அதிரடி பேட்டிங் மட்டுமல்ல.. நடிப்பிலும் நான் தான்: அசத்திய கிளென் மேக்ஸ்வெல்

அதிரடி பேட்டிங் மட்டுமல்ல.. நடிப்பிலும் நான் தான்: அசத்திய கிளென் மேக்ஸ்வெல்

மேக்ஸ்வெல்

இந்தியன் பிரீமியர் லீக் என்றாலே கிரிக்கெட்டைத் தவிர அதைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள் சுவாரஸ்யமாக இருக்கும். இதில் கிரிக்கெட்டை விட பிக் பாஸ் போன்ற ரியாலிட்டி அம்சங்களே அதிகமாகத் தலைத்தூக்கும்.

  • Share this:
    இந்தியன் பிரீமியர் லீக் என்றாலே கிரிக்கெட்டைத் தவிர அதைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள் சுவாரஸ்யமாக இருக்கும். இதில் கிரிக்கெட்டை விட பிக் பாஸ் போன்ற ரியாலிட்டி அம்சங்களே அதிகமாகத் தலைத்தூக்கும்.

    யாரை வேண்டுமானாலும் யாரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள், யாரை வேண்டுமானாலும் தூக்கிப் போட்டு உடைப்பார்கள். டிபிக்கல் ஒரு ரியால்டி ஷோ தன்மையை ஐபிஎல் தனக்கு உருவாக்கிக் கொண்டுள்ளது.

    இந்த முறை விராட் கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வழக்கத்துக்கு விரோதமாக 3 போட்டிகளிலும் வென்று அசத்தி வருகிறது.

    அந்த அணியில் கடந்த ஆண்டு கடுமையாகச் சொதப்பிய மேக்ஸ்வெல் இந்த ஆண்டு அசத்துகிறார், அவர் 39, 59,78 என்று ரன்களைக் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

    இதனையடுத்து கோலி தலைமை பெங்களூரு அணி வீரர்கள் உற்சாகமாக உள்ளனர், ஓய்வறையை சுவாரஸ்யமாக மாற்றி வருகின்றனர். இதனடிப்படையில் கோலி, சஹல், டிவில்லியர்ஸ் தலைமையில் 3 குழுவாகப் பிரிந்து தலா 7 வீரர்கள் கொண்ட 3 அணியாக ரியால்டி ஷோ போல் நடிப்புக் கலையில் இறங்கினர்.

    ஒவ்வொரு குழுவினரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட காட்சிப்படி நடிக்க வேண்டும். சஹல் மனைவி தனஸ்ரீ உட்பட 3 பேர் நடுவராக பணியாற்றினர்.

    இதில் கொடுத்த காட்சியில் கச்சிதமாக நடித்ததோடு, அனைவரது இதயத்தையும் கவர்ந்து விட்டார் ஆஸ்திரேலிய அதிரடி மன்னன் கிளென் மேக்ஸ்வெல். இவர் சஹல் அணியில் இடம்பெற்றிருந்தார். இவருடன் சஹலும் சிறப்பாக நடித்து அசத்தினார்.

    ஒட்டுமொத்த பெங்களூரு அணி நிர்வாகம், வீரர்கள், பயிற்சியாளர்கள் என்று அனைவரும் இந்தக் கூத்தை ரசித்தனர். கேப்டன் கோலி எப்போதுமே கொஞ்சம் ஓவர் ஆக்‌ஷன் டைப் ஆதலால் தரையில் புரண்டு விழுந்து ரசித்துச் சிரித்தார். கடைசியில் முடிவு அறிவிக்கப்பட்ட போது கோலி அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால் சிறந்த நடிகராக மேக்ஸ்வெல் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன, இந்த வீடியோ பெங்களூரு அணியின் சமூக வலைத்தளப்பக்கத்தில் வைரலானது.

    ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு பின்னணி, நாடு, கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்களுக்கிடையே பிணைப்பை ஏற்படுத்தி அணியாக திரண்டு விளையாட இத்தகைய நிகழ்ச்சிகள் அவசியம் என்கிறது பெங்களூரு அணி நிர்வாகம். வீரர்களும் தங்கள் சிறுபிராயத் திறமைகளை மீண்டும் ஒருமுறை கொண்டு வர முடிகிறது. இந்த நிகழ்ச்சி முற்றிலும் புதுமையாகவும், வேடிக்கையாகவும் உற்சாகமாகவும் இருந்ததாக ஆர்சிபி அணி தெரிவித்துள்ளது.

    வரும் போட்டிகளில் தோற்று விட்டு முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்றதை வெறும் நடிப்பு என்று கூறாமல் இருந்தால் சரி!
    Published by:Muthukumar
    First published: