அடுத்த ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் வரவிருக்கின்றன. மேலும் அணிகளுக்கான புதிய மகா ஏலமும் நடைபெறும் நிலையில் ஒரு அணி எத்தனை வீரர்களை தக்க வைக்க முடியும் என்பது குறித்து பிசிசிஐ இன்னும் முடிவு செய்யவில்லை. தோனியும் சிஎஸ்கே அணியில் இருப்பாரா என்பதை திட்டவட்டமாகத் தெரிவிக்காமல் குழப்பி அடிக்கிறார்.
பிசிசிஐ தான் முடிவு செய்ய வேண்டும் என்று தோனி கூறியது, பிசிசிஐ எத்தனை வீரர்களை ஒரு அணி தக்க வைக்க முடியும் என்று சொன்னால்தான் தோனி சிஎஸ்கேயில் நீடிப்பாரா என்பது தெரியும். அதைத்தான் தோனியும் சொல்கிறார்.
சிஎஸ்கே ரசிகர்கள் மனதிலும் எழுந்துள்ள கேள்வி, அடுத்த 2022ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா என்பதுதான். தன்னுடைய பிரியாவிடை போட்டி சென்னையில்தான் நடக்க வேண்டும் என்று தோனி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். மஞ்சள் உடையில் இறங்குவேன் ஆனால் சிஎஸ்கேயில் இருப்பேனா என்று தெரியாது என்று கூறுவதைப் பார்த்தால் வேறு அணி முடிவு செய்து விட்டாரோ என்ற சந்தேகமும் எழுகிறது.
இந்நிலையில் தோனி கூறும்போது, “நான் ஏற்கெனவே உங்களிடம் தெரிவித்துவிட்டேன். அடுத்த ஆண்டு சீசனுக்கு இரு அணிகள் புதிதாக வருகின்றன. ஆதலால், சிஎஸ்கே அணிக்கு எது சிறந்ததாக இருக்கிறதோ அந்த முடிவை எடுப்போம். எந்தக் காரணத்தினாலும் நிர்வாகம் பாதிக்கப்படக்கூடாது.
தக்கவைக்கப்படும் வீரர்களில் நான் இருப்பேனா என்பது தெரியாது. வலிமையான வீரர்களைக் கொண்ட அணி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அணி நிர்வாகம் பாதிக்கப்படக்கூடாது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணிக்கு சிறப்பாகப் பங்களிப்பு செய்யக்கூடிய வலிமையான அணியை உருவாக்க வேண்டும். எவ்வளவு வீரர்களை தக்கவைக்கலாம் என்ற அனுமதியை மீறி நான் டாப் 3-4 வீரர்களில் இருக்கிறேனா என்பது முக்கியமல்ல, அணி பாதிக்காதவாறு வலுவான அணியை உருவாக்க வேண்டும் என்பதே முக்கியம்.
அதாவது அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணியை உருவாக்க வேண்டும். 2008-ல் உருவான அணி, குழு 10 ஆண்டுகளுக்கும் மேல் அருமையாக தொடர்ந்தது. இதே போல் பங்களிப்பு செய்யும் ஒரு குழுவை உருவாக்க வேண்டும் என்பதே முக்கியம்” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.