‘இது வெட்கக்கேடானது’: ஐபிஎல் வீரர்களை சாடிய முன்னாள் சேர்மன் லலித் மோடி..!

‘இது வெட்கக்கேடானது’: ஐபிஎல் வீரர்களை சாடிய முன்னாள் சேர்மன் லலித் மோடி..!

லலித் மோடி

ஐபிஎல் போட்டிகளை நாட்டு நடப்பை கருதி ரத்து செய்ய வேண்டும் என ஒரு தரப்பும், அதே காரணங்களுக்காக மக்களின் இருக்கநிலையை போக்க ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று மற்றொரு தரப்பும் குரல் எழுப்பி வருகிறது.

  • Share this:
இந்த அளவுக்கு ஒரு மோசமான பேரழிவு இந்தியாவை வதைத்துக்கொண்டிருக்கும் போது ஐபிஎல் தொடரில் விளையாடு வரும் வீரர்கள் நாட்டு மக்களுக்காக ஒன்றும் செய்ய முன்வரவில்லை என்று ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கொரோனாவின் 2ம் அலை படுமோசமான அளவில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் தான் இந்தியாவின் மிகப்பிரலமான விளையாட்டுத் திருவிழாவாக வர்ணிக்கப்படும் இந்தியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாள் தோறும் லட்சக்கணக்கிலானவர்களுக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் 8 இடங்களில் மட்டும் ரசிகர்கள் இல்லாமல் பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் வைக்கப்பட்டு போட்டிகள் பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

இருப்பினும் கொரோனா அச்சம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலிய வீரர்கள் சிலரும் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இருப்பினும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் பேட் கம்மின்ஸ், ஷிகர் தவான், பாண்டியா சகோதரர்கள் உள்ளிட்ட வீரர்கள் கொரோனா பரவல் காரணமாக தங்களால் ஆன நிதியுதவியை மக்களுக்கு வழங்கியுள்ளனர். முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆக்ஸிஜன் கிடைப்பதற்காக ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக தருவதாகவும் மேலும் பலரும் தன்னை போல உதவ வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கிடையே ஐபிஎல் போட்டிகளை நாட்டு நடப்பை கருதி ரத்து செய்ய வேண்டும் என ஒரு தரப்பும், அதே காரணங்களுக்காக மக்களின் இருக்கநிலையை போக்க ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று மற்றொரு தரப்பும் குரல் எழுப்பி வருகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது வீரர்கள் மக்களுக்கு உதவாமல் பொறுப்பில்லாமல் நடந்து வருவதாக முன்னாள் ஐபிஎல் சேர்மன் லலித் மோடி சாடியுள்ளார்.

முன்னாள் பிசிசிஐ துணைத் தலைவரும், ஐபிஎல் போட்டிகள் உருவாக காரணகர்த்தாவாக இருந்தவருமான லலித் மோடி பல்வேறு மோசடி வழக்குகள் காரணமாக இந்தியாவில் இருந்து குடும்பத்துடன் வெளியேறி தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

Mid-Day எனும் இதழுக்கு லலித் மோடி அளித்துள்ள பேட்டியில், “இந்த அளவிலான ஒரு பேரழிவு இந்தியாவை வதைத்துக்கொண்டிருக்கும் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை வரலாறு ஆவணப்படுத்தும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பரிதவிக்கும் மக்களுக்காக வீரர்கள் உதவவில்லை என்பதால் விரக்தியடைந்த நான் கடந்த 3 நாட்களாக நான் ஒரு ஐபிஎல் மேட்சை கூட பார்க்கவில்லை.

ஐபிஎல் வீரர்கள் கஷ்டத்தில் உள்ள மக்களுக்கு எதுவும் உதவவில்லை, கவலையை வெளிப்படுத்தும் வகையில் வீரர்கள் தோளில் கருப்பு பட்டை கூட அணியவில்லை, மைதானத்தில் முட்டி போட்டு ஒரு வேண்டுதல் கூட இல்லை. இது வெட்கக்கேடானது, இல்லை, மிகவும் வெட்கக்கேடானது.” என லலித் மோடி குறிப்பிட்டார்.
Published by:Arun
First published: