ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போகும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் குவாலிஃபையர் போட்டி இன்று நடைபெற உள்ளது.
துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு நடைபெறும் இந்தப் போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்துள்ள மும்பை - டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. மும்பை அணியை பொறுத்தவரை நடப்பு தொடரின் மிகவும் பலம் வாய்ந்த அணியாக உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் குறிப்பிட்ட வீரரை நம்பியிருக்காமல், ஒரு அணியாக அனைவருமே தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
கேப்டன் ரோஹித் சர்மா காயத்தில் இருந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது மும்பை அணிக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேகப்பந்துவீச்சில் பும்ரா, பவுல்ட் ஆகியோர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். இஷான் கிஷன் சிறப்பாக பார்மில் உள்ளதால் டி காக் உடன் அவரை தொடக்க வீரராக களமிறக்கினால் பவர் பிளேயில் நிச்சயம் பெரிய ஸ்கோரை பதிவு செய்யலாம்.
டெல்லி அணியை பொறுத்தவரை போராடி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அணி வீரர்கள் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளிலும் தங்களது முழுமையான திறனை வெளிப்படுத்தவில்லை. அதேசமயம் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லியின் பிளேயிங் லெவன் சிறப்பாக அமைந்ததால், இன்றைய போட்டியிலும் அதே பதினோறு பேர் விளையாட வாய்ப்புள்ளது. இரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியதில் மும்பை 14 போட்டிகளிலும், டெல்லி 12 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்