David Warner : நான் சரியாக ஆடவில்லை, நிறைய பந்துகளை விரயம் செய்தேன், தோல்விக்கு முழு பொறுப்பு நானே: வார்னர் மனம் திறப்பு

டேவிட் வார்னர்.

நான் மந்தமாக ஆடினேன், பீல்டர் கைகளுக்கு நேராக 15 ஷாட்களாவது சென்றிருக்கும், இந்தத் தோல்வி வீரர்களை காயப்படுத்தும் ஆனாலும் பாசிட்டிவ் ஆக இருக்கிறோம் என்று டேவிட் வார்னர் தெரிவித்தார்.

  • Share this:
    டெல்லியில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் 23வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் மந்தமாக ஆடியதால் ஹைதராபாத் அணி தோனி தலைமை சிஎஸ்கேவிடம் தோல்வி தழுவியது என்பதை ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னரே ஒப்புக் கொண்டார்.

    நல்ல பேட்டிங் பிட்சில் டாஸ் வென்ற வார்னர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார் ஆனால் 190-200 அடிக்க வேண்டிய பிட்சில் கடைசியில் கேன் வில்லியம்சன் (26) வெளுத்து வாங்கியதாலும் மணீஷ் பாண்டேயின் (61) இன்னிங்ஸினாலும் 171/3 என்ற ஸ்கோரை எட்டியது. தொடர்ந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் ஒரு விளாசல் தொடக்கத்தை ருதுராஜ் (75), டுபிளெசிஸ் (56) கொடுக்க இருவரும் 13 ஓவர்களில் ஓவருக்கு 10 ரன்கள் வீதத்தில் விளாசி ஸ்கோரை 129 ரன்களுக்கு கொண்டு செல்ல போட்டி ஒன்றுமேயில்லாமல் போய் சிஎஸ்கே 18.3 ஓவர்களில் 173/3 என்று அபார வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் டேவிட் வார்னர் 55 பந்துகள் ஆடி 57 ரன்களையே எடுத்தார், மணீஷ் பாண்டேவும் இவரும் சேர்ந்து 14 ஓவர்கள் ஆடி 2வது விக்கெட்டுக்காக 106 ரன்களையே சேர்த்தனர். சென்னை பவுலிங்கெல்லாம் ஒன்றுமில்லை, பிட்சும் வாகான பேட்டிங் பிட்ச், ஆனால் வார்னரின் டைமிங் அமையவில்லை, ஷாட்களில் பெரும்பாலும் பீல்டர்கள் கைக்கு நேராகச் சென்று வார்னரை வெறுப்பேற்றியது.

    இந்நிலையில் தோல்விக்குப் பிறகு நேற்று ஆட்டம் முடிந்தவுடன் தொலைக்காட்சி சேனலுக்கு அவர் கூறியதாவது:

    நான் பேட் செய்த விதத்துக்காக முழு பொறுப்பேற்கிறேன். நான் மெதுவாக ரன்களை எடுத்தேன், ஷாட்களை பீல்டர் கைகளில் அடித்தேன். மணீஷ் பேட்டிங் பிரமாதம். கேன் வில்லியம்சன், கேதார் ஜாதவ் மதிக்கக் கூடிய ஒரு ஸ்கோரை எட்ட உதவினர்.

    ஆனால் நான் முழுப்பொறுப்பேற்றுக் கொள்கிறேன், என் பேட்டிங் தோல்விக்கு பங்களிப்பு செய்து விட்டது. 15 நல்ல ஷாட்களை பீல்டர் கைகளில் அடித்தேன் அந்த ஷாட்கள்தான் இன்னிங்சை கட்டமைப்பவை அல்லது உடைப்பவை.

    நான் அதிக பந்துகளை சாப்பிட்டு விட்டேன். இறுதியில் போராடினோம் ஆனால் சிஎஸ்கேவின் தொடக்க வீரர்கள் நன்றாக ஆடினர். நிறைய பந்துகளை வீணடித்தோம். 170 நல்ல ஸ்கோர்தான், ஆனால் நாங்கள் பாசிட்டிவ் ஆக ஆடியிருக்க வேண்டும். நிச்சயம் இந்தத் தோல்வி காயமேற்படுத்துவதுதான் ஆனால் இதைக் கடந்து மேலே வருவோம்.

    இவ்வாறு கூறினார் வார்னர்.
    Published by:Muthukumar
    First published: