம் வெளியேற மணீஷ் பாண்டே 46 பந்துகளில் 61 ரன்கள் என்று இங்கிடியிடம் காலியானார்.

பிட்சிலும் ஒன்றுமில்லை சிஎஸ்கே பந்து வீச்சும் ஒன்றும் 80களின் மே.இ.தீவுகள் பந்து வீச்சும் அல்ல என்பதை கேன் வில்லியம்சன் நிரூபித்தார் 10 பந்துகளில் 26 ரன்களைக் குவித்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், அதுவும் சிஎஸ்கேவின் பெஸ்ட் டெத் ஓவர் பவுலர் ஷர்துல் தாக்கூரை பின்னி எடுத்தார். 128/2 என்று 17.1 ஓவர்களில் இருந்த போது இறங்கினார் கேன் வில்லியம்சன். கேதார் ஜாதவ் கடைசியில் தன்னை வெளியேற்றிய அணிக்கு எதிராக 4 பந்துகளில் 1 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசி 12 நாட் அவுட் என்று இருந்தார். சாம் கரனை தேர்ட்மேன் மேல் ஒரு அப்பர் கட் சிக்ஸ், மற்றும் ஒரு பவுண்டரி விளாச வில்லியம்சனும் ஜாதவும் 13 பந்துகளில் 37 ரன்களை விளாசினர்.

அதே பிட்ச்தான் ஆனால் ருதுராஜ், டுபிளெசி எப்படி விளாசினர்?

சன் ரைசர்சின் அனுபவ டாப் ஆர்டரை வைத்துப் பார்க்கும் போது சிஎஸ்கேவின் அனுபவமற்ற ஆனால் திறமையான ருதுராஜ் பிரமாதமாக ஆடினார் என்றே சொல்ல வேண்டும், பாண்டே, வார்னர் 14 ஓவர்களில் 106 ரன்களையே சேர்க்க டுபிளெசிஸ் ருதுராஜ் 13 ஓவர்களில் 129 ரன்களை ஓவருக்கு சுமார் 10 ரன் வீதத்தில் எப்படி எடுக்க முடிந்தது, இதுதான் இந்தப் பிட்சின் தன்மை.

சன் ரைசர்ஸ் பவுலிங்கில் ஒன்றுமே இல்லை, ஸ்விங் சுத்தமாக இல்லை, நேர் நேர் தேமாவாக அமைந்தது, மெதுவாக வீசி டைட் செய்யும் விஜய் சங்கருக்கும் பவுலிங் தரவில்லை, ஏன் என்பது இன்னொரு உஷ் கண்டுக்காதீங்க தருணம். பேட்டிங்கிலும் விஜய் சங்கர் இறங்கவில்லை, பின் எதற்காக அவர் அணியில், ஒரு இடத்தை ஃபில் செய்வதற்காகவா? பவுலிங்கில் ஒன்றுமில்லாததால் டுபிளெசிஸ், ருதுராஜ் சுலபமாக ட்ரைவ் ஆடினர், ஸ்பின்னர்கள் ரஷீத் கான், சுசித்தை ருதுராஜ் கவனித்துக் கொள்ள சன் ரைசர்ஸின் வேக (?!) பந்து வீச்சாளர்கள் கலீல் அகமெட், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மாவை டுபிளெசிஸ் கவனித்துக் கொண்டார்.

ரஷீத் கானின் 4 ஓவர் சன் ரைசர்ஸ் அணிக்கு மிக முக்கியமானது ஆனால் அவர் அச்சுறுத்தலையும் ருதுராஜ் வீரியமிழக்கச் செய்தார். ஷார்ட் பிட்ச்களாக வீசினார். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் 12 பவுண்டரிகளுடன் 44 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ரஷீத் கான் லெக் பிரேக்கில் பவுல்டு ஆனார். இந்த பந்து முதலில் விழுந்திருந்தால் ருதுராஜ் முதலிலேயே காலியாகியிருப்பார். ஆனால் விழவில்லை, பிறகு ரஷீத் கான் மொயின் அலி விக்கெட்டையும் டுபிளெசி விக்கெட்டையும் கைப்பற்றினார். 4ஓவர்களில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார் ரஷீத் கான். இந்த விக்கெட்டுகளினால் சிஎஸ்கே வேகம் குறைந்தது ஆனால் வெற்றியைத் தடுக்க முடியவில்லை.

ஆட்ட நாயகனாக ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டார், சிஎஸ்கே அணி முதலிடம் செல்ல, ஹைதராபாத் கடைசி இடத்தில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: