• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • IPL 2021 | ராஜஸ்தான் ராயல்ஸை கவிழ்த்த ‘காசு பணம் துட்டு மணீ மணீ’ கோட்பாடு

IPL 2021 | ராஜஸ்தான் ராயல்ஸை கவிழ்த்த ‘காசு பணம் துட்டு மணீ மணீ’ கோட்பாடு

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபிஎல் 2021 சீசனை ராஜஸ்தான் ராயல்ஸ் 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் முடித்தது. 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2008 ஐபிஎல் வெற்றிக்குப் பிறகே இந்த அணி பெரிய அளவில் வீரர்களிடத்தில் பணத்தை முதலீடு செய்தும் பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட அதிகம் தகுதி பெறாமல் வெளியேறியதன் பின்னணியில் பயனற்ற பணப்பந்து கோட்பாடு என்ற Moneyball Theory என்கின்றனர் சந்தை ஆய்வாளர்கள்.

 • Share this:
  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 11 வீரர்களில் 9 வீரர்கள் மீது 90% பணத்தை, முதலீட்டைச் செலவழித்துள்ளது. முன்பு 65% தான் முக்கிய வீரர்கள் மீது முதலீடு செய்தது. இதனால் பெஞ்சில் அமர்ந்திருக்கும் வீரர்களை சோதிக்க முடியவில்லை. பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாஸ் பட்லர் அணியில் இருந்திருந்தால் இங்கிலாந்து ரசிகர்களுக்கு இந்த அணி ஆர்வமூட்டக்கூடியதாக இருந்திருக்கும். எனவே இவர்களை ஏலம் எடுத்தது நல்ல முடிவுதானா என்பதை காலம்தான் சொல்லும் என்கிறார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் ஆர்தர்டன்.

  ஐபிஎல் என்பது வெறும் கிரிக்கெட் அல்ல, பெரிய வர்த்தகம், சந்தை. அணி பெரிதாக பெரிதாக பங்குச்சந்தையில் இடம்பெற்று மக்கள் மூலதனத்தை திரட்டும் அளவுக்குச் செல்லக்கூடிய பெரிய சந்தை விவகாரம்.   ‘காசு பணம் துட்டு மணீ மணீ...’

  கேப்டன்களை மாற்றினர், பயிற்சியாளர்களை மாற்றினர் ஆனாலும் தேறாமல் முடிந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 2018 தொடருக்குப் பிறகே ராஜஸ்தான் 7 அல்லது 8ம் இடத்தில்தான் முடிகிறது. 2009-2012 வரையிலான ஐபிஎல் தொடரிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சரியாக ஆடாமல் 6 அல்லது 7ம் இடங்களிலேயே மாறி மாறி இருந்தது. 2013-2015 இடையே இருமுறை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். இதில் 2014-ல் நூலிழையில் வாய்ப்பைத் தவறவிட்டு 5ம் இடத்தில் முடிந்தனர். 2016-17 சீசனில் இந்த அணி ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கி தடை செய்யப்பட்டது. இதன் 3 வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

  ஒட்டுமொத்தமாக 2008 முதல் மொத்தம் 175 போட்டிகளில் ஆடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது 84 என்றால் தோல்வியடைந்தது 86 போட்டிகளில். 2008 ஐபிஎல் பைனலில் சிஎஸ்கே அணிக்கு எதிராக 42/3 என்று தடுமாறிய போது யூசுப் பதான் என்ற விதிவிலக்கான ஒரு திறமை படைத்த வீரரின் 39 பந்து 56 ரன்களினால் அபார வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது. இந்த அணியின் இத்தகைய தோல்விகளுக்கு, பின்னடைவுகளுக்கு பணப்பந்து கோட்பாடே காரணம் என்கின்றனர்.

  பணபந்து கோட்பாடு என்றால் என்ன?

  முதன் முதலில் இது பேஸ்பால் விளையாட்டில்தான் பயன்படுத்தப்பட்டது. Moneyball: The Art of Winning an Unfair Game என்ற புத்தகத்தையே எழுதினார் மைக்கேல் லூயிஸ். இது படமாகவும் வெளிவந்தது பில்லி பீன் கேரக்டரில் பிராட் பிட் நடித்தார். உண்மையில் ஓக்லாந்து ஏ என்ற தன் அணியை அவர் இந்தக் கோட்பாட்டைப் பயன்படுத்தி மீட்டுருவாக்கம் செய்து வெற்றி கண்டார்.

  விஷயம் என்னவெனில் பிரமாதமான வீரர்கள் மீது கோடிக்கணக்கில் செலவிடும் உத்தி இல்லாமல் அவ்வளவாக கவனம் பெறாத, மற்ற அணிகள் புறக்கணித்த வீரர்களைத் தேர்வு செய்து ஆடுவது, இந்த உத்தியில் பில்லி பீன் 41 மில்லியன் டாலர்கள்தான் சம்பளமாக செலவு செய்வார் ஆனால் 20 போட்டிகளை தொடர்ந்து இவரது அணி வெற்றி பெறும். டேட்டா அனாலிசிஸ் என்ற ஒரு வகையான உத்தியைக் கொண்டு வீரர்களைத்தேர்வு செய்து எங்கு யார் மீது எப்போது முதலீடு செய்வது என்பதை பேட்டிங் ஆவரேஜ், பவுலிங் ஆவரேஜ், சீரான ஆட்டம் ஆகியவற்றை டேட்டா அனாலிசிஸ் நிறுவனங்கள் எடுத்துக் கொடுத்து விடும் அதன் அடிப்படையில் முதலீடு செய்வது பயன் தரும் என்பதுதான் பணப்பந்து கோட்பாடு எனும் மணிபால் தியரி.

  ஓக்லாந்து ஏ அணி இந்த உத்தி மூலம் சந்தையில் பெரிய அணியான யாங்கீ அணிகளையெல்லாம் முறியடித்தது. இத்தகைய பெரிய் அணிகள் 125 மில்லியன் டாலர்கள் செலவு செய்தது, ஆனால் இவர் 41 மில்லியன் டாலர்களிலேயே வெற்றியை வசப்படுத்தினார். இந்த உத்தி மூலம் 4 அமெரிக்க வெஸ்ட் சாம்பியன் பட்டங்களை வென்றது ஓக்லாந்து ஏ. டேட்டா மைனிங் என்ற ஒரு பெரிய விஷயம் கைகொடுத்தது, ஆனால் இந்த உத்தி போகப்போக ஒரு தோல்வியான உத்தியாகி விட்டது.

  காரணம் ஒரு வீரரின் கடந்த திறமைகளை வைத்து எடைபோட முடியாது என்பதே, மேலும் திடீரென ஏற்படும் காயங்கள், பார்ம் அவுட்கள், அல்லது எதிரணியினரின் குறிப்பிட்ட வீரர்களுக்கு எதிரான உத்திகள் பலனளித்தால் மணிபால் தியரி உடைந்து விடும்.

  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008க்குப் பிறகு 3 முறைதான் பிளே ஆஃப் சுற்றுக்கு வந்திருக்கிறது என்றால் அதன் வீழ்ச்சிக்குக் காரணம் இந்த பணப்பந்து கோட்பாட்டின் தோல்வியே என்கின்றனர்.

  ஆகஸ்ட் 2020-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னாள் கேப்டனும் ஆலோசகருமான இந்திய அணியின் சுவர் ராகுல் திராவிட் மிக துல்லியமாகக் கூறியது என்னவெனில், “ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு பணப்பந்து அணிதான். டாப் அணிகளுடன் 40-60% பட்ஜெட்டுடன் தான் நாங்கள் போட்டியிட முடியும். அனைவரிடத்திலும் பெரிய தரவுபெட்டகமும் அறிவும் குவிந்து கிடைக்கையில் நாங்கள் போட்டியில் இறங்குவது கடினம். மணிபால் தியரி பற்றி எழுதிய மைக்கே லூயிஸ் இந்தக் கோட்பாடு தோல்வியடையும் என்று கூறியிருக்கிறார், “கண்களும், காதுகளும் தவறு செய்வது போல் மூளையும் தவறு செய்யும்” என்றார் எனவே 2008 ஐபிஎல் தொடரில் பெற்ற வெற்றியை வைத்து பணப்பந்து கோட்பாட்டின் வெற்றியை ராஜஸ்தான் ராயல்ஸ் கூடுதலாக எடைப்போட்டு விட்டது என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

  ஆனால் பட்ஜெட்டை வைத்து வீரர்களைத் தேர்வு செய்யும் பழக்கமும் ராஜஸ்தானிடம் போய் விட்டது, ஏனெனில் இந்த அணி ரூ.12.5 கோடிக்கு பென் ஸ்டோக்ஸை ஏலம் எடுத்தது, ஜெயதேவ் உனாட்கட்டை ரூ.11.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. கிறிஸ் மோரிஸை ஐபிஎல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரூ. 16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது, ஆனால் அவர் தண்டமாக ஆடினார், இவர்கள் அனைவருமே தண்டம்தான் ஐபிஎல்-ஐ பொறுத்தவரை.

  ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தியை மாற்ற வேண்டும்:

  திரும்பத் திரும்ப கணக்கீடுகளில் தவறு செய்து வருகிற்து ராஜஸ்தான். கேப்டனாக பெரிய சாதனைகள் இல்லாத குமார் சங்கக்காராவை எப்படி அணியின் இயக்குநராக நியமிக்க முடியும்? மேலும் டெக்கான் சார்ஜர்ஸ், பஞ்சாப் அணியிலும் அவர் சோபிக்கவில்லை. சங்காவுக்கு கோச்சிங் அனுபவமும் இல்லை. மாறாக பிரமாதமான டி20 கோச் என்று பெயர் எடுத்த ஆஸ்திரேலியர் ஆண்ட்ரூ மெக்டொனால்டை ஒழித்துக் கட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

  ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆளுமையான கேப்டன் தேவை, தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் ஆகியோரை எடுத்துக் கொள்ளலாம், ஷேன் வார்னுக்குப் பிறகு ஆளுமையான கேப்டன் ராஜஸ்தானில் இல்லை. சஞ்சு சாம்சன் கேப்டன்சி ஆளே அல்ல, அவரது உடல் மொழி அதற்கு ஏற்றாற் போல் இல்லை. தன்னிச்சையாக இருந்தவரை திடீரென கேப்டனாக்கினால் சக வீரர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது என்று சேவாக் சரியாகச் சொன்னார். ரகானே ஸ்டீவ் ஸ்மித், ராகுல் திராவிட், வாட்சன் என்று எந்த ஒரு கேப்டனுமே ராஜஸ்தானுக்கு சரிப்பட்டு வரவில்லை.

  எனவே 2022 சீசனில் இந்தத் தவறுகளையெல்லாம் களைந்து புதிய பார்வையுடன் கொள்கையுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கினால்தான் மாற்றம் வரும்.  எனவே ஒரு வீரரை ஒரு அணி ஏலம் எடுக்கிறது என்றால் அதன் பின்னணியில் ஏகப்பட்ட கணக்கீடுகள், யோசனைகள், முதலீட்டு விற்பன்னர்களின் ஆலோசனைகள், புள்ளி விவரங்கள், அனைத்தும் உள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: