• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021, MI vs RR | பும்ராவை ஒன்றும் செய்ய முடியவில்லை, குவிண்டன் டி காக் அபாரம்: ராஜஸ்தானை வீழ்த்தியது மும்பை

IPL 2021, MI vs RR | பும்ராவை ஒன்றும் செய்ய முடியவில்லை, குவிண்டன் டி காக் அபாரம்: ராஜஸ்தானை வீழ்த்தியது மும்பை

ஐபிஎல் 2021: வெற்றிக்களிப்பில் மும்பை அணி.

ஐபிஎல் 2021: வெற்றிக்களிப்பில் மும்பை அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 171/4 என்று முடிய மும்பை இந்தியன்ஸ் 18.3 ஓவர்களில் 172/3 என்று வெற்றி பெற்றனர்.

  • Share this:
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் 24வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளது.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 171/4 என்று முடிய மும்பை இந்தியன்ஸ் 18.3 ஓவர்களில் 172/3 என்று வெற்றி பெற்றனர். குவிண்டன் டி காக் 50 பந்துகளில் 70 ரன்கள் விளாசி புள்ளிகள் பட்டியலில் மும்பை இடத்தை உறுதி செய்தார். குருணால் பாண்டியா உறுதுணையாக ஆடி 26 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 39 ரன்கள் விளாசினார்.

முன்னதாக ரோகித் சர்மா ராஜஸ்தான் அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். ஜோஸ் பட்லர் (32 பந்துகளில் 41), யாஷஷ்வி ஜெய்ஸ்வால் (20 பந்தில் 32), இணைந்து 7.4 ஓவர்களில் 66 ரன்கள் என்ற நல்ல தொடக்கத்தைத் தந்தனர். இருவரும் ஸ்பின்னர் ராகுல் சாஹரிடம் ஆட்டமிழந்தனர். சஞ்சு சாம்சனும் 27 பந்துகளில் 42 விளாசினார், ஆனால் ஷிவம் துபேயின் மந்தமான ஆட்டத்தினால், அவர் 31 பந்துகள் ஆடி 35 ரன்களையே எடுத்ததால் ராஜஸ்தான் அணி 190 ரன்களை எட்ட முடியாமல் போனது.

பும்ரா அபார பவுலிங், ஜெய்ஸ்வால், பட்லர் மெதுவாகத் தொடங்கி பிறகு மீண்டனர்:

மும்பை பவுலர் ட்ரெண்ட் போல்ட் ஸ்விங் செய்தார், முதல் ஓவரில் பட்லரை படுத்தினார், பும்ரா நல்ல லெந்த்தில் வீசினார். நல்ல வேகமாக வீசினார். இதனால் ராஜஸ்தான் தொடக்க வீரர்களால் இவர்கள் வீசும் வரை எழும்ப முடியவில்லை, 4 ஓவர்களில் வெறும் 20 ரன்களையே எடுக்க முடிந்தது. போல்ட், பும்ரா பவுலிங்கிலிருந்து விலக்கப்பட்டவுடன் ஜெய்ஸ்வால், பட்லர் நிம்மதியடைந்து ஆடத்தொடங்கினர்.

ஜெயந்த் யாதவ் ஓவரில் தப்பிய பட்லர் பிறகு அதே ஒவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் விளாசினார். ஜெய்ஸ்வால், ஆஸ்திரேலிய பவுலர் நேதன் கூல்டர் நைல் ஓவரை நன்றாக ‘கவனிக்க’ பவர் ப்ளேயில் ராஜஸ்தான் 47/0 என்று சுமாராக வந்தது. பட்லர், ஜெயந்த் யாதவை இன்னொரு சிக்ஸ் அடித்து ஸ்கோரை 50 ரன்களைக் கடந்து கொண்டு சென்றார்.

சாஹர் கொண்டு வரப்பட்டார், பட்லர் வந்தவுடன் அவரை ஆன் திசையில் சிக்ஸ் விளாசினார், ஆனால் அடுத்த பந்தே பட்லரை ஏமாற்றி ஸ்டம்பிங் முறையில் வீழ்த்தினார் சாஹர். பட்லர் 32 பந்தில் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 41. சாஹரின் அடுத்த ஓவரில் ஜெய்ஸ்வால் ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ் விளாசினார். ஆனால் அதே ஓவரில் ஜெய்ஸ்வால் (20 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸ்) சாஹரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

சாம்சன் இறங்கி 6 பந்துகளில் 12 ரன்களை 3 பவுண்டரிகள் மூலம் எடுத்தார். ஆனால் சாம்சனுக்கும் சரியாக மாட்டவில்லை மறு முனையில் ஷிவம் துபே பிளேடு போட்டார். 18வது ஓவரில் ஸ்கோர் 148 இருந்த போது போல்ட்டின் யார்க்கரில் சஞ்சு 42 ரன்களில் வேளியேறினார், பும்ராவை ஒன்றுமே செய்ய முடியவில்லை 4 ஓவர் 15 ரன்கள்தான், 17 மற்றும் 19வது ஓவரில் பேட்ஸ்மென்களின் காலைப்பதம் பார்த்தார் பும்ரா. 9 ரன்கள்தான் அடிக்க முடிந்தது ராயல்ஸ் விக்கெட்டுகள் கையில் இருந்தும் கடைசி 5 ஓவர்களில் 45 ரன்கள்தான் எடுக்க முடிந்தது. இதனால் 171/4 என்று முடிந்தது , ஷிவம் துபே அறுவையினால் ஸ்கோர் 190க்குப் போக முடியவில்லை.

வெளுத்து வாங்கிய குவிண்டன் டி காக்:

மும்பை விரட்டலில் முதல் 3 ஓவர்களில் 14 ரன்களே வர, பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தார் டி காக். முஸ்தபிசுர் ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் ஆஃப் திசையில் நகர்ந்து ஒரு பெரிய சிக்சரையும் அடித்தார். கிறிஸ் மோரிஸ் வந்தவுடன் வணக்கம் என்பது போல் புல் ஷாட்டில் சிக்ஸர் பறக்க விட்டார் டி காக். ரோகித் சர்மா திணறினார் 16 பந்தில் 14 ரன்கள் எடுக்கப் போராடி பவர் ப்ளேயில் ஆட்டமிழந்தார்.

சூரியகுமார் யாதவ் வழக்கம் போல் 2 பவுண்டரிகளுடன் தொடங்கினார், ராகுல் திவேத்தியா ஓவரில் விளாசினார். ஆனால் சூரியா நீண்ட நேரம் நீடிக்கவில்லை மோரிஸ் பந்தை நேராக பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஆனால் டி காக்-ஐ ஒன்றும் செய்யமுடியவில்லை. 35 பந்துகளில் அரைசதம் கண்டார். 36 பந்துகளில் 53 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராஜஸ்தானுக்கும் ஒரு வெற்றி வாய்ப்பு லேசாக இருந்தது, ஆனால் குருணால் பாண்டியா அந்த நம்பிக்கைக்கு வேட்டு வைத்தார். கெய்ரன் பொலார்டுக்கு முன்பே இறக்கப்பட்ட குருணால் 2 சிக்ஸ் ஒரு பவுண்டரியை சடுதியில் அடித்து 26 பந்துகளில் 39 எடுத்து மும்பை வெற்றிய உறுதி செய்தார். பொலார்ட் 8 பந்தில் 16 ரன்கள் எடுக்க மும்பை 18.3 ஓவர்களில் வெற்றியைச் சாதித்தது.

ஆட்ட நாயகன் டி காக்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: