SRH vs PBKS IPL 2021 | மகா அறுவை ஆட்டத்தில் சன் ரைசர்ஸிடம் சரண்டர் ஆன பஞ்சாப் கிங்ஸ்- கடைசி இடத்துக்கு சரிவு

SRH vs PBKS IPL 2021 | மகா அறுவை ஆட்டத்தில் சன் ரைசர்ஸிடம் சரண்டர் ஆன பஞ்சாப் கிங்ஸ்- கடைசி இடத்துக்கு சரிவு

ஆட்ட நாயகன் ஜானி பேர்ஸ்டோ.

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் 14வது ஆட்டம் மகா அறுவையாக அமைந்தது. டி20 கிரிக்கெட்டுக்கு ஒரு எதிர்மறை விளம்பரம் என்றால் அது ஐபிஎல் கிரிக்கெட்டின் இத்தகைய தரமற்ற ஆட்டங்களே என்றால் மிகையாகாது.

  • Share this:
சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் 14வது ஆட்டம் மகா அறுவையாக அமைந்தது. டி20 கிரிக்கெட்டுக்கு ஒரு எதிர்மறை விளம்பரம் என்றால் அது ஐபிஎல் கிரிக்கெட்டின் இத்தகைய தரமற்ற ஆட்டங்களே என்றால் மிகையாகாது.

முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி பிளாஸ்டிக் பந்துகளில் வீசக்கூட லாயக்கற்ற சென்னை பிட்சில் 120 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி 121 ரன்களை விரட்ட 18.4 ஓவர்கள் எடுத்துக் கொண்டு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை பந்தாடி முதலிடம் சென்றது.

ஜானி பேர்ஸ்டோ 56 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 63 ரன்கள் எடுத்ததே ஒரே ஆறுதல். மோய்சஸ் ஹென்றிக்ஸை எதற்கு அணியில் எடுத்தனர், எதற்கு அவருக்கு ஒரு ஓவர் மட்டுமே கொடுத்தனர் என்பது ராகுலின் ஏற்கெனவே குழம்பிய கேப்டன்சியில் இன்னொரு புதிர்.

121 ரன்கள் இலக்கை எதிர்த்து கேப்டன் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ ஜோடி 10.1 ஓவர்களில் 73 ரன்கள் எடுத்தனர். பிறகு வார்னர் ஆட்டமிழக்க கேன் வில்லியம்சனின் அமைதி வெற்றியை உறுதி செய்தது.

 

முன்னதாக கலீல் அகமெட்டிடம் பஞ்சாப் கிங்ஸ் 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. ஆனால் இடது கை ஸ்பின்னர் அபிஷேக் சர்மா பிரமாதமாக வீசி 2 விக்கெட்டுகளையும் ரஷீத் கான் 4 ஓவர் 17 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். புவனேஷ்வர் 3 ஓவர் 16 ரன் 1 விக்கெட்.



சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றி பெற பஞ்சாப் கிங்ஸ் ஹாட்ரிக் தோல்வி கண்டு புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்துக்குச் சென்றது. கே.எல்.ராகுல், புவனேஷ் குமாரின் ஒன்றுமில்லாத பந்தில் ஜாதவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். மயங்க் அகர்வால் 22 பந்துகளில் 25 ரன்கள் என்று அபாயகரமாகத் திகழ்ந்தார், ஆனால் அவர் ரஷீத் கானின் கேட்சுக்கு கலீல் அகமெடிடம் மடிந்தார்.

ரஷீத் கானுக்கு எதிராக நல்ல ரெக்கார்ட் வைத்திருக்கும் கிறிஸ் கெய்ல் கூட ரஷீத் பந்தை புரிந்து கொள்ள முடியவில்லை, எந்தப்புறம் திரும்பும் என்று தெரியாமல் மட்டையை நீட்ட லெக் பிரேக் மிடில் ஸ்டம்புக்கு நேராக கால்காப்பைத் தாக்க வெளியேறினார் யுனிவர்ஸ் பாஸ். நிகோலஸ் பூரனை வார்னர் ரன் அவுட் செய்ய 4 போட்டிகளில் பூரன் 3வது டக்கை அடித்தார். கெய்ல் கூப்பிட்டு ஓடினார், பந்தை எதிர்கொள்ளாமலேயே ரன் அவுட் ஆனார் பூரன்.

47/4 என்ற நிலையில் மோய்சஸ் ஹென்றிக்ஸ் வந்தார் இருமுறை ரஷீத் கானை ஸ்வீப் ஆட முயன்று இருமுறையும் தொடையில் வாங்கினார். பிறகு கூக்ளியில் ஹென்றிக்ஸை பீட் செய்தார் ரஷீத் ஆனால் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவுக்கே அந்தப் பந்து புரியாமல் ஸ்டம்ப்பிங்கைக் கோட்டை விட்டார். அபிஷேக் சர்மா உண்மையில் சிறப்பாக வீசினார். அதற்கான பரிசாக அபாய வீரர் தீபக் ஹூடா விக்கெட்டை அவர் கைப்பற்றினார். பிறகு ஹென்றிக்ஸ் விக்கெட்டையும் அபார பந்தில் ஸ்டம்பிங் முறையில் வீழ்த்தினார் அபிஷேக்.

ஷாரூக் கான் இறங்கி இரண்டு காட்டடி அடித்த பிறகே ஹைதராபாத் 100 ரன்களைக் கடந்தது.

இலக்கை விரட்டும் போது ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்சில் நிதானம் தேவைப்பட்டது, வார்னர், பேர்ஸ்டோ அதைக் கடைப்பிடித்து பிரமாதமாக ஆடினர், ஆனால் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் ஆட்டத்தை மகா அறுவையாக்கி விட்டனர். ஃபேபியன் ஆலன் வந்தவுடன் அவரை பேர்ஸ்டோ ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். பிறகு 48 பந்துகளில் அரைசதம் கண்டார். வார்னர் 37 ரன்களில் பேபியன் ஆலன் பந்தை சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் ஆனார். கடைசியில் கேன் வில்லியம்சன், பேர்ஸ்டோ வெற்றியை உறுதி செய்தனர். சன் ரைசர்ஸ் முதல் புள்ளிகளை பெற்றது. ஆட்ட நாயகன் ஜானி பேர்ஸ்டோ.
First published: