வந்து விட்டார் ஷ்ரேயஸ் அய்யர்- ரிஷப் பந்த் நிலை என்ன?

ரிஷப் பந்த்

யுஏஇ-யில் ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் நிலை அதே போல் கேப்டனாகவே நீடிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
    ஆம்! டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் காயத்திலிருந்து மீண்டு குணமடைந்து அணிக்குத் திரும்பி உள்ளதால் பொறுப்பு கேப்டனாக இருக்கும் ரிஷப் பந்த் இடத்தில் ஷ்ரேயஸ் அய்யர் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம், ரிஷப் பந்த் கேப்டன்சியில் அணி ஐபிஎல் அட்டவணையில் முதலிடத்தில் உள்ளதால் அவரது கேப்டன்சியை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்ததாகத் தெரிகிறது.

    ரிஷப் பந்த் கேப்டன்சியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று ஐபிஎல் டேபிளில் டாப் இடத்தில் உள்ளது. இருப்பினும் முதல் பாதியில் கேப்டனும் அதிரடி வீரருமான ஷ்ரேயஸ் அய்யரின் இன்மை அந்த அணிக்கு பின்னடைவாகவே இருந்தது. ஆனால் எதிர்காலத்தை முன்னிட்டு ரிஷப் பந்த் போன்ற இளம் வீரரிடம் கேப்டன்சி பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் அப்போது தெரிவித்தது. இந்நிலையில் ரிஷப் பந்த் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாகத் தொடர்வார் என்று செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ரிஷப் பந்த் முன்னதாக இந்தியா ஏ அணிக்கு கேப்டன்சி செய்து அனுபவம் உள்ளவர்தான். 2020 சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியையும் இந்த முறை ரிஷப் பந்த் தலைமையில் டெல்லி கேப்பிடல்ஸ் வீழ்த்தியது. அய்யரைப் பொறுத்தவரை 2018-ல் அவர் கேப்டனாக சார்ஜ் எடுத்துக் கொண்டார். அய்யர் கேப்டன்சியில்தான் டெல்லி கேப்பிடல்ஸ் 2019- ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்று வரை வந்தது. 2012 முதல் லீக் சுற்றையே தாண்டியதில்லை. 2020 ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஐபிஎல் இறுதிக்கு வந்தது டெல்லி கேப்பிடல்ஸ்.

    கடந்த மார்ச்சில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள்போட்டியின் போது தோள்பட்டையில் காயமடைந்த ஷ்ரேயஸ் அய்யர் ஐபிஎல் 2021-ன் முதல் பாதியை முற்றிலும் ஆடவில்லை, இப்போது இரண்டாவது பாதிக்குத்தான் திரும்பியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக ஷ்ரேயஸ் அய்யர் 41 போட்டிகளில் 21 வெற்றிகளைப் பெற்றுள்ளார். ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் அய்யர் இருவருமே வேறு எந்த ஐபிஎல் அணிக்கும் ஆடியதில்லை, முதலிலிருந்தே டெல்லி அணிதான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    செப்டம்பர் 22ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. செப்டம்பர் 25-ல் ராஜஸ்தான் ராயல்ஸைச் சந்திக்கிறது. செப்டம்பர் 28ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் அக்டோபர் 2-ல் மும்பை இந்தியன்ஸ் அணியையும் சந்திக்கிறது. அக்டோபர் 4ம் தேதி தோனி தலைமை சிஎஸ்கேவைச் சந்திக்கிறது. அக்டோபர் 8ம் தேதி கோலி தலைமை ஆர்சிபி அணியை சந்திக்கின்றனர் டெல்லி கேப்பிடல்ஸ்.
    Published by:Muthukumar
    First published: