Home /News /sports /

IPL 2021 | DC vs KKR | கொல்கத்தாவை பந்தாடிய பிரிதிவி ஷா; ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள்: கமின்ஸைப் புறக்கணித்த மோர்கனின் மோசமான கேப்டன்சி- டெல்லி வெற்றி

IPL 2021 | DC vs KKR | கொல்கத்தாவை பந்தாடிய பிரிதிவி ஷா; ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள்: கமின்ஸைப் புறக்கணித்த மோர்கனின் மோசமான கேப்டன்சி- டெல்லி வெற்றி

பிரிதிவி ஷா

பிரிதிவி ஷா

அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் 25வது ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 154 ரன்களுக்கு மட்டுப்படுத்திய டெல்லி கேப்பிடல்ஸ் பிறகு 16.3 ஒவர்களில் 156/3 என்று இலக்கை விரட்டி அபார வெற்றியை ஈட்டியது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
இதன் மூலம் 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் டெல்லி கேப்பிடல்ஸ் 2ம் இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனான டெல்லி தொடக்க வீரர் பிரிதிவி ஷா 41 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 82 ரன்கள் விளாசியதில் கொல்கத்தா சரண்டர் ஆனது.

ப்ளே என்றவுடன் ஷிவம் மாவியின் முதல் ஓவரில் 6 பவுண்டரிகள் விளாசிய பிரிதிவி ஷா:

155 ரன்களையே இலக்காகக் கொண்டிருக்கும் போது உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் கமின்ஸை வைத்துக் கொண்டு ஷிவம் மாவியை முதல் ஓவரை வீச அழைத்தார் மோர்கன். அது பிரிதிவி ஷா-வின் பெரிய எழுச்சியாக அமைந்தது.

இதன் மூலம் ஐபிஎல் 2021-ல் டெல்லி 10 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது.

ஷிவம் மாவி முதல் பந்தையே வைடாக ஆரம்பித்தார். கார்த்திக் மட்டும் அதை டைவ் அடித்துப் பிடிக்கவில்லை எனில் பவுண்டரிதான். தப்பியது. ஆனால் அடுத்த பந்தை ஷா மாவி தலைக்கு மேல் தூக்கி முதல் பவுண்டரி விளாசினார். பிறகு மிட்விக்கெட், தரையோடு தரையாக கவர் திசையில் பவுண்டரி, மீண்டும் கவர் திசையில் ஸ்லோ புல்டாஸை ஒரு பவுண்டரி, மீண்டும் அடுத்த பந்து ஷார்ட் பிட்ச் ஆக அமைய பேக்வர்ட் பாயிண்ட்டில் தூக்கி அடித்தார் பவுண்டரி. கடைசி பந்து எக்ஸ்ட்ரா கவர் மேல் பறக்க ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் விளாசி ஷிவம் மாவி நிலையகுலையச் செய்தார் பிரிதிவி ஷா. பாவம் மாவி, கடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 4 ஒவர்களில் 13 ரன்களையே கொடுத்தவர் நேற்று பிரிதிவி ஷா கையில் சிக்கி சின்னாபின்னமாகி 25 ரன்களை முதல் ஓவரில் கொடுத்தார். இவர் வீசிய முதல் வைடு பந்தே நல்ல பந்து என்ற அளவுக்கு போய் விட்டது.

இதோடு விட்டாரா ஷா, பின்னி எடுத்து விட்டார். 18 பந்துகளில் அரைசதம் விளாசி ஐபிஎல் 2021-ன் அதிவேக அரைசதத்துக்குரியவரானார். இதில் 42 ரன்கள் பவுண்டரி சிக்சர்களில் வந்தது. வெளுத்து வாங்கி விட்டார் ஷா, 41 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து கமின்ஸ் பந்தில் அவுட் ஆகும் போது டெல்லி வெற்றிக்கு 28 பந்துகளில் 9 ரன்களே தேவைப்பட்டது.

ஷிகர் தவானும் (46), பிரிதிவி ஷாவும் சேர்ந்து 13.5 ஓவர்களில் 132 ரன்களைச் சேர்த்தனர். தவான் 47 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் செகண்ட் பிடில் தான் வாசித்தார்.

கொல்கத்தா மோசமான பேட்டிங்:

நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்கம் எப்போதும் அந்த அணியை கவிழ்த்து வருகிறது, நல்ல வலுவான மிடில் வரிசை இருந்தாலும் அதைப் பயன்படுத்த முடியாத தொடக்க சொதப்பல் நடக்கிறது. நேற்றும் நிதிஷ் ராணா, ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி ஆகிய முதல் மூன்று வீரர்கள் விரைவாக ரன்கள் எடுக்கத் திணறினர். டெல்லி கேப்பிடல்ஸ் பவுலர்கள் டைட்டாக வைத்திருந்தனர்.

ஷுப்மன் கில் 43 ரன்களை எடுத்து பரவாயில்லை என்று ஆடினார் ஆனால் இதற்கு அவர் 38 பந்துகளை எடுத்துக் கொண்டார். முதல் 3 வீரர்கள் 77 ரன்களை சேர்த்து எடுத்தனர் ஆனால் 67 பந்துகளை சாப்பிட்டனர். லலித் யாதவ் 13 ரன்களுக்கு 2 விக்கெட்.

கடைசியில் ஆந்த்ரே ரஸல் இன்னிங்ஸ்தான் கொல்கத்தா 150 ரன்களைக் கடக்க உதவியது, ஒரு கட்டத்தில் இவரும் 14 பந்துகளில் 7 ரன்களில் இருந்தார். ஆனால் அடுத்த 13 பந்துகளில் 38 ரன்கள் விளாசப்பட்டது. கடைசி 5 ஓவர்களில் 59 ரன்கள் வர ரஸல் உதவினார், ரஸல் 27 பந்துகளில் 2 நான்கு 4 ஆறுகள் என்று அசத்தி 45 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் ஒரு பவுண்டரி ஒரு சிகருடன் 14 ரன்கள் எடுக்க கமின்ஸ் 11 நாட் அவுட்.

கொல்கத்தா 154/6. டெல்லி அணியில் லலித் 3 ஓவர் 13 ரன் 2 விக்கெட். ஆவேஷ் கான் அற்புதமாக தொடர்ந்து வீசி வருகிறார். அக்சர் படேல் 4-32-2.

இலக்கை விரட்டிய போது பிரிதிவி ஷாவைப்பற்றி தெரிந்துமே கமின்ஸைக் கொண்டு வராமல் ஷிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி, வள்ளல் பிரசித் கிருஷ்ணா என்று பவுலிங்கைக் கொடுத்து 6வது ஓவர் வரை உலகின் சிறந்த பவுலர் பாட் கமின்ஸை கொண்டு வரவில்லை, மோர்கனுக்கு டி20 கேப்டன்சி வரவில்லை.

கடைசியில் டெல்லியின் ஷிகர் தவான், பிரிதிவி ஷா, ரிஷப் பந்த் ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாட் கமின்ஸ் 4 ஓவர் 24 ரன் 3 விக்கெட் என்று அபாரமாக முடித்தார், பாட்கமின்ஸை முதல் ஓவரில் கொடுத்திருந்தால் ஒருவேளை அவர் பிரிதிவி ஷாவை வெளியேற்றிருந்தால் கொல்கத்தா வெற்றிக்காக போராடியிருக்க முடியும், ஆனால் பிரிதிவி ஷா சீல் செய்து விட்டார்.
Published by:Muthukumar
First published:

Tags: Cricket, IPL 2021, Prithvi Shaw

அடுத்த செய்தி