மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தாதீர்கள்: முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு குடியிருப்புவாசிகள் கடிதம்!

வான்கடே மைதானம்

மும்பையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம் என வான்கடே மைதானத்திற்கு அருகில் வசிக்கும் குடியிருப்போர் நல சங்கத்தினர் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

  • Share this:
14வது ஐபிஎல் தொடர் நாளை (ஏப்ரல் 9) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி மே 30ம் தேதி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிதான நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நிறைவு பெற இருக்கிறது. நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத உள்ளன.

இதனிடையே நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், அமகதாபாத், டெல்லி ஆகிய 6 மைதானங்களில் நடைபெற இருக்கிறது. இருப்பினும் ஒரு புறம் கொரோனா பரவலின் 2ம் அலை வேகமாக பரவிக் கொண்டிருப்பதால் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

நாட்டிலேயே அதிகபட்ச கொரோனா பாதிப்பை மகாராஷ்டிரா சந்தித்து வரும் நிலையில் மும்பையில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 10,000ஐ கடந்து பதிவாகி வருகிறது. இந்நிலையில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு அப்பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களை பார்ப்பதற்காக மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கூட்டம் சேர்ந்துவிடும் என சுட்டிக்காட்டி அதன் மூலம் தங்கள் பகுதியில் கொரோனா பரவுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே வான்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தாமல் வேறு ஒரு மைதானத்திற்கு போட்டிகளை மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வான்கடே மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்போர், குடியிருப்பு நலசங்கங்கள் சார்பில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மும்பை மெரைன் ட்ரைவ் குடியிருப்பு நலச்சங்கத்தை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “திருமணங்கள், இறப்புகள், மத மற்றும் பிற சமூக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாநில அரசு நிர்பந்திக்கப்படுகிறது, இதற்கு மாறாக, இந்த கடினமான காலங்களில், பல நாட்கள் நீடிக்கும் இத்தகைய அளவிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அனுமதிக்கப்படுகின்றன, போட்டிகளை வசிப்பிட பகுதி இல்லாத ஒரு இடத்தில் நடத்த வேண்டும்” என்றார்.

இதனிடையே வான்கடே மைதான பணியாளர்கள் 11 பேரும், ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் ஒளிபரப்பு குழுவில் உள்ள 14 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: