14-வது சீசனுக்கான ஐ.பி.எல். புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள்தான் இன்றைய போட்டியில் மோத உள்ளன. ஏற்கெனவே பிளே ஆஃப்-க்கு தகுதிபெற்ற இந்த இரு அணிகளுக்குமிடையிலான இன்றைய போட்டி ஏன் முக்கியமானது.
துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு ஐ.பி.எல். தொடரின் 50-வது லீக் போட்டி நடைபெற உள்ளது. இதில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கு சென்னை அணி, இரண்டாவது இடத்தில் இருக்கும் டெல்லியை எதிர்கொள்கிறது.சென்னை அணி நடப்பு தொடரின் 2-வது பாதியில் விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வியைத் தழுவியுள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் 190 ரன்களை இலக்காக நிர்ணயித்தும் அவர்களால் வெற்றி பெற முடியாமல் போனது. அணியின் தொடக்க வீரர் ருத்துராஜ் அசைக்க முடியாத பார்மில் இருக்கிறார். கடைசி பந்தில் சிக்சர் அடித்தால் மட்டுமே சதமடிக்க முடியும் என்ற நிலையிலும் அனாசியமாக பந்தை பறக்கவிட்ட அவரது ஆட்டத்தை எளிதாக யாராலும் மறக்க முடியாது.
சென்னை அணியின் பேட்டிங் வரிசையில் எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு வலுவான அணியாக சி.எஸ்.கே. உள்ளது. அதேசமயம் ராஜஸ்தானுக்கு எதிராக அவர்கள் பந்துவீச தடுமாறியது, பிராவோ இல்லாததால்தான் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டியது. நடப்பு தொடர் இறுதிகட்டத்தை எட்டிவருவதால் இக்கட்டான சூழலில் பந்துவீசும் திறனை சென்னை பவுலர்கள் வெளிக்கொண்டு வந்தே ஆக வேண்டும்.
ருதுராஜ் கெய்க்வாட்
டெல்லி அணி தனது கடைசி போட்டியில் மும்பையை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. அந்த அணியின் தவன் கடந்த சில போட்டிகளாக ரன் எடுக்க தடுமாறி வருகிறார். அணியின் அசைக்க முடியாத வீரராக ஸ்ரேயஸ் ஐயர் இருக்கிறார். மும்பைக்கு எதிரான போட்டியில் ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதும், பொறுமையாக தனது அனுபவத்தை பயன்படுத்திய விதம் அனைவரது பாராட்டையும் பெற்றது.
டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்கள்
டெல்லி அணி என்றாலே பந்துவீச்சுதான் என்று சொல்லும் அளவிற்கு வலிமையான பவுலர்கள் உள்ளனர். நோர்க்கியா, ரபடா என இரு தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களையும் மிஞ்சும் வகையில் செயல்படுகிறார் ஆவேஷ் கான். இவரது பந்துவீச்சை ருதுராஜ் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதைத் பார்க்க அனைவரும் ஆவலாக உள்ளனர். இது தவிர்த்து அஸ்வின் மற்றும் அக்ஷரின் சுழல் கூட்டணியும் எதிரணியை அச்சுறுத்த காத்திருக்கிறது.
இரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியதில் 15-ல் சென்னையும் 9-ல் டெல்லியும் வெற்றிபெற்றுள்ளன. கடைசியாக இரு அணிகளும் மோதிய போட்டியில் டெல்லி வென்ற நிலையில், அதற்கு சென்னை பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.