படுமோசமான சென்னை பிட்ச்களில் ஐபிஎல் போட்டிகள் தொடரத்தான் வேண்டுமா?

படுமோசமான சென்னை பிட்ச்களில் ஐபிஎல் போட்டிகள் தொடரத்தான் வேண்டுமா?

சென்னை பிட்ச்.

சென்னை பிட்ச் படுமோசமாக உள்ளது, டேவிட் வார்னர் அன்று கூறியது அனைவரது அனுபவமும் ஆகும், தொலைக்காட்சியில் பார்க்க சென்னை பிட்ச் படு பயங்கரமாக இருப்பதாகத் தெரிவித்தது உண்மையின் பிரதிபலிப்பு.

  • Share this:
சென்னை பிட்ச் படுமோசமாக உள்ளது, டேவிட் வார்னர் அன்று கூறியது அனைவரது அனுபவமும் ஆகும், தொலைக்காட்சியில் பார்க்க சென்னை பிட்ச் படு பயங்கரமாக இருப்பதாகத் தெரிவித்தது உண்மையின் பிரதிபலிப்பு.

இந்நிலையில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸுக்கும் இடையேயான ஐபிஎல் ஆட்டம் அறுவையின் உச்சக்கட்டமாக இருந்தது, மும்பை 131 ரன்கள் மட்டுமே எடுக்க அதனை பஞ்சாப் அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தாலும் 18வது ஓவரில் எடுத்து வெற்றி பெற்றது என்பது ஐபிஎல் போட்டிகளுக்கான எதிர்மறை விளம்பரமாகப் பார்க்கப்பட வேண்டியதாகும்.

சேப்பாக்கத்தில் தொலைக்காட்சியில் காட்டப்படும் 8 பிட்ச்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலரில் உள்ளன. பார்க்கவே படுபயங்கரமாக உள்ளது, இந்தப் பிட்சில் எப்படி கிரிக்கெட் நடத்த அனுமதிக்கலாம், கிரிக்கெட்டையும் நல்ல பேட்ஸ்மென்களையும் நல்ல பவுலர்களையும் அழிக்கும் பிட்ச் அல்லவா இது?

ஐபிஎல் 2020-ல் மும்பை இந்தியன்ஸ் கடைசி 5 ஓவர்களின் ரன் விகிதம் 13.61 என்கிறது புள்ளி விவரம், அதே 2021 ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸின் டெத் ஓவர் ஸ்ட்ரைக் ரேட் ஓவருக்கு 7.48 ஆக குறைந்துள்ளது, அதே வீரர்கள்தான், அதே உத்திதான் ஆனால் பிட்ச் மட்டும்தான் வேறு.

ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸின் டெத் ஓவர் ரன் விகிதம் இவ்வளவு குறைவாக இருந்ததில்லை. இதனால் தங்களின் முதல் 5 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே மும்பை வென்றுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கடைசி 4 ஓவர்களில் 26 ரன்கள். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக கடைசி 4 ஓவர்கள்ல் 23. பெங்களூரு அணிக்கு எதிராக கடைசி 4 ஓவர்களில் மும்பை எடுத்த ரன்கள் 24 மட்டுமே. கெய்ரன் பொலார்ட், ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா போன்ற மிகப்பெரிய பவர் ஹிட்டர்கள் இருந்தும் மும்பை சொதப்புவதற்குக் காரணம் சேப்பாக்கத்தின் பிட்சேயல்லாத பிட்ச்கள்தான்.

ஆனால் பந்துகள் நின்று அரைநிமிடம் கழித்து திரும்பும்பிட்சை எங்காவது பார்த்ததுண்டா? இது மும்பைக்கு மட்டுமல்ல அனைத்து அணிகளுக்குமே பிரச்சினைதான். ஆர்சிபி அணியின் பிட்ச் நிலவரத்தைக் கடந்த ஹிட்டர்களான கிளென் மேக்ஸ்வெல், ஏ.பி.டிவில்லியர்ஸ் மட்டுமே இங்கு வெற்றிகரமாக ரன்குவிப்பு செய்ய முடிந்துள்ளது. ஹர்திக் பாண்டியாவின் இந்த ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோர் 15. நேற்று பவர் ப்ளேயில் மும்பை 21 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

2016-க்குப் பிறகு இந்த சீசன் தொடங்கும் முன் சென்னையில் மும்பை அணி 2 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளது, இதுவும் மும்பைக்குச் சிக்கல்தான். இப்போது சென்னையிலிருந்து டெல்லிக்கு போகிறது மும்பை அணி, அங்கும் இதே கதைதான்.

இத்தகைய சென்னை போன்ற அழுக்கான பிட்ச்களினால் கிரிக்கெட்டின் தரம் குறைவதோடு, நல்ல தரமான பேட்ஸ்மென்கள், பவுலர்களின் திறமையும் அழிக்கப்படுகிறது. பிசிசிஐ பரிசீலிக்குமா? அல்லது நல்ல பிட்ச்களை போட முயற்சி செய்யுமா?
Published by:Muthukumar
First published: