ஐபிஎல் 2021-ல் நேற்று பஞ்சாப் கிங்ஸின் மோசமான ஆட்டத்தினால் முதல் வெற்றியை பெற்றது டேவிட் வார்னர் தலைமை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சுக்கு இரையாகி 120 ரன்களுக்குச் சுருண்டது, இந்த இலக்கை 18.4 ஓவர்களில் ஹைதராபாத் அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இழந்து தன் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பேர்ஸ்டோ ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் டேவிட் வார்னர் சென்னை பிட்ச் பெரிய அதிர்ச்சியளிப்பதாக உள்ளது, என்று கடுமையாக விமர்சித்துள்ளார், ஆனால் அதே வேளையில் பிட்ச் தயாரிப்பாளர்களை கருணையுடன் ஆதரவு கலந்து பேசியுள்ளார் வார்னர்.
சென்னை பிட்ச்கள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. தொலைக்காட்சியில் பார்க்கும் போது பிட்ச்கள் கர்ணகொடூரமாக காட்சியளிப்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்நிலையில் வார்னர் கூறியதாவது:
உள்ளபடியே கூற வேண்டுமெனில் சென்னை பிட்ச் அதிர்ச்சியளிக்கிறது. அதுவும் டிவியில் பார்க்கும்போது பயங்கரமாக உள்ளது. ஆனால் பிட்ச் தயாரிப்பாளர்களை நாம் குறை கூற முடியாது, இவ்வளவு போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்தினால் அவர்கள் மட்டும் என்னதான் செய்ய முடியும்? நான் சென்னையில் எப்போது ஆடினாலும் பிட்ச் இந்த லட்சணத்தில்தான் உள்ளது. ஆனால் கடினம்தான்.
பிட்ச் இப்படி இருப்பதற்கு பிட்ச் தயாரிப்பாளர்கள் காரணமல்ல. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளும் இத்தகைய பிட்ச்களில்தான் நடந்தது. ஆஸ்திரேலியாவிலும் இதே கதைதான். எனவே ஒரே பிட்சில் பல போட்டிகளை நடத்தச் சொன்னால் பிட்ச் பராமரிப்பாளர்கள் என்னதான் செய்ய முடியும்?
ஆனாலும் இத்தகைய பிட்ச்களில் ஆடித்தான் ஆகவேண்டும், சவாலை சந்தித்துதான் ஆகவேண்டும். அவர்களுக்கும் ஓய்வு இல்லை எனவே நாம்தான் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்.
நடராஜன் பற்றி..
முழங்கால் காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளிலும் நடராஜன் ஆட மாட்டார். அவருக்கு ஸ்கேன் எடுத்தால் அவர் 7 நாட்களுக்கு உட்காரத்தான் வேண்டும். பிறகு குவாரண்டைனுக்குத் திரும்ப வேண்டும். இப்போதைக்கு அவரது உடல் தகுதியை நெருக்கமாக கண்காணித்து வருகிறோம். உடற்கூறு மருத்துவர்கள் அவர் முழங்காலை நன்றாக ஆய்வு செய்கின்றனர், ஆனால் ஒரு கட்டத்தில் அவர் ஸ்கேன் செய்து கொள்ளத்தான் வேண்டும்.
இவ்வாறு கூறினார் வார்னர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricketer natarajan, David Warner, IPL 2021