Home /News /sports /

IPl 2021|DC vs Punjab Kings| ரபாடா, தவான் அபாரம்: சிஎஸ்கேவை பின்னுக்குத் தள்ளி டெல்லி முதலிடம்

IPl 2021|DC vs Punjab Kings| ரபாடா, தவான் அபாரம்: சிஎஸ்கேவை பின்னுக்குத் தள்ளி டெல்லி முதலிடம்

ஷிகர் தவான், ஹெட்மையர். டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி.

ஷிகர் தவான், ஹெட்மையர். டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி.

அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் 29-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து 166/6 என்று முடிய, இலக்கை விரட்டிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 167/3 என்று வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் ஐபிஎல் அட்டவணையில் முதலிடம் பிடித்தது.

மேலும் படிக்கவும் ...
கே.எல்.ராகுல் குடல்வால் அழற்சிக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மயங்க் அகர்வால் கேப்டன் பொறுப்பேற்றார், தன் பங்குக்கு பேட்டிங்கில் வெளுத்து வாங்கி 58 பந்துகளில் 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 99 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார் சதத்தை தவற விட்டார். கடைசி 6 விக்கெட்டுகளை பஞ்சாப் கிங்ஸ் 37 ரன்களுக்கு இழந்தது. இதனையடுத்து 129/4 என்ற நிலையிலிருந்து 166க்கு சரிந்தது. ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதில் கிறிஸ் கெய்லை அருமையான ஒரு ஃப்ளோட்டிங் புல்டாஸில் பவுல்டு ஆக்கியது கெய்லுக்கே படு ஆச்சரியமாகப் போனது, கெய்ல் வெளிப்படையாக தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். அக்சர் படேல் மிகச்சிக்கனமாக வீசி 4 ஓவர் 21 ரன் 1 விக்கெட் என்று 11 டாட்பால்கள் 2 பவுண்டரிகள் மட்டுமே கொடுத்து அசத்தினார்.

பிரிதிவி ஷா (39), ஷிகர் தவான் (69) பவர் ப்ளேயிலேயே 63 ரன்கள் விளாசி பஞ்சாப் கிங்ஸ் அணியிடமிருந்து ஆட்டத்தைப் பறித்தனர். ராகுல் போன்றே கடைசி வரை நிற்க வேண்டிய நிர்பந்தத்தில் மயங்க் அகர்வால் முதல் 34 பந்துகளில் 40 ரன்களையே எடுத்தாலும் அதே ராகுல் பாணியில் கடைசி 24 பந்துகளில் 65 ரன்களை விளாசி 58 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், ஆனால் எதிர்முனை கைகொடுக்காததால் ஸ்கோரை மேலும் உயர்த்த முடியவில்லை.

யார் இந்த பிரப்ஷிம்ரன் சிங் என்று புரியவில்லை ஏதாவது ரெக்கமண்டேஷனில் தொடக்க வீரராக இறங்குகிறாரா என்பதும் புரியவில்லை. இஷாந்த் சர்மா அவருக்கு மெய்டன் ஓவர் போட்டு தன் அனாலிசிசை தேற்றிக் கொண்டார். முதல் 3 ஓவர்களில் பஞ்சாப் 15 ரன்களை மட்டுமே எடுத்தது. வந்தார் ரபாடா பவர் ப்ளேயில் முதல் முறையாக 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரப்ஷிம்ரன் மிட் ஆஃபில் கேட்ச் கொடுக்க, கிறிஸ் கெய்ல் ஸ்விங் புல்டாஸை ஒன்றும் செய்ய முடியாமல் பவுல்டு ஆனார். பவர் ப்ளேயில் 39/2 என்று பஞ்சாப் முடிந்தது.

ரபாடா பந்தில் பவுல்டு ஆன கெய்ல்.


அக்சர் படேல், லலித் யாதவ் போன்ற மெதுவான பவுலர்கள் வந்த பிறகும் கூட மயங்க் அகர்வால், நம்பர் 1 டி20 வீரர் டேவிட் மலான் அடித்து ஆடவில்லை. பவர் ப்ளே முடிந்த அடுத்த 5 ஓவர்களில் 1 பவுண்டரி மட்டுமே அடித்தனர். ரிஸ்க் எடுக்கவே இல்லை. மலான் 17 பந்துகளில் 11 ரன்களையே எடுத்தார், வேகப்பந்து கொண்டு வந்தவுடன் கொஞ்சம் கிடைத்த சுதந்திரத்தையும் ரிஷப் பந்த் மீண்டும் அக்சர் படேலை கொண்டு வந்து முடித்து வைத்தார், மலானின் லெக்ஸ்டம்ப் கீழே விழுந்தது.

தீபக் ஹூடா ரன் அவுட் ஆனார். இந்த நேரத்தில் அகர்வால் 29 பந்துகளில் 35 ரன்களையே எடுத்திருந்தார். மேலும் 64 ரன்களை கடைசியில் விளாசினார் ஆனால் அதனால் அவருக்கு சதமும் கிடைக்கவில்லை அணிக்கு வெற்றிக்கான ஸ்கோரும் கிடைக்கவில்லை. ஆனால் மயங்க் அகர்வால் ஷாட் ஒவ்வொன்றும் திகைப்பூட்டும் ஷாட்களாகும். இதை ஏன் முன்னமேயே செய்யவில்லை, அக்சர் படேல் என்ன லான்ஸ் கிப்ஸா அல்லது பிஷன் பேடியா அல்லது டெரிக் அண்டர்வுட்டா? அடித்து நொறுக்க வேண்டியதுதானே, அவர் ஒரு நேர் நேர் தேமா பவுலர். அவரை போய் 4 ஓவர் 21 ரன்கள் என்றால் அந்த அணி எப்படி வெற்றி பெறும்?

தவான், பிரிதிவி ஷா சரவெடி:

இந்த ஐபிஎல் தொடரில் பவர் ப்ளேயில் அதிக ரன்களைக் குவிப்பதில் டெல்லி கேப்பிடல்ஸ் முன்னிலை வகிக்கிறது. ரைலி மெரிடித் தன் வேகத்தின் மூலம் தவான், பிரிதிவி ஷாவை கொஞ்சம் ஆட்டிப்படைத்தார். 2 ஓவர்கள் சரியாக ஆட முடியவில்லை. பிரிதிவி ஷா பவர் ப்ளேயில் 3 சிக்சர்கள் 3 நான்குகள் விளாசினார். தவான் 4 பவுண்டரிகளை அடித்தார்.

பிரிதிவி ஷா 39 ரன்களில் அன்று கோலி, மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான் விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ப்ரீத் பிரார் பவுலிங்கில் பவுல்டு ஆனார். பிறகு தவானும், ஸ்டீவ் ஸ்மித்தும் 5 ஓவர்களில் 34 ரன்கள் சேர்த்தனர். 12 மற்றும் 14வது ஓவரில் ஷிகர் தவான் 25 ரன்களை விளாசினார், ஸ்பின்னர் ரவி பிஷ்னாய் தவானிடம் சிக்கினார். ஸ்மித்தை இழந்தாலும் கடைசி 6 ஓவர்களில் 41 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது டெல்லி.

ரிஷப் பந்த் ஒரு பவுண்டரி , முகமது ஷமியை ஸ்கொயர்லெக்கில் ஒரு சிக்ஸ் அடித்து 14 ரன்களில் வெளியேற, ஹெட்மையர் 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரி அடித்து டெல்லிக்கு சுமுகமாக வெற்றியைப் பெற்றுத்தந்தார். அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பிக்குச் சொந்தமானார் தவான், ஆனால் ஆட்ட நாயகன் விருதை மயங்க் அகர்வால் தட்டிச் சென்றார்.
Published by:Muthukumar
First published:

Tags: Cricket, IPL 2021, Prithvi Shaw, Rishabh pant, Shikhar dhawan

அடுத்த செய்தி