• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • விசில் போடு! கொல்கத்தாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சிஎஸ்கே

விசில் போடு! கொல்கத்தாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சிஎஸ்கே

CSK vs KKR

CSK vs KKR

ஐபிஎல் 2021 தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சிஎஸ்கே வென்றுள்ளது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதும் இறுதிப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் - டூ பிளெசிஸ் கூட்டணி இந்த முறையும் சிஎஸ்கேவிற்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். பவர் ப்ளேவில் இந்த ஜோடி விக்கெட்டை பறிகொடுக்காமல் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை திணறடித்தனர்.

    கொல்கத்தா பவர் ப்ளேவில் ஷகிப் அல் ஹசன், பெர்குசன், ஷிவம் மவி, வருண் சக்கரவர்த்தி என 4 பவுலர்களை பயன்படுத்தியது. அதாவது 2 சுழற்பந்து, 2 வேகப்பந்து என இரண்டையும் பயன்படுத்தியது. ஆனால் எதுமே சிஎஸ்கேவிடம் பலிக்கவில்லை. சிஎஸ்கே பவர் ப்ளேவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கடந்தது. சிஎஸ்கே 61 ரன்களை எடுத்திருந்த போது தனது முதல் விக்கெட்டை இழந்தது.

    ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுனில் நரைன் பந்துவீச்சில் அவுட்டானார். அடுத்து வந்த ராபின் உத்தப்பா 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டு 31 ரன்கள் விளாசிய நிலையில் சுனில் நரைன் பந்துவீச்சில் தேவையில்லாத ரிவர்ஸ்ஷிப் விளையாடி எல்பிடபுள்யு முறையில் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் டூ பிளெசிஸ் ஆரம்பம் முதலே அதிரடி காட்டி வந்தார். சிக்ஸர் விளாசி அரைசதம் கடந்த டு ப்ளெசிஸ் கொல்கத்தாவை கலங்கடித்தார்.

    நான்காவது வீரராக களமிறங்கிய மொயின் அலியும் தன் பங்கிற்கு அதிரடி காட்ட சிஎஸ்கே ரன்ரேட் கிடுகிடுவென உயர்ந்தது. இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் டூ பிளெசிஸ் 59 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் அவுட்டானார். மொயின் அலி 37 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகமல் களத்தில் இருந்தார்.

    இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடி ரன்ரேட்டை உயர்த்தினார்கள். பவர் ப்ளேவில் இந்த ஜோடி விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியும் சிஎஸ்கே நெருக்கடி கொடுத்ததால் போட்டி விறுவிறுப்பாக என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

    கொல்கத்தா 91 ரன்கள் எடுத்த போது தான் தனது முதல் விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து சர்துல் தாகூர் பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அப்போது ஆரம்பித்த சறுக்கல் கொல்கத்தா அணிக்கு இறுதி வரை தொடர்ந்தது. அதே ஓவரில் நிதிஷ் ராணா ஏதும் எடுக்காமல் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

    கொல்கத்தா அணியின் 4-வது வீரராக சுனில் நரைன் இறக்கப்பட்டார். நரைன் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் 2 ரன்னில் அவுட்டாகி நடையை கட்டினார். நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சுப்மன் கில்லும் அரைசதம் அடித்த கையோடு தீபக் சஹர் பந்துவீச்சில் அவுட்டாகினர்.

    தினேஷ் கார்த்திக் வந்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அதிரடி காட்டினார். இதனால் போட்டியில் பரபரப்பு கூடும் என்ற நினைத்த கையோடு 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். ஷகிப் அல் ஹசன் ரன் ஏதும் எடுக்காமலும் ராகுல் திரபாதி 2 ரன்னிலும் கேப்டன் பொறுப்பில் மட்டும் இருந்து வந்த மோர்கன் 4 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இதனால் கொல்கத்தா அணி 125 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து பரிதாப நிலைக்கு சென்றது. இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிஎஸ்கே அணி 4-வது முறையாக தோனி தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: