மொயீன் அலி.. டுப்ளஸிஸ் அபாரம்- முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்

பஞ்சாப் அணியை கரைசேர்க்க வந்த தமிழக வீரர் ஷாருக்கான் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளித்து 47 ரன்களை சேர்த்து அவுட்டானார்.

 • Share this:
  நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்தப்போட்டில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் 4 பந்தில் மயங்க் அகர்வால் க்ளீன் போல்டானார்.

  டெல்லிக்கு எதிரான போட்டியில் தீபக் சஹர் பந்துவீச்சின் மீது விமர்சனங்கள் எழுந்தது. கடந்த போட்டியில் நடந்த தவறை இன்றையப்போட்டியில் சஹர் திருத்திக்கொண்டார். லைன், லென்த், வெரியேஷன் ஆகியவற்றை சஹர் பந்துவீச்சில் பார்க்க முடிந்தது. சஹரின் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது. இலவச இணைப்பாக பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் ரன் அவுட்டாகி வெளியேறினார். கெய்ல் சிங்கிளுக்கு கால் செய்த போது யோசனையோடு ஓடி வந்ததால் ரன் அவுட்டானார்.

  தீபக் சஹரின் மூன்றாவது ஓவரின் 2-வது பந்தில் கிறிஸ் கெய்ல் சிக்கினார். தீபக் வீசிய ஸ்லோ பந்தை ட்ரைவ் செய்ய முற்பட்டு ஜடேஜா வசம் சிக்கினார் கெய்ல். இதனையடுத்து நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். தீபக் சஹர் ஷாட்டாக வீசிய பந்தை தூக்கியடிக்க முயன்று தாக்கூரிடம் கேட்ச் கொடுத்தார். பஞ்சாப் அணியால் பவர் ப்ளே ஓவர்களில் 4 விக்கெட் இழப்பு 26 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. . தீபக் தனது 4-வது ஓவரை வீசினார். 2-வது பந்தை மிட் ஆஃப் திசையில் தீபக் ஹூடா அடிக்க முற்பட்டு டுப்ளிசிஸ் வசம் சிக்கினார்.

  தடுமாறிக்கொண்டிருந்த பஞ்சாப் அணியை கரைசேர்க்க வந்தார் தமிழக வீரர் ஷாருக்கான். சென்னை அணியின் பந்துவீச்சை சமாளித்து ரன்களை சேர்ந்தார். இருப்பினும் பஞ்சாப் வீரர்கள் ஒரு பக்கம் விக்கெட்டை விட்டுக்கொடுத்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஷாருக்கான் 20-வது ஓவரின் முதல் பந்தில் தூக்கியடித்து ஜடேஜா வசம் சிக்கினார். அவர் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 47 ரன்களில் வெளியேறினார். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ். சென்னை அணியில் 4 ஓவரை வீசிய தீபக் சஹர் 1 மெய்டனுடன் 13 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார்.

  இதனையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டூப்பிளிஸிஸ், ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே தடுமாறிய ருதுராஜ் 16 பந்துகளை சந்தித்த நிலையில் 5 ரன்களில் தீபக் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனையடுத்து மொயின் அலி களத்துக்கு வந்தார். மொயின் அலி வந்ததில் இருந்தே அதிரடியை கையில் எடுத்தார். தவறான பந்துகளை தொடர்ந்து பவுண்டரிகளுக்கு விரட்டினார்.

  தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மொயீன் அலி பஞ்சாப் பந்துவீச்சாளர் முருகன் அஸ்வின் பந்துவீச்சில் கேட்சாகி வெளியேறினார். மொயீன் அலி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரெய்னா களமிறங்கினார்.  8 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்துவீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரெய்னா வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு இறங்கி அடிக்க ஆசைபட்டு முதல் பந்திலே டக் அவுட்டாகி வெளியேறினார். இதனையடுத்து சாம் கரண் களமிறங்கினார். 15.3 ஓவர்களுக்கு சென்னை அணி 107 ரன்கள் எடுத்து  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: