போராடிய ஹெட்மெயர், பண்ட்: இறுதி ஓவரில் ஆட்டத்தை மாற்றிய சிராஜ் - 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி

போராடிய ஹெட்மெயர், பண்ட்: இறுதி ஓவரில் ஆட்டத்தை மாற்றிய சிராஜ் - 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி

ஆர்.சி.பி வீரர்கள்

பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் டெல்லி அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

  • Share this:
    ஐ.பி.எல் தொடரின் 22-வது போட்டியில் டெல்லி அணி மற்றும் பெங்களூரு அணி மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. பெங்களூரு அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக விராட் கோலி மறும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். கோலி 12 ரன்களிலும், படிக்கல் 17 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அடுத்தடுத்து படிதர் 31 ரன்களிலும், மேக்ஸ்வெல் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய ஏ.பி.டி வில்லியர்ஸ் பெங்களூ அணியின் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். பெங்களூரு அணி 140 ரன்கள் எடுப்பதே பெரிது என்று கருதப்பட்ட நிலையில் இறுதி ஓவரில் சூறாவளி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 42 பந்துகளுக்கு 75 ரன்களைக் குவித்தார்.

    அதன்மூலம் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவன் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தவன் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். தொடர்ந்து வந்த ஸ்டீவன் ஸ்மித்தும் 4 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட், பிரித்விஷாவுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை ஆடினார். நிதானமாக ஆடிய பிரித்வி ஷா 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். மறுபுறம் பண்ட் நிதானமாக ஆடினர். மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் 22 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். 12.4 ஓவரில் 93 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து டெல்லி அணி தடுமாறியது. அடுத்து வந்த ஹெட்மயர் தடுமாறிய டெல்லி அணியை தூக்கி நிறுத்தினர். பெங்களூரு அணி வீரர்களின் பந்துவீச்சை நாலாப்புறம் சிதறடித்தார். அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஒருகட்டத்தில் டெல்லி அணி வெற்றியடையும் என்ற நிலையை நோக்கி உயர்த்தினார். 19-வது பண்ட்டும், ஹெட்மெயரும் இணைந்து 11 ரன்கள் எடுத்தனர். அதன்மூலம், 19-வது ஓவரில் 158 ரன்களை எட்டியது டெல்லி அணி. இறுதி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சிராஜ் இறுதி ஓவரை வீசினார். தொடக்க ஓவர்களில் சிராஜ் ரன்களைக் கொடுத்தாலும், நம்பிக்கையுடன் கோலி சிராஜூக்கு வாய்ப்பளித்தார்.

    அதைக் காப்பாற்றும் வகையில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார் சிராஜ். முதல் 3 பந்துகளில் 2 ரன்களைக் மட்டுமே கொடுத்தார். 4-வது பந்தில் இரண்டு ரன்களை எடுத்தார் பண்ட். கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பன்ட் இரண்டு பந்துகளில் இரண்டு பவுண்டரிகளை மட்டுமே எடுத்தார். அதன்மூலம் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம் 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் டெல்லி அணி தோல்வியடைந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெட்மெயர் 53 ரன்களிலும், ரிஷப் பண்ட் 58 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: