IPL 2021 | ஐபிஎல் தொடரிலிருந்து வீரர்கள், அம்பயர்களை அடுத்து போட்டி நடுவர் விலகல்!

போட்டி நடுவர் மனு நய்யர்

போட்டிகளிலிருந்து வீரர்கள் விலகி வந்த நிலையில் நடுவர்களான நிதின் மேனன் மற்றும் ஆஸ்திரேலிய நடுவர் பவுல் ரிஃபுலும் விலகி உள்ளனர்.

  • Share this:
கொரோனா பரவல் அதிகரித்தையடுத்து ஐபிஎல் தொடரிலிருந்து வீரர்கள், அம்பயர்கள் என அடுத்தடுத்து விலகி வந்த நிலையில் இன்று போட்டி நடுவர் ஒருவர் பாதுகாப்பு வளையமான பயோ பபுளில் இருந்து விலகிச் சென்றுள்ளார்.

கடந்த வருடம் கொரோனா பரவலால் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில் 14வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி என குறிப்பிட்ட மைதானங்களில் மட்டும் ரசிகர்கள் இல்லாமல் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டு வருகிறது. ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு தொற்று ஏற்படாதவாறு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இந்தியாவில் கொரோனா 2வது அலை விஸ்வரூபமெடுத்துவிட்டது. ஒரு நாளை 3 லட்சம் பேருக்கும் மேல் பாதிப்புக்கு ஆளாகிவருவதுடன், 3,600க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பை சந்திக்கின்றனர்.

இது ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வீரர்களிடையே ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவில் இருந்து புறப்பட்டுச் செல்வதில் குறியாக இருக்கின்றனர். சிலர் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் வேறு வழியில்லாமல் போட்டிகளில் கலந்து கொள்ளும் சூழலில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்புமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது. இதையடுத்து ஆண்ட்ரூ டை, கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா ஆகியோர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினர்.

டெல்லி அணியின் ஆல்ரவுண்டரான அஸ்வின் கொரோனா பேரிடர் காலத்தில் எனது குடும்பத்தினருடன் இருப்பதே சிறந்தது என்று ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். போட்டிகளிலிருந்து வீரர்கள் விலகி வந்த நிலையில் நடுவர்களான நிதின் மேனன் மற்றும் ஆஸ்திரேலிய நடுவர் பவுல் ரிஃபுலும் விலகி உள்ளனர்.

இந்த நிலையில் போட்டி நடுவரான மனு நய்யர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி வீட்டுக்கு சென்றுள்ளார். அவருடைய தாயார் காலமானதால் அவர் ஐபிஎல்-ல் இருந்து விலகியுள்ளதாக தெரிகிறது. கடந்த செவ்வாயன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அவர் போட்டி நடுவராக செயல்பட்டார். அகமதாபாத் போட்டிகளுக்கு முன்னதாக அவர் மும்பை மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளுக்கு போட்டி நடுவராக பணியாறிருயிருந்தார்.
தோனியின் பெற்றோர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்: மருத்துவமனையிலிருந்து விடுவிப்பு

போட்டி நடுவர் மனு நய்யரின் தாயார் தூங்கிக் கொண்டிருந்தபோதே காலமாகியிருக்கிறார்.
Published by:Arun
First published: