மும்பை முதுகெலும்பை உடைத்த அமித் மிஸ்ரா; ரோகித்தை சொல்லி சொல்லி வீழ்த்துகிறார்-மகா அறுவை ஆட்டத்தின் திருப்பு முனை

மும்பை முதுகெலும்பை உடைத்த அமித் மிஸ்ரா;  ரோகித்தை சொல்லி சொல்லி வீழ்த்துகிறார்-மகா அறுவை ஆட்டத்தின் திருப்பு முனை

ரோகித்தை சொல்லி சொல்லி வீழ்த்தும் அமித் மிஸ்ரா.

அமித் மிஸ்ரா 4 ஓவர் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள். ரோகித் சர்மா (44), இஷான் கிஷன் (26), ஹர்திக் பாண்டியா (0), பொலார்ட் (2) ஆகியோரை அமித் மிஸ்ரா சடுதியில் பெவிலியனுக்கு அனுப்பி மும்பை அதிரடி மிடில் ஆர்டர் முதுகெலும்பை உடைத்தார்.

  • Share this:
சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் 13வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீழ்த்தியது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி மந்தமான கிரிக்கெட்டுக்கு லாயக்கற்ற சென்னை பிட்சில் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. பவர் ப்ளே வரை மும்பை இந்தியன்ஸ் வலுவாக இருந்தது. ஆனால் அதன் பிறகு இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்ட லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா புகுந்தார். 67/1 என்று இருந்த மும்பை அணி கெய்ரன் பொலார்ட் எல்.பி. ஆன பிறகு 84/6 என்று தோல்வியை எதிர்கொண்டது.

காரணம் அமித் மிஸ்ரா 4 ஓவர் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள். ரோகித் சர்மா (44), இஷான் கிஷன் (26), ஹர்திக் பாண்டியா (0), பொலார்ட் (2) ஆகியோரை அமித் மிஸ்ரா சடுதியில் பெவிலியனுக்கு அனுப்பி மும்பை அதிரடி மிடில் ஆர்டர் முதுகெலும்பை உடைத்தார்.

இதனால் 137 ரன்களில் முடிந்தது மும்பை, இலக்கை விரட்டிய டெல்லி  அணி ஏதோ பழைய வெஸ்ட் இண்டீஸின் ராபர்ட்ஸ், மார்ஷல், கார்னர் வீசுவது போல் சொதப்பு சொதப்பு என்று சொதப்பி பவுண்டரிகளே அடிக்காமல் ஒன்று இரண்டு என்று மகா அறுவையாக ஆடி ஒருவழியாக கடைசி ஓவரில் 138/4 என்று வெற்றி பெற்றனர்.

அமித் மிஸ்ரா பவுலிங் செய்ய வரும் போது மும்பை அணி 5 ஓவர்களில் 45/1 என்று இருந்தது. முதல் 8 பந்துகளில் 3 பவுண்டரிகளை கொடுத்தார், அதுவும் லெக் திசையில் இரண்டு பந்துகள் 1 பவுண்டரி வைடாக வீசியதால் விளைந்தது.

இந்த போட்டிக்கு முன்பாக ரோகித் சர்மாவை மட்டும் ஐபிஎல் தொடர்களில் 6 முறை வீழ்த்தியுள்ளார் லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா, அதாவது அமித் மிஸ்ராவின் செல்லப்பிள்ளையாக திகழ்கிறார் ரோகித் சர்மா. நேற்றும் 44 ரன்களில் ரோகித் வலுவாகச் சென்று கொண்டிருந்த போது சற்றே வைடாக ரோகித் ரீச் செய்ய முடியாத லெந்தில் வீச ரோகித் ஷாட் ஆட லாங் ஆனில் ஸ்மித் கையில் போய் உட்கார்ந்தது. 7வது முறையாக ரோகித், அமித் மிஸ்ராவிடம் வீழ்ந்தார்.

அதே போல் அமித் மிஸ்ரா தன் அனுபவத்தைக் காட்டியது கெய்ரன் பொலார்டை வீழ்த்திய விதமாகும். ஸ்பின் பந்துகளுக்கு பின்னால் சென்று ஆடும் வழக்கமுடையவர் என்பதை குறிப்பாக புரிந்து கொண்ட அமித் மிஸ்ரா, அருமையான லெந்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் செய்து கூக்ளியாக மாற்ற பந்து சரேலென உள்ளே வர பின்னால் சென்று கட் ஆட முயன்ற பொலார்ட் எல்.பி.ஆகி வெளியேறினார்.

அதே போல் ஹர்திக் பாண்டியாவுக்கு மிக மெதுவாக ஒரு லெக் ஸ்பின் பந்தை வீச பாண்டியாவின் ரீச்சில் இல்லை, ஆனால் அவர் தன் பலத்தை பயன்படுத்தி சிக்சருக்குத் தூக்கி விடலாம் என்று ஷாட் ஆட லாங் ஆனில் ஸ்மித் கையில் போய் உட்கார்ந்தது. இஷான் கிஷன் நன்றாக ஆடி வந்த நிலையில் அமித் மிஸ்ரா மீண்டும் ஒரு அருமையான யார்க்கர் லெந்த் பந்தை வீச இஷான் கிஷன் வாரிக்கொண்டு அடிக்கப் போய் பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார். அமித் மிஸ்ரா 4வது விக்கெட்டைக் கைப்பற்றினார்.

மும்பை இந்தியனஸ் அணி 45/1 என்ற நிலையிலிருந்து 84/6 என்று உடைந்து எழும்ப முடியாமல் தோற்றது.  தன் பந்துகளை அடித்தாலும் நிதானத்துடன் யோசித்து வீசி வெற்றி பெற முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் அமித் மிஸ்ரா.  இதற்காகத்தான் இவருக்கு ஆட்ட நாயகன் விருது நேற்று வழங்கப்பட்டது.

சஹலை விடவும் சிறந்த பவுலர், கடைசியில் பேட்டிங்கும் ஆடக்கூடியவர், அவரை ஏன் உலகக்கோப்பை டி20-க்குப் பரிசீலிக்கக் கூடாது?- அணி நிர்வாகம் சிந்திக்குமா?
Published by:Muthukumar
First published: