165 ரன்கள் சவாலாக இருக்கும் என நினைத்தோம், ஜடேஜா தனி ஆளாக ஆட்டத்தையே மாற்றி விட்டார்: தோனி புகழாரம்

தோனி, ஜடேஜா

ஐபிஎல் 2021-ன் 19வது ஆட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது, இதில் தோனி தலைமை சிஎஸ்கே அணி முதல் தோல்வியை கோலி தலைமை அணிக்கு பரிசாக அளித்தது.

 • Share this:
  ஐபிஎல் 2021-ன் 19வது ஆட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது, இதில் தோனி தலைமை சிஎஸ்கே அணி முதல் தோல்வியை கோலி தலைமை அணிக்கு பரிசாக அளித்தது.

  ஜடேஜா தனி மனிதராக போட்டியையே மாற்றி விட்டார், ஜடேஜாவிடம் தோற்றோம் என்று கோலி கூறியதை தோனி வழிமொழிந்தார்.

  டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த சிஎஸ்கே அணி மீண்டும் ருதுராஜ் கெய்க்வாட் (25 பந்துகளில் 33 ரன்கள்), டுபிளெசிஸ் (41 பந்தில் 50) என்று 9.1 ஓவர்களில் 74 ரன்கள் எடுத்தனர். ஆனால் 14வது ஓவரில் ஹர்ஷல் படேல், 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அடுத்தடுத்து ரெய்னா, டுபிளெசி விக்கெட்டை அவர் வீழ்த்தி டைட்டாக கொண்டு சென்றார். ராயுடு அவுட் ஆகும் போது 18வது ஓவரில் சிஎஸ்கே 142 ரன்களை எடுத்திருந்தது.

  கடைசி ஓவரில் ஜடேஜா விஸ்வரூபம் எடுத்தார், 5 சிக்சர்களுடன் 37 ரன்களை எடுத்து சாதனை புரிந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக மிக அதிகரன்கள் விளாசப்பட்ட கடைசி ஓவருக்கான சாதனையை நிகழ்த்தினார் ஜடேஜா.

  இதோடு மட்டுமல்லாமல் பவுலிங்கில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் (7), கிளென் மேக்ஸ்வெல் (22), ஏ.பி.டிவில்லியர்ஸ் (4) ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதில் மேக்ஸ்வெலுக்கும் டிவில்லியர்ஸுக்கும் வீசிய ஸ்பின் பந்துகள் டெஸ்ட் கிளாஸ் தரத்தைச் சேர்ந்தது. இதோடு மட்டுமல்லாமல் டேன் கிறிஸ்டியனை நேர் த்ரோவில் ரன் அவுட் செய்து அசத்தினார்.

  54/1 என்று இருந்த ஆர்சிபி அணி 10.1 ஓவரில் 83/6 என்று சரிந்து பிறகு 122 ரன்களை மட்டுமே எடுத்து படுதோல்வி தழுவியது.

  இந்த ஆட்டம் பற்றியும் ஆட்ட நாயகன் ‘சிங்கிள் மேன்’ ஜடேஜா பற்றியும் தோனி கூறியதாவது:

  ஜட்டு (ஜடேஜா) தன் சொந்தக் காலிலேயே நின்று ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். கடந்த சில ஆண்டுகளாக அவரது பேட்டிங்கில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களைக் கண்டு வருவதால், அவருக்கு இன்னும் கொஞ்சம் பேட்டிங்கில் கூடுதல் அவகாசமும் கூடுதல் பந்துகளை அவர் எதிர்கொள்ள வாய்ப்புகளை வழங்க முடிவெடுத்தோம்.

  இடது கை பேட்ஸ்மென்களை பவுலர்கள் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர். வெற்றியின் அளவு என்ன என்பதை கணிக்க முடியாது. எத்தனை ரன்கள், எத்தனை விக்கெட்டுகள் என்பதையெல்லாம் கட்டுப்படுத்த முடியாது.

  டாஸ் வென்றால் பேட்டிங் எடுக்கலாமா பவுலிங் எடுக்கலாமா என்று கலந்தாலோசித்தோம். இது ஒரு நல்ல பிட்ச், ஜடேஜா கூடுதல் ரன்களை அடித்துக் கொடுத்தார். 165 சவாலான ஸ்கோர் என்று கருதினேன், ஆனால் ஜடேஜாவினால் அந்த கூடுதல் 25 ரன்கள் பெரிய அளவில் உதவியது.

  சில ஆட்டங்கள் அதிக ஸ்கோர்கள் கொண்டவையாகவும் சிலது குறைந்த ஸ்கோர் போட்டிகளாகவும் உள்ளதை தவிர்க்க முடியாது. இன்று முதலில் பேட் செய்ய எடுத்த முடிவு சரியாக அமைந்தது.

  கடந்த ஆண்டை விட வித்தியாசமாக எதையும் இந்த ஆண்டு செய்யவில்லை. நானும் பிளெமிங்கும் ‘செயல்பாங்கில்’ கவனம் செலுத்துகிறோம். நெருக்கடியில் இருக்கும் போதும் நம் வழியைக் கடைப்பிடித்தால் நமக்கு மதிப்பு அதிகரிக்கும். வீரர்களுக்குத்தான் பெருமை போய்ச்சேர வேண்டும்.

  இவ்வாறு கூறினார் தோனி.
  Published by:Muthukumar
  First published: