Dhoni | ஐபிஎல் அட்டவணையில் முதலிடத்தில் இருப்பதால், தோல்வி காயப்படுத்தவில்லை: தோனி சமாதானம்

ரோகித் - தோனி

பெரிய ஹிட்டர்கள் உள்ள அணிக்கு எதிராக இலக்கை நோக்கி சரியாக நாங்கள் வீசவில்லை. திட்டங்களை சரியாக செயல்படுத்துவது அவசியம். 20வது ஓவரில் சிக்சர்களை கட்டுப்படுத்தியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்கிறார் தோனி.

  • Share this:
    சனிக்கிழமை (1-5-2021) அன்று இரவு டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 218 ரன்களைக் குவித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பொலார்டின் காட்டடியில் மண்ணைக்கவ்வியது குறித்து தோனி கூறும்போது ‘அட்டவணையில் டாப்பில் இருப்பதால் பெரிதாகக் காயப்படுத்தவில்லை’ என்று தோல்வியைப் புறந்தள்ளினார்.

    முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி டுபிளெசிஸ், மொயின் அலி அமைத்துக் கொடுத்த அருமையான இரட்டை அரைசத அடித்தளத்தில் பிற்பாடு ராயுடு புகுந்து விளையாடி, பும்ராவையே என்ன சேதி என்று கேட்டு 7 சிக்சர்களுடன் 27 பந்துகளில் 72 விளாச 218 ரன்களை எட்டியது, அதுவும் ஒரு கட்டத்தில் பொலார்ட் ஹாட்ரிக் வாய்ப்புப் பெற 116/4 என்று தடுமாறிய இடத்திலிருந்து ராயுடு எகிறினார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பொலார்ட் ஒரு படிமேலே போய் 87 ரன்களை விளாசி தள்ள அசுரத்தனமான அடியில் 219 ரன்களை விரட்டி ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய விரட்டலைச் சாதித்தது மும்பை இந்தியன்ஸ்.

    இந்நிலையில் ஆட்டம் முடிந்தவுடன் கேப்டன் கூல் தோனி கூறியதாவது:

    இது ஒரு பிரில்லியண்ட் பிட்ச், இரு அணிகளுக்குமான வித்தியாசம் திட்டங்களை செயல்படுத்துவதில் இருந்தது. இன்று நாங்கள் அதில் வெகுதொலைவில் பின் தங்கி விட்டோம்.

    பவுலர்களை குறைகூற ஒன்றுமில்லை. கேட்ச்கள்தான் உதவும். முக்கியக் கட்டங்களில் கேட்ச்களை கோட்டை விட்டோம். ஆனால் அட்டவணையில் முதலிடம் வகிப்பதால் இது பெரிதாக காயப்படுத்தவில்லை.

    பெரிய ஹிட்டர்கள் உள்ள அணிக்கு எதிராக இலக்கை நோக்கி சரியாக நாங்கள் வீசவில்லை. திட்டங்களை சரியாக செயல்படுத்துவது அவசியம். 20வது ஓவரில் சிக்சர்களை கட்டுப்படுத்தியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.

    இந்த இலக்கை தோற்றது ஏமாற்றம்தான், ஆனால் இது அணியின் ஸ்பிரிட்டை உயர்த்தும். அடி வாங்கும்போதுதான் கற்றுக் கொள்வோம். புள்ளிகள் பட்டியலில் எந்த இடத்தில் இருந்தாலும் ஒரு சமயத்தில் ஒரு ஆட்டம் என்பதாகவே எடுத்து ஆடுகிறோம். இதைச் செய்தால் போதும் புள்ளிகள் தானாக வரும்.

    இவ்வாறு கூறினார் தோனி.
    Published by:Muthukumar
    First published: