Home /News /sports /

நீ தோற்கிறாயா நான் தோற்கட்டுமா ரக ஐபிஎல் போட்டி:  பஞ்சாப்-கொல்கத்தா அணிகளின் தரமற்ற கிரிக்கெட்

நீ தோற்கிறாயா நான் தோற்கட்டுமா ரக ஐபிஎல் போட்டி:  பஞ்சாப்-கொல்கத்தா அணிகளின் தரமற்ற கிரிக்கெட்

வெற்றி களிப்பில் மோர்கன், தினேஷ்.

வெற்றி களிப்பில் மோர்கன், தினேஷ்.

ஐபிஎல் 2021-ல் நேற்று இரவு அகமதாபாத்தில் நடைபெற்ற 21வது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 123 ரன்களுக்கு மடிய தொடர்ந்து அடிய கொல்கத்தா 126 ரன்களை போராடி எடுத்து வெற்றி பெற்றது.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
ஐபிஎல் கிரிக்கெட்டின் தரம் நாளுக்கு நாள் சரிவடைந்து வருகிறது. யுஏஇயில் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளின் தரம் நன்றாக இருந்தது. ஆனால் இந்த முறை சென்னையில் நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் அசிங்கமான பிட்ச்களினால் தரமின்மையின் உச்சத்துக்குச் சென்றது.

டாப் அணிகளான சிஎஸ்கே, ஆர்சிபி, டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆடும் போட்டிகளே தரமின்மையின் கோளாறுகளுடன் உள்ளன. மற்ற 4 அணிகளில் கொல்கத்தா, கிங்ஸ் பஞ்சாப், சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ஆகிய அணிகள் ஆடும்போது யார் தோற்பது நீங்களா நாங்களா என்ற ரகத்தில் போட்டி போடுகின்றனர்.

அதாவது ஹை ஸ்கோரிங் ஆட்டம் என்றால் தரம்,  குறைந்த ஸ்கோர் ஆட்டங்கள் என்றால் தரமற்றவை என்று கூறுவதாக மட்டித்தனமாக இதைப் புரிந்து கொள்ளக் கூடாது, ஹை ஸ்கோரிங், குறைந்த ஸ்கோரிங் போட்டிகளிலும் கிரிக்கெட் தரம் என்பது உண்டு.

டேன் கிறிஸ்டியன் போன்ற ஆஸ்திரேலிய வீரரே அன்று ஜடேஜாவுக்கு டக்கில் இருக்கும் போது கேட்சை விடுகிறார், ஹர்ஷல் படேல் கடைசி ஓவரில் வெறும் புல்டாஸ்களாக போடுகிறார். இதை உஷ் கண்டுக்காதீங்க என்பதா? அல்லது தரமின்மை என்பதா? எப்போதும் தரத்திற்கும் தரமின்மைக்குமான முரண் நிஜ முரணாக இருக்கும், ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் ‘உஷ்! கண்டுக்காதீங்க போன்ற விட்டுக்கொடுப்பு ஆட்டங்களுக்கும் தரமின்மைக்குமான முரணே பெரிதாகத் தெரிகிறது.

நேற்றைய ஆட்டத்துக்கு வருவோம். டாஸ் வென்று முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தார் கொல்கத்தா கேப்டன் மோர்கன். பவர் ப்ளேயில் 37/1 என்று பஞ்சாப் கிங்ஸை முடக்கியது கொல்கத்தா. சரி அங்கிருந்து ரன் விகிதத்தை உயர்த்துவார்கள் என்று பார்த்தால் 10 ஓவர்களில் 56/3 என்று ஆனது. ஷிவம் மாவி நன்றாக வீசினார் அதில் குறையில்லை ஆனால் ராகுல் போன்ற டெஸ்ட் கிளாஸ் வீரர் அவரை அடிக்க முடியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

அனுபவமற்ற ஷிவம் மாவியை விடுத்து பாட் கமின்ஸை அடிக்கப் போய் தேர்ட்மேனில் ஒரு சிக்ஸ் அடித்தார், ஆனால் அடுத்த பந்தே கமின்ஸ் ஏதோ ஸ்ட்ரீட் பவுலர் போல் இன்னொரு பிக் ஷாட்டுக்குப் போய் ராகுல் ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்த ஐபிஎல் தொடரில் கமின்ஸ் தன் முதல் பவர் ப்ளே விக்கெட்டை கைப்பற்றினார்.
கிறிஸ் கெய்ல் நிறைய ஆடிவிட்டார், எனவே அவருக்கு மோட்டிவேஷன் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஷிவம் மாவியிடம் முதல் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

ஷிவம் மாவி 4 ஓவர் 13 ரன் ஒரு விக்கெட். ஸ்பெல்லை முடித்தார். பிரசீத் கிருஷ்ணா என்கிற பவுலரை அனைவரும் சாத்து சாத்து என்று சாத்துகின்றனர், ஆனால் தீபக் ஹூடா உடலுக்குத் தள்ளி ஷாட் அடிக்கப் போய் அவரிடம் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறுகிறார். 13 பந்துகளில் 3 விக்கெட்டுகள் விழுந்து 42/3 என்ற நிலையில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் வந்து மேலும் முடக்கினர்.

மயங்க் அகர்வால் கொஞ்சம் தீவிரம் காட்டினார், பிரசித் கிருஷ்ணாவை ஒரு சிக்ஸ் விளாசினார். ஆனால் நரைனை அடிக்கப் போய் 34 பந்தில் 31 ரன்களுடன் மயங்க் அகர்வால் வெளியேறினார்.
உடனேயே மோய்சஸ் ஹென்றிக்ஸ் பந்து ஒன்றை தன் கோட்டை விட்டு நரைனிடம் பவுல்டு ஆனார். பந்துக்கும் மட்டைக்கும் பெரிய இடைவெளி, 75/5 என்று ஆனது.

டக் புகழ் நிகோலஸ் பூரன்  இறங்கினார். இவர் வருண் சக்ரவர்த்தியை ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி அடித்தார்.  ஆனால் உடனேயே மைதானத்துக்கு வெளியே அடிக்கும் மூளையற்ற ஸ்லாகில் வருண் சக்ரவர்த்தியின் அதே ஓவரில் பூரனின் ஸ்டம்பு விழுந்தது. கிறிஸ் ஜோர்டான் 18 பந்துகளில் 3 சிக்சர்கள் 1 பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்ததால் பஞ்சாப் கிங்ஸ் ஸ்கோர் 120-ஐக் கடந்தது.

நீ தோற்கிறாயா... இல்லை நான் தான் தோற்பேன் ரக கொல்கத்தா தொடக்கம்:

சரி பஞ்சாப் கிங்ஸ் அணிதான் தோற்பதற்கென்று ஆடுகிறது என்று பார்த்தால் கொல்கத்தா அதுக்கும் மேல் மோசமாகத் தொடங்கியது. நிதிஷ் ராணா புல்டாஸ் பந்தை நேராக எக்ஸ்ட்ரா கவரில் கேட்ச் கொடுத்தார். ஷுப்மன் கில் பேட்டிங்கை மறந்தது போல் ஆடுகிறார், ஷமி பந்தில் அக்ராஸ் த லைனில் ஆடி 9 ரன்னில் எல்.பி. ஆனார். சுனில் நரைனுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளாக வீசி பதம் பார்த்தனர், அவருக்கு மாட்ட வில்லை, மாட்டிய ஒரு பந்தும் பிஷ்னாயின் அற்புதமான கேட்சில் முடிந்தது. சரி பஞ்சாப் ஒரு அதிர்ச்சி வெற்றி பெற போகிறது என்று தோன்றியது. அதாவது கொல்கத்தா உனக்கு மட்டும்தான் தோற்கத் தெரியுமா? நாங்களும்தான் எந்த இலக்கிலும் தோற்போம் என்பது போல் இருந்தது.

திரிபாதி, மோர்கன் இருவரும் இறங்கி வந்து ஆடினர். ஆனால் பஞ்சாப் எங்கு நாம் ஜெயித்து விடுவோமோ என்று அஞ்சினர், இதனையடுத்து பிஷ்னாய் இரண்டு பவுண்டரிகளை கோட்டை விட்டார். திரிபாதி 32 பந்துகளில் 41 ரன்கள் அடித்து ஹூடா பந்தில் அவுட் ஆனார். ஆந்த்ரே ரஸல் அன்று பிரமாதமாக ஆடி 21 பந்தில் அரைசதம் கண்டு சிஎஸ்கே வயிற்றில் புளியைக் கரைத்தார், ஆனால் நேற்று சுற்ற சுற்ற மாட்டவில்லை, அல்லது பீல்டர் கைக்கு நேராகச் செல்கிறது, எப்படி ஒரு இன்னிங்ஸ் நன்றாக ஆடிவிட்டு அடுத்து இப்படி தடவ முடிகிறது என்பது உஷ்கண்டுக்காதீங்க ரகமா அல்லது உண்மையில் ஐபிஎல் தரமின்மையா என்பது பில்லியன் டாலர் கேள்வி.

கடைசியில் 9 ரன்களை 10 பந்துகளில் தடுமாறி எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

மீண்டும் பஞ்சாபுக்கு பயம் வந்து விட்டது எங்கு நம் அணி ஜெயித்து விடுமோ என்று. தினேஷ் கார்த்திக், மோர்கன் வரிசையாக பவுண்டரிகள் அடிக்க அனுமதித்து கொல்கத்தா வெற்றி பெற்றது. 123 ரன்கள் இலக்கை விரட்டும்போது 17வது ஓவரில் வெற்றிபெறுகின்றனர் கொல்கத்தா.

இரு அணிகளும் மாறி மாறி வெற்றி பெற ஆடுவதைப் பார்த்திருக்கிறோம், ஆனால் இருவருமே நீ தோற்கிறாயா, அல்லது நான் தோற்கட்டுமா என்று கேட்டுக் கேட்டு ஆடியது போல் இந்த ஆட்டம் இருந்தது.

உலகின் மற்ற லீகுகள் பாகிஸ்தான் பிரிமியர் லீக், ஆஸ்திரேலிய பிக்பாஷ் லீக், கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டிகள், இங்கிலாந்து டி20 லீக் போன்றவை உண்மையான கிரிக்கெட் தரத்துடன் ஆடப்படுகின்றன, ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் பிக் பாஸ் போன்ற ஒரு ரியால்டி ஷோ என்ற பிரமையையே ஏற்படுத்துகிறது. கிரிக்கெட் ஆட்டத்திற்குரிய நுணுக்கங்கள், தரம் ஐபிஎல் கிரிக்கெட்டில் பின்னடைவு கண்டு வருகிறது.
Published by:Muthukumar
First published:

Tags: Dinesh Karthik, IPL 2021

அடுத்த செய்தி